articles

குடிமக்களின் வாக்குகளை ‘சாவடி’க்கும் சதியா - மதுரை சொக்கன்

குடிமக்களின் வாக்குகளை ‘சாவடி’க்கும் சதியா

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பாஜக, ஐக்கிய ஜனதா தள கூட்டணியில் தேர்தல் ஆணையமும் இணைந்து கொண்டதால் கிடைத்த வெற்றி இது என பலரும் விமர்சித்து வருகின்றனர். 

இந்நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாவது கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி களில் நடைபெறும் குளறுபடிகளும், குழப்பங் களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. 

திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்கப்படும் எஸ்ஐஆர் பணியை நிறுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.  எஸ்ஐஆர் பணி களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றத்தில் கேரள மாநில அரசு வழக்கு தொடுத்துள்ளது. கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணியும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால் பணியாளர் பற்றாக்குறை ஏற்படுவதை கேரள அரசு சுட்டிக்காட்டியுள்ளது. 

இந்த நிலையில் எஸ்ஐஆரை ஆதரித்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த ஒரே கரகாட்ட கோஷ்டி அதிமுக மட்டுமே. ஆனால் உச்சநீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் அதிமுக, தவெக போன்ற கட்சிகள் பங்கேற்கவில்லை. 

ஆனால் இப்போது எஸ்ஐஆர் பணியில் பல்வேறு குறைபாடுகளும், குளறுபடிகளும் இருப்பதை அதிமுகவே ஒப்புக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜெயக்குமார், எஸ்ஐஆரை அதிமுக ஆதரித்தது. ஆனால் இன்று அந்த எண்ணத்தை முற்றிலும் சிதைக்கும் வகையில் சில தலையீடுகள் உள்ளன. இதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

மேலும் அவர் கூறுகையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் வீடு  வீடாகச் செல்லாமல் ஒரே இடத்தில் விண்ணப்பங் களை விநியோகம் செய்கிறார்கள். மூன்றாம் வகுப்பு வரை படித்த நபரை பிஎல்ஓ-வாக தேர்தல் ஆணையம் போட்டுள்ளது. இவருக்கு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி என்ன தெரியும். விண்ணப்பம் கொடுக்கப் போகும்போது 2002 வாக்காளர் பட்டியலையும் கொண்டு செல்ல வேண்டும்.  அந்த நபருக்கு எப்படி நிரப்புவது என்று வாக்காளர்கள் கேட்டால் சொல்லித் தர வேண்டும். சென்னை முழுவதும் குளறுபடி நடக்கிறது என்று ஒப்புக்கொண்டுள்ளார். 

ஆனாலும் எஸ்ஐஆரை ஆதரித்த பாவத்திற்காக தமிழ்நாட்டில் இந்தப் பணி சிறப்பாக நடைபெறுகிறது. சென்னையில் மட்டும்தான் குளறுபடி என்று ஜெயக்குமார் சமாளித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் விசாரித்தால் இது மாநில அளவிலான குளறுபடி என்பதை புரிந்து கொள்ள முடியும். இந்தப் பணிக்கு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை நியமிப்பது தேர்தல் ஆணையம்தான். எனவே இந்த குளறுபடிகளுக்கு தேர்தல் ஆணை யம்தான் பொறுப்பேற்க வேண்டும். 

எஸ்ஐஆர் குறித்து நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணிப்பதாக நடிகர் விஜயின் தவெக அறிவித்தது. ஆனால் மறுபுறத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தங்கள் கட்சியும் எதிர்ப்பதாக விஜய் அறிவித்தார். பீகாரில் இது அறிவிக்கப்பட்ட போதே தமிழக வெற்றிக் கழகம் எதிர்த்ததாகவும் பீகாரில் சிறுபான்மையோர் வாக்குகள் பறிக்கப்பட்டது என்றும் கூறினார். தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 36லட்சம் வாக்காளர்களை 30 நாளில் எப்படி சரிபார்க்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். எஸ்ஐஆரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் அந்தக் கட்சி கூறியுள்ளது. மறுபுறத்தில் எஸ்ஐஆர் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போவதாகவும் அந்தக் கட்சி கூறியுள்ளது. வழக்கம் போல இந்தப் பிரச்சனையிலும் தவெக ஒரு குழப்பமான நிலைபாட்டையே எடுத்துள்ளது. 

எஸ்ஐஆரை எதிர்ப்பதாக அறிவித்துவிட்டு எதற்காக விழிப்புணர்வு பிரச்சாரம் என்கிற கேள்வி எழாதா?

இதுஒருபுறமிருக்க, பாஜகவினர் தேர்தல் ஆணையத்தின் ஒலிபெருக்கிகளாகவே மாறி எஸ்ஐஆருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைக் கண்டு திமுக பதறுவது ஏன் என்று  இராமநாதபுரத்தில் பேட்டியளித்த போது கூறியுள்ளார்.

அந்தக் கட்சியோடு கூட்டணி வைத்துள்ள தாகக் கருதப்படும் அதிமுக ஏன் பதறுகிறது என்பதற்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும்.  பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, எஸ்ஐஆர் படிவத்தில் நிறைய  சந்தேகங்கள் இருக்கின்றன. அவ்வாறு சந்தே கங்கள் இருப்பதை தேர்தல் அதிகாரிகள்தான் சரி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இந்தப் பணியில் ஏராளமான ஐயப்பாடுகள் இருப்பதை அண்ணாமலையால் கூட மறைக்கமுடியவில்லை.

அவர் கூறும் சந்தேகங்கள் ஒருபுறமிருக்க, தேர்தல் ஆணையம் பாஜகவின் விருப்பத்திற் கேற்பவே செயல்படுகிறது என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று. படிவங்கள் விநியோகிப்பதில் ஏராளமான கேள்விகள் எழும் நிலையில், தேர்தல் ஆணையமோ இரண்டாம் கட்ட வாக்கா ளர் பட்டியல் கணக்கெடுப்பு பணியில் இதுவரை வாக்குச்சாவடி வாரியாக வியாழனன்று ஒரே நாளில் 5 கோடிக்கு அதிகமான படிவங்கள் விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் இதுவரை இந்தக் கணக்கெடுப்பு நடைபெறும் மாநி லங்களில் 42 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ள தாகவும் கூறியுள்ளது.  அதாவது 12 மாநி லங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 82.71  சதவீதத்தினருக்கு படிவம் வழங்கப்பட்டு விட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் கூறி யுள்ளது. இன்னும் சில நாட்களில் அவர்களே கணக்குதெரியாமல் ஆயிரம் கோடி பேருக்கு வழங்கிவிட்டதாகக் கூட கூறக்கூடும். வாக்குச்சாவடி வாரியாக இந்தப் பணி நடைபெறு கிறது என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால் வாக்குகளை சாவடிப்பதற்காகவே இந்தப் பணி துவக்கப்பட்டுள்ளதோ என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.