அரசியல்படுத்தப்பட்ட கேரளம்!
சோவியத் புரட்சி மற்றும் சோசலிசக் கருத்துக்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் சமூகச் சீர்திருத்தவாதிகளின் படைப்புகள் மூலம் கேரளாவில் பிரபலமடைந்தன. இப்படிப்பட்ட போராட்ட வாழ்வியல் சூழல்தான் கவர்ச்சிக்கு ஆட்படாத சமூக உளவியலைக் கேரளத்தில் கட்டமைத்தது.
கேரள மக்கள் அரசியல்படுத்தப்பட்டவர்கள். தங்களுக்கான அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக அவர்களே உள்ளனர். இங்கு சினிமா கவர்ச்சியைப் பயன்படுத்தி அரசியல் செய்ய நினைத்தால் அது எடுபடாது. திரைக்கலை ஞர்களைப் பொது அரங்கில் பார்க்கும்போது மகிழ்ச்சியில் கைதட்டுவது, பாராட்டுவதுடன் சரி; மற்றபடி, கதாநாயக கவர்ச்சியை மட்டும் மூல தனமாகக் கொண்ட, அரசியல் கள அனுபவ மற்றவர்களின் மேடைப் பேச்சுக்களும், போலிப் புரட்சிகளும் கேரள இளைஞர்களிடம் பலிக்காது. மலையாள சினிமாவின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் பிரேம் நசீர் கூட முதலமைச்சர் அலு வலகத்தைக் குறிவைக்காததற்கு இதுவே காரணம். இன்றைய சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் கேரள மக்களின் உணர்வு களிலும், குடும்பங்களிலும் கலந்தவர்கள். ஆனால், அவர்கள் பிரச்சனை சார்ந்த அரசியல் கருத்துக் களை ஆதரிப்பதோடு சரி. முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றும் அல்லது தாரை வார்க்கும் கற்பனைகள் கேரளத்தில் கனவிலும் நடக்காது.
இந்திய மாநிலங்களில் எங்கும் காண முடியாத இப்படிப்பட்ட கேரளத்தின் சமூக உளவியலுக்கு அடிப்படைக் காரணம் என்ன? சந்தேகமே இல்லா மல், அது கேரள கம்யூனிஸ்ட்டுகளின் நீண்ட நெடிய போராட்டங்களின் வரலாற்றுப் பெருங்கொடைதான். பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கு எதிராகவும், திருவிதாங்கூர்-கொச்சி சமஸ்தானங்கள் மற்றும் பிரிட்டிஷ் ஆளுகைக்குட்பட்ட மலபார் வடபகுதியில் நிலவி வந்த நிலப்பிரபுத்துவ, சாதிய சனாதனக் கொடுமைகளுக்கெதிராகவும் நடத்தப்பட்ட நீண்ட நெடிய போராட்டங்களே கேரள சமூகத்தின் முற்போக்கான உளவியலைக் கட்டமைத்தன. இன்றளவும் இது நீடித்திருப்பதற்குக் காரணம், கடந்த காலப் போராட்டங்களின் தியாக வரலாற்றை கேரள இடதுசாரிகள் தலைமுறை தலைமுறையாக இளைஞர்களிடம் கொண்டு செல்வதுதான்.
வரலாறு கட்டமைத்த முற்போக்கு அடித்தளம்
கம்யூனிஸ்ட் கட்சி உருவாகாத 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முதல் இரண்டு பத்தாண்டுகளிலும் பின்னர் கம்யூ னிஸ்ட் கட்சி உதயமானாலும் கொடும் அடக்கு முறை ஏவப்பட்ட 10 ஆண்டுகளிலும் நடந்த போராட்டங்களை முன்நின்று நடத்திய கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி சகாக்கள் இந்திய தேசிய காங்கிரஸிலும், பின்னர் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி யிலும் தங்களை இணைத்துக் கொண்டிருந்தனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டத்தை யும், திருவாங்கூர்-கொச்சி சமஸ்தானங்களுக்கு எதிரான போராட்டத்தையும் ஒருசேர நடத்தினர். 1939 டிசம்பரில் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானபோது, பி. கிருஷ்ண பிள்ளை, கே. தாமோதரன், இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், ஏ.கே. கோபாலன் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் உருவானார்கள். சமஸ்தானங்களில் நம்பூதிரி பிராமணர்களின் சாதியக் கொடுமைகள் உச்சத்தில் இருந்தன. புலையர் போன்ற சாதியினர் கடுமையான அடக்குமுறைகளை அனுபவித்தனர். இந்து சனாதன அடிப்படையிலான சாதிய ஒடுக்குமுறைக்குத் திருவிதாங்கூர் மற்றும் கொச்சி சமஸ்தானங்கள் ஆதரவாக இருந்தன.
