articles

img

தாயகம் அல்லது மரணம் கியூபப் புரட்சியின் உறுதியும் உலகளாவிய தோழமையும்! - உ.வாசுகி

தாயகம் அல்லது மரணம்   கியூபப் புரட்சியின் உறுதியும் உலகளாவிய தோழமையும்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர்  உ. வாசுகி அவர்கள், 2025 அக்டோபர் 15 முதல் 17 வரை கியூபாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் பங்கேற்றார். மாநாட்டையொட்டி நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட அவர், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இடையறாத தடைகளுக்கு மத்தியிலும், கியூபா பேணிவரும் சோசலிச உறுதியையும், அதற்கான உலகளாவிய ஆதரவையும் பற்றி வழங்கிய சிறப்புக் குறிப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. 

கியூபாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டின் ஒரு பகுதியாக, கியூப நட்புறவு அமைப்பின் (ICAP - Cuban Institute of Friendship with the Peoples) சந்திப்பு நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் முதன்மை துணைத் தலைவர் நியோமி ரபாசா பெர்னாண்டஸ், ஆசியப் பிராந்திய இயக்குநர் அலிசியா கொரெடேரா மொராலஸ் மற்றும் இந்தியப் பகுதிக்கான அலுவலர் ஆகியோருடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. 

அமைப்பின் நோக்கம்: தொலை நோக்குப் பார்வையுடன் தோழர் பிடல் காஸ்ட்ரோ இந்த அமைப்பை 1960-ஆம் ஆண்டிலேயே ஆரம்பித்தார் என்று அவர்கள் விளக்கினர். அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கு மத்தியில், கியூபப் புரட்சியின் நோக்கங்கள் மற்றும் அதன் மூலம் ஏற்பட்ட சமூக மாற்றங்களை கியூபாவுக்கு வெளியே உள்ள மக்களுக்கு எடுத்துச் சொல்லி ஆதரவு திரட்டுவதற்காக இது உருவாக்கப்பட்டது. தற்போது இந்த அமைப்பு 152 நாடுகளில் 1800-க்கும் மேற்பட்ட ஒருமைப்பாட்டுக் குழுக்களுடன் தொடர்பில் உள்ளது. டிசம்பர் 30 இதன் நிறுவன தினம் என்றும், இவ்வருட விழாவை பிடல் காஸ்ட்ரோவின் பிறந்தநாள் நூற்றாண்டுடன் இணைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினர். சிபிஎம் அளித்த உதவிகளை நினைவுகூர்ந்த அவர்கள், கியூப ஒருமைப்பாடு குறித்து இந்தியாவில் இடதுசாரிகள் வகிக்கும் பங்கிற்கு திருப்தி தெரிவித்தனர். 

பொருளாதாரத் தடைகள், கோரிக்கைகள் மற்றும் ஒருமைப்பாடு 

“என்ன உதவிகளை எதிர்பார்க்கிறீ ர்கள்?” என்று நாம் கேட்டபோது, பயங்கர வாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டியலில், கியூபாவை அமெரிக்கா வேண்டுமென்றே வைத்துள்ளதைக் குறிப்பிட்டு, அதிலிருந்து கியூபாவை விடுவிக்க இன்னும் பலமான குரலை சர்வதேச அளவில் எழுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர். பொருளாதார மற்றும் பிற உதவிகளும் தேவைப்படுவதாகத் தெரிவித்தனர். 

ஐ.நா. ஆதரவு: ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் கியூபாவிற்கு ஆதரவாக வரும் தீர்மானத்தை ஏற்கும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு பற்றி மகிழ்ச்சி தெரிவித்தனர். அமல்படுத்தும் கட்டாயம் இல்லாத (non-binding) தீர்மானம் என்றாலும், அதைக் கியூப ஆதரவின் அடையாளமாகவும், அமெரிக்காவும் இஸ்ரேலும் மேலும் மேலும் தனிமைப்படுத்தப்படுவதன் அடையாளமாகவும் பார்ப்பதாக அவர்கள் உறுதியுடன் பதிலளித்தனர். 

வியட்நாமின் மகத்தான ஆதரவு: வியட்நாம் சோசலிச அரசு பல்வேறு விதங்களில் கியூபாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருவதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். வியட்நாம்-கியூபா நட்புக்கு 65 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, 65 நாட்க ளில் இலக்கை விட 9.5 மடங்கு அதிக நிதி (சுமார் 23 மில்லியன் டாலர்) வசூலானது. இந்த நிதி, மின் கலங்கள், சோலார் பேனல்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கப் பயன்பட்டது. 

