சர்வதேச ஒற்றுமை : கியூபாவின் அறைகூவலும் மார்க்சிஸ்ட் கட்சியின் பங்களிப்பும்!
சர்வதேச மாநாட்டின் ஒரு பகுதி யாக, கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுப் பிரிவின் தலைவர் தோழர் எமிலியோ லோசாடாவுடன் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தின் மூலம், கியூபாவின் சர்வதேச அரசியல் நிலைப்பாடு மற்றும் இடதுசாரி இயக்கங்களிடம் அதன் எதிர்பார்ப்புகள் குறித்துத் தெளிவான புரிதல் கிடைத்தது
சிபிஎம்-இன் நிலைப்பாட்டிற்குப் பாராட்டு
கியூபாவுக்கு ஆதரவாகவும், அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டிற்காகவும் சிபிஎம் வகிக்கும் பங்கை தோழர் எமிலியோ மீண்டும் மீண்டும் பாராட்டினார். இந்த மாநாட்டில் சிபிஎம் கலந்து கொள்வதை மிக முக்கியமான நிகழ்வாகக் கருதுவதாகக் கூறிய அவர், கியூப மகளிர் சம்மேளனத்துடன் சிபிஎம் பிரதிநிதி இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது மதிப்புமிக்கது என்றும் குறிப்பிட்டார். சிபிஎம்-க்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருப்பதைப் பாராட்டிய அவர், ஆசியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள், இடதுசாரி கட்சிகள் ஒன்று திரள சீன கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யும் முன்முயற்சி எடுக்கலாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
இடதுசாரிகளுக்கான உலகப் பாடம்
தேசிய மற்றும் சர்வதேச அளவில் அமெரிக்க எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு மற்றும் சோசலிச நாடுகள், முற்போக்குச் சக்திகளுடனான ஒற்றுமை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று தோழர் எமிலியோ வலியுறுத்தினார். சர்வதேச மன்றங்களில் இடதுசாரிகளுக்கிடையே அரசியல், தத்துவார்த்த வித்தியாசங் களை வெளிப்படையாகக் காட்டுவது நல்லதல்ல என்று அவர் கருதினார். நாட்டுக்குள்ளேயும் கூட இடதுசாரி களுக்கிடையேயான சித்தாந்த வேறுபாடுகளைத் தள்ளிவைக்க வேண்டும். எங்கெல்லாம் இடதுசாரிகள் பிளவுபட்டுள்ளனரோ, அங்கெல்லாம் மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன என்று அர்ஜெண்டினா, சிலி, ஈக்வடார், இத்தாலி, பொலிவியா ஆகிய நாடுகளை உதாரணம் காட்டினார்.
அவரது கருத்துகளைப் புரிந்து கொள்வதாகத் தெரிவித்த நாம், இந்தியா வில் இடதுசாரிகளுக்கிடையே ஒருங்கி ணைப்பும், கூட்டு நடவடிக்கைகளும் முன்னைக்காட்டிலும் அதிகரித்து வருகின்றன என்று பதிலளித்தோம். மேலும், சித்தாந்த வேறுபாடுகள் நிச்சயம் உள்ளன என்றாலும், அவை கூட்டு நடவடிக்கைகளுக்குத் தடையாகாமல் பார்த்துக் கொள்கிறோம் என்றும், வெவ்வேறு நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளை வெளிப்படையாக விமர்சிக்கா மல் இருப்பதே எங்கள் கட்சியின் நிலைபாடு என்றும் தெளிவு படுத்தினோம். நமது நிலைபாட்டை அவர் பாராட்டினார்.
எதிர்கால நிகழ்வுகளுக்கான அழைப்புகள்
அடுத்ததாக, ஆகஸ்ட் 2026-ல் AI (செயற்கை நுண்ணறிவு) மற்றும் சமூக ஊடகங்கள் குறித்த ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்வதாகவும், அதற்கு சிபிஎம் அவசியம் வரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதேபோல், பிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழா விற்குத் தோழர் எம்.ஏ. பேபி அவர்கள் வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். மேலும், பிரிக்ஸ் போன்ற பிராந்திய ஒத்துழைப்பு ஏற்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும், அமெரிக்க ஆதிக்க எதிர்ப்பிற்குச் சவால் விடுக்கும் எந்த ஒரு முயற்சியையும் அவர்கள் பற்றிக் கொள்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
கூட்டத்தின் மூலம் வெளிப்பட்ட முக்கியப் பாடங்கள்
கியூபாவில் நடைபெற்ற நிகழ்வுகளும், கூட்டங்களும் பின்வரும் முக்கியப் பாடங்களை வெளிக்கொணர்ந்தன:
ஒற்றுமையே முதல் முயற்சி: எதிரிகள் ஒற்றுமையாக உள்ளனர். எனவே, இடதுசாரி மற்றும் முற்போக்குச் சக்திகள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் ஒன்று திரள்வதே முதல் முயற்சியாக இருக்க வேண்டும்.
தொழில்நுட்ப பயன்பாடு: செயற்கை நுண்ணறிவு, சமூக ஊடகங்கள் போன்ற புதிய கருவிகளை இடதுசாரிகள் அதிகம் பயன்படுத்த வேண்டும். “சிந்தனைகள் மற்றும் கருத்துக்களின் போர் தான் இன்று பிரதானம். சிந்தனைக்கு ஆயுதம் தேவையில்லை” என்பது பிடலின் புகழ்பெற்ற வாசகம். சோசலிசத்திற்கு எதிரான பொய்யான வதந்திகள், அவதூறுகளுக்கு எதிராகச் சோசலிசம் தனது பதிலை திறம்பட கொண்டு செல்ல வேண்டும்.
அரசியல் தொடர்பு: மக்களுடன் அரசியல் தொடர்பு/உரையாடல் (political communication) முக்கியமானது. அதில் தத்துவார்த்த இதழ்களின் பங்கு மிகவும் முக்கியமானது.
பிராந்திய ஒத்துழைப்பு: பிரிக்ஸ் போன்ற பிராந்திய ஒத்துழைப்பு ஏற்பாடுகளை அவர்கள் அதிகம் பாராட்டுகிறார்கள்
சிபிஎம்-மிடமிருந்து எதிர்பார்ப்பு: சிபிஎம்-க்கும், குறிப்பாகக் கேரளா விற்கும் அவர்கள் பொதுவான பாராட்டு தெரிவித்தனர். கியூபாவின் அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் நாம் கலந்து கொள்ள வேண்டும் என்றும், ஆசியப் பிராந்தியத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இடதுசாரி இயக்கங்களை ஒன்று திரட்ட ஒரு மேடையை வழங்கச் சிபிஎம் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்றும் விரும்பினர்.