சமூகச் சீர்திருத்த இயக்கங்களும் கம்யூனிஸ்ட்டுகளும்
19ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான நவீன சிந்தனைகள் சமூக சீர்திருத்த இயக்கங்களைத் தொடங்குவதற்கு அடித்தளமிட்டன. சட்டம்பி சுவாமிகள், ஸ்ரீ நாராயண குரு, அய்யன்காளி, வாக்பதானந்தா போன்றவர்களால் சாதி பாகுபாடு மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான இயக்கங்கள் கேரளாவில் வடிவம் பெற்றன.
1924 வைக்கம் சத்தியாகிரகம் மிக முக்கிய இடத்தைப் பெற்றது. வைக்கம் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட சாதியினர் நுழைவதையும், சுற்றியுள்ள பொதுச்சாலைகளில் நடப்பதையும் திருவிதாங்கூர் சமஸ்தானம் தடை செய்திருந்தது. 30.3.1924 முதல் 23.11.1925 வரை நடந்த இப்போராட்டத்தில் சமூக சீர்திருத்தவாதி டி. கே. மாதவன், காங்கிரஸ் தலைவர்கள் மதுரை ஜார்ஜ் ஜோசப், கே. கேளப்பன், மன்னத்து பத்மநாபன் மற்றும் தந்தை பெரியார் ஆகியோரின் பங்கு முதன்மையானது. வைக்கம் போராட்டத்தின் பன்முக நல்லிணக்கம் நாடு முழுவதும் புதிய உத்வேகத்தை உருவாக்கியது.
வைக்கம் போராட்டத்தைத் தொடர்ந்து, 1932இல் குருவாயூர் ஆலய நுழைவுப் போராட்டமும் நடை பெற்றது. மன்னத்து பத்மநாபன் தலைவராகவும், கேளப்பன் செயலாளராகவும், ஏ.கே. கோபாலன், டி. சுப்ரமணியன் திருமுப்பில் ஆகியோர் கேப்டன்களாகவும் அமைந்த போராட்டக் குழுவால் இது வெற்றியடைந்தது. பி. கிருஷ்ண பிள்ளை, ஏ.கே. கோபாலன், இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் போன்றோர் பங்கேற்றது, துவக்க கேரள சமூக சீர்திருத்த இயக்கங்களில் கம்யூனிஸ்ட்டுகள் தீவிரமாக ஈடுபட்டிருந்த ஒரு காலகட்டத்தைப் பிரதிபலித்தது.
வர்க்கப் போராட்டங்களின் ஆழமான தாக்கம்
கேரள கம்யூனிஸ்ட்டுகள் தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள் ஆகியோரை அணிதிரட்ட அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் மற்றும் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு போன்ற வெகுஜன அமைப்புகளை உருவாக்கினர். இவர்கள் புதிய மனிதர்களை வடிவமைக்கும் புதுமையான சிந்தனையை கேரள மக்கள் மத்தியிலும் பரப்பினர்.