மனிதாபிமான உதவி: பல்வேறு நாடுகளுக்கு மருத்துவர்களை அனுப்பும் கியூபாவால், அமெரிக்கத் தடையால் உள்நாட்டுத் தேவைக்கான அடிப்படை மருந்துகளைக் கூடப் பெற முடிவதில்லை. இருப்பினும், அமெரிக்காவில் உள்ள நல்ல உள்ளங்கள், ‘ஆத்வே’ (HATUEY) திட்டத்தின் கீழ், இரத்தப் புற்றுநோய் இருக்கும் கியூபக் குழந்தைகளுக்குச் சிகிச்சைக்கான மருந்துகளை அனுப்பி வைப்பதாக அவர்கள் உணர்வு பொங்க விவரித்தனர். ஆத்வே என்பவர், ஸ்பானிய காலனியாதிக்கத்தை எதிர்த்துக் கலகம் செய்து உயிரோடு எரிக்கப்பட்ட கியூபாவின் தேசிய ஹீரோ ஆவார். 

வென்ஸேரேமோஸ் அணி: 1970-களில் அமெரிக்காவின் தடைகளை மீறி,  இளைஞர்கள் அடங்கிய வென்ஸேரே மோஸ் (Venceremos - நாம் வெல்லுவோம்) அணி கியூபா வந்து கரும்புத் தோட்டங்கள் உள்ளிட்ட உற்பத்தியில் பணியாற்றி உதவி  செய்தது. “தாயகம் அல்லது மரணம்... நாம் வெல்லுவோம்” என்ற கியூப அரசியல் முழக்கத்தில் இருந்து இந்தப் பெயர் பெறப்பட்டது. கடந்த 55 ஆண்டுகளில் சுமார் 10,000 தன்னார்வலர்கள் இந்த அணியின் கீழ் கியூபா வந்துள்ளனர். 

இளைஞர் புலம் பெயர்வு குறித்த விளக்கங்கள்

கியூப இளைஞர்கள் புலம் பெயர்வது பற்றி அமெரிக்கா அவதூறு பிரச்சாரம் செய்வதை நாம் சுட்டிக் காட்டினோம். அதற்கு அவர்கள், இது உலகளாவிய பிரச்சனை என்று மறுத்துரைத்தனர். அரசியல் வேறுபாடுகளுக்காக அல்ல,  வேலை வாய்ப்புக்காகத்தான் இளைஞர் கள் வெளியேறுகிறார்கள். இந்த நிலைமைக்குக் காரணமே அமெரிக்க ஏகாதிபத்தியம் தான். சட்டவிரோத குடிபெயர்வை ஊக்குவிக்க, 1966-லேயே அமெரிக்கா ஒரு சட்டத்தை (Cuban Adjustment Act) இயற்றியது. இது வெளி யேறும் கியூபர்களுக்கு நிரந்தரத் தங்குமிட அனுமதியை விரைவாக வழங்குகிறது. இது கியூப மக்கள் மீதான அன்பினால் அல்ல, மாறாக சோசலிச அமைப்பு முறையைத் தாழ்த்திக் காட்ட வேண்டும் என்ற அரசியல் நோக்கம் தான் என்று அவர்கள் விளக்கினர். 

அவதூறுகள் தரும் சிரமம்: அமெரிக்க அரசு என்ஜிஓக்களுக்கும் சிறு குழுக்களுக்கும் நிதி உதவி செய்வதாகவும், அவை வலைத்தளங்களில் பொய் களையும் புனைகதைகளையும் வெளி யிட்டு கியூபா மீது அவதூறுகளை அள்ளித் தெளிப்பதாகவும் கவலை தெரிவித்தனர். “பொருளாதாரத் தடைகளை விட இந்த  அவதூறுகள் பெரும் சிரமத்தை ஏற்படுத்து கின்றன” என்று அவர்கள் வேதனையுடன் குறிப்பிட்டனர். 

உறுதியான நம்பிக்கை 

பொலிவியாவில் வலதுசாரிகள் வெற்றி  பெற்றதையடுத்து, அங்கு கியூபாவுக்கான ஆதரவு இயக்கம் எப்படி இருக்கும் என்று நாம் கேட்டபோது, “இன்றைய சூழலில் கியூப ஆதரவு இயக்கம் பொலிவியாவில் வலுப் பெறும். அங்குள்ள இடதுசாரி முற்போக்குச் சக்திகள் கட்சி வித்தியாசங்களைக் கூடத்  தள்ளி வைத்துவிட்டு கியூபாவுக்கு ஆத ரவாக ஓரணிக்கு வருவார்கள்” என்று திடமான நம்பிக்கையுடன் கூறினர். 

“மீள் சக்தி எங்களுக்கு அதிகம். மேலும், உலகத்தின் பல பாகங்களில் இருந்தும் எங்களுக்கு ஆதரவு கிடைக்கிறது.  வெற்றியோடு மீள்வது உறுதி” என்று அவர்கள் தங்கள் உரையாடலை நிறைவு செய்தனர்.