articles

img

ஸ்கேன் இந்தியா

சிக்குவாரா..?  

போக்சோ வழக்கில் கர்நாடகத்தின் முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா மீதான வழக்கைத் தொடரலாம் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. பிப்ரவரி 2, 2024 அன்று 18 வயது நிறைவு பெறாத பெண்ணை பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்தார் என்று அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போக்சோ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் எடியூரப்பா மனு தாக்கல் செய்தார். ஆனால், இந்த வழக்கை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது சரிதான் என்று உயர்நீதிமன்றம் அவரது மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது. கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை இது ஏற்படுத்தியுள்ளது.

 தப்பிப்பாரா..?  

வழக்கு விசாரணைகளில் இருந்து தப்பிப்பதற்காகப் புதிய, புதிய வழிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். ரிலையன்ஸ் குழுமத்தின் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை அழைப்பு விடுத்தது. எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் முழு ஒத்துழைப்பு தருவதாகச் சொல்லி வந்த அனில் அம்பானி இந்த அழைப்பை ஏற்க மறுத்தார். ஆனால் அமலாக்கத்துறை வந்தே ஆக வேண்டும் என்று சொல்லி விட்டது. கடைசி நேரத்தில் ஒரு மின்னஞ்சலைத் தட்டி விட்டிருக்கிறார் அனில். அதில் மீண்டும் நான் எப்போதுமே விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும், ஆனால் அது வீடியோ வாயிலாக இருக்கட்டும் என்று கூறியுள்ளார். கடைசி நேரத்தில் அதை அனுப்பியதே இந்த விசாரணையைத் தள்ளிப் போடவே என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.  

தீர்ப்பார்களா..?  

தலைநகர் தில்லியில் காற்று மாசுப் பிரச்சனையைத் தீர்ப்போம் என்று உறுதிமொழி கொடுத்து ஆட்சிக்கு வந்த பாஜக, அதில் தோற்றுப் போயிருக்கிறது. தலைநகர் பகுதிக்கு உட்பட்ட குர்கான், ஃபரிதாபாத் போன்ற பகுதிகள் இந்த ஆண்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு வருவது சிரமமாகியுள்ளது. தொடக்கப் பள்ளிகள் வீடியோ மூலமாக வகுப்புகளை நடத்தத் திட்ட மிட்டிருக்கின்றன. இரட்டை என்ஜின் அரசாகத் தங்களது அரசு இயங்கும். மாசுப் பிரச்சனைக்கு பாஜகவால் மட்டுமே தீர்வு தர முடியும் என்று தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். இப்போது பல தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்களையே காணவில்லை என்று மக்கள் குரல் எழுப்புகிறார்கள். கடுமையான மாசு இருக்கையில் தொகுதிக்குள் போனால், கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்வது என்று ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஓய்வு விடுதிகளில் முடங்கிக் கிடக்கிறார்களாம்.

 மாட்டுவார்களா?

 பாஜகவுக்கும், திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையில் மாறி, மாறி தாவிக் கொண்டிருந்த முகுல் ராயின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை கல்கத்தா உயர்நீதிமன்றம் பறித்துள்ளது. ஒரு கட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மம்தாவுக்கு அடுத்து அதிகாரம் கொண்டவராக முகுல் ராய் இருந்தார். திடீரென்று 2017 ஆம் ஆண்டில் பாஜகவுக்குத் தாவினார். அகில இந்திய அளவில் பொறுப்பு கிடைத்தது. 2021 தேர்தலில் பாஜக சார்பில் நின்று வெற்றி பெற்றார். ஆனால் மீண்டும் திரிணாமுல்லுக்குத் தாவினார். இரண்டு கட்சிகளும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் திரிணாமுல் காங்கிரசில் இருக்கும்போதே இவருடன் பதவிச்சண்டை போட்டுக் கொண்ட சுவேந்து  அதிகாரி சும்மா இருக்கவில்லை. வழக்குப் போட்டு பதவியைப் பறிக்க ஏற்பாடு செய்திருக் கிறார். தாவிய மற்றவர்களும் மாட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.