அனைத்துப் போராட்டங்களுக்கும் மார்க்சிய - லெனினிய சிந்தனை உந்து சக்தியாக இருந்தது. செங்கொடி இயக்கம்தான் தீர்மானிக்கும் சக்தியாக மாறியது. இதற்குச் சான்றாக 1946ஆம் ஆண்டின் புன்னப்புரா-வயலார் போராட்டம் திகழ்கிறது. இது எதேச்சதிகார திருவிதாங்கூர் முடியாட்சிக்கு எதிராகத் தொழிலாளர்களின் ஆயுதமேந்திய போராட்டமாகும். நிலப்பிரபுத்துவ சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை கம்யூனிஸ்ட் கட்சி அணிதிரட்டியது. இப்போராட்டத்தை ஒடுக்க சமஸ்தான போலீஸ் ராணுவத்தால் இயந்திரத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன. கம்யூனிஸ்ட் ஊழியர்கள் நாட்டுக் கருவிகளை, குறிப்பாக வாரிக்குண்டம் எனப்படும் கூர்செதுக்கிய மூங்கில் மற்றும் மர ஈட்டிகளைப் பயன்படுத்தினர். நூற்றுக் கணக்கான சகாக்கள் வீரமரணம் அடைந்தனர். இவர்களின் தியாகங்கள் வீண்போகவில்லை; போராட்டம் மகத்தான வெற்றியைப் பெற்றது. இந்தப் போராட்டமே திருவிதாங்கூர்-கொச்சி மாநில உருவாக்கத்திற்கும், பின்னர் 1956இல் மொழிவாரியான கேரளா மாநிலம் உருவாகவும் ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்தது.
சோவியத் புரட்சி மற்றும் சோசலிசக் கருத்துக்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் சமூகச் சீர்திருத்தவாதிகளின் படைப்புகள் மூலம் கேரளாவில் பிரபலமடைந்தன. இப்படிப்பட்ட போராட்ட வாழ்வியல் சூழல்தான் கவர்ச்சிக்கு ஆட்படாத சமூக உளவியலைக் கேரளத்தில் கட்டமைத்தது. இன்றளவும் கண்ணியமான, அறிவியல்ப்பூர்வ வாழ்வியல் சூழல் கேரளத்தில் தொடர்கிறது.
தமிழ்நாட்டின் அரசியல் பிம்பச் சிதைவு
தமிழ்நாட்டிலும் அத்தகைய சமூக சீர்திருத்த, முற்போக்கு, கம்யூனிச, திராவிட இயக்கப் பாரம்பரியம் உண்டு. அத்தகைய தமிழ்நாட்டில் திரைக்கலைஞர்கள் சீமான், விஜய் ஆகியோரின் அரசியல் பிரவேசத்திற்கு சினிமாதான் நுழைவு வாயிலாக இருந்தது. இவர்களின் நடவடிக்கைகள் பாஜகவின் மதவெறி அரசியல் மற்றும் பிரிவினை வாதத்தை எதிர்த்து கூர்மையாகி வரும் தமிழக அர சியல் வளர்ச்சியைச் சிதைப்பவையாகமாறியுள்ளன.
கேரளத்துடன் ஒப்பிட்டால், தமிழ்நாடு மிகப் பெரிய அளவு ஊடகச் சந்தையைக் கொண்டுள்ளது. ஆனால், ஆழமாகத் தலைப்புகளை விவாதிக்கும் முறையிலும், பார்வையாளர்களை அறிவுபூர்வமாக உயர்த்தும் வகையிலும் கேரள ஊடகங்களின் குழு விவாதங்கள் உயர் தரத்தில் உள்ளன. அதேசமயம், தமிழகத்தின் பெரும்பாலான ஊடக விவாதங்கள் அதிமுக, பாஜக, சீமான், நடிகர் விஜய் பற்றிய லாவணி அரசியலின் நிகழ்ச்சி நிரலாகவே உள்ளன. இவை இளைஞர்களின் அரசியல் விழிப்புணர்வை உயர்த்துவதற்குப் பதிலாக, மிக முக்கிய தேசியப் பிரச்சனைகளிலிருந்து மக்களை விலக்கி வைக்கும் வேலையைச் செய்கின்றன.
கம்யூனிஸ்ட் இயக்கங்களின் தேச விடுதலைப் போராட்டங்கள், வர்க்கப் போராட்டங்கள், தந்தை பெரியாரின் பகுத்தறிவு சமூக சீர்திருத்த இயக்கங்களைக் கொண்ட பூமி தமிழ்நாடு. இங்கு மட்டும் ஏன் இந்த நிலை? மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்கள் தீவிரத்தன்மையுடன் ஆய்வுகள் மேற்கொள்வதுடன், எதிர்காலத் தலைமுறையினரை வரலாற்று ரீதியாக நெறிப்படுத்தும் இயக்கங்களுக்கும் திட்டமிடுவது, தமிழ்நாட்டின் அவசரத் தேவையாக மாறியுள்ளது.
