articles

img

புதிய வேளாண் சட்டங்கள் விவசாய வருமானத்தை வரி வலைக்குள் கொண்டு வருவதாக இருக்கின்றன

புதிய வேளாண் சட்டங்கள் விவசாய வருமானத்தை வரி வலைக்குள் கொண்டு வருவதாக இருக்கின்றன !?!

ஜெய்மல் ஷெர்கில்

தொழில்முனைவர், ஐக்கிய அரபு எமிரேட்ஸை

தி வயர் இணைய இதழ், 2021 ஜனவரி 30

இரட்டை வேடங்கள், கதை திருப்பங்கள் என்றிருந்த பழைய பாலிவுட் திரைப்படங்களைப்  போலவே, இந்த மூன்று வேளாண் சட்டங்களைச் சுற்றியுள்ள சர்ச்சைகளும் அந்த குறிப்பிட்ட சட்டங்களுக்குடன் மட்டுமே பொருந்துபவையாக இருக்கவில்லை. அந்த சட்டங்களுக்குள் இன்னும் கூடுதலான, மிகவும் மோசமான அம்சங்கள் பொதிந்திருக்கின்றன. 1995ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம், 2017ஆம் ஆண்டு மத்திய சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் ஆகியவற்றை இந்த புதிய வேளாண் சட்டங்களுடன் இணைந்து வாசிக்கின்ற போது, வேளாண் சட்டங்களின் பின்னணியில் மறைந்துள்ள மிகவும் மோசமான சதி அவிழத் தொடங்குகிறது.  

விவசாய வருமானம் என்பது இந்தியாவில் அமைந்துள்ள நிலத்திலிருந்து பெறப்படுகின்ற எந்தவொரு விவசாய நிலங்கள், கட்டிடங்களின் வாடகை உட்பட எந்தவொரு வாடகை அல்லது வருவாயையும் குறிக்கிறது. அந்த வருமானம் வரி விலக்கு பெற்றதாக இருக்கும் என்று வருமானவரிச் சட்டப் பிரிவு 2 (1அ) கூறுகிறது. வருமான வரி ஆணையர் எதிர் ராஜா பெனாய் ராய் (1957) வழக்கில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் விவசாய வருமானத்தை வரையறை செய்திருக்கிறது. 

வரி விலக்கிற்கான தகுதியைப் பெறுவதற்கு, அடிப்படையான செயல்பாடுகள் மற்றும் அடுத்தடுத்த செயல்பாடுகள் என்று நிலத்தில் இரண்டு வகையான செயல்பாடுகளை மேற்கொள்வது அவசியம். அடிப்படை செயல்பாடுகளுக்குள்  சாகுபடி, உழவு, விதைப்பு, நடவு என்று விவசாயம் குறித்து நமக்கிருக்கின்ற புரிதல்கள் அடங்கும். பயிர் முளைப்பதற்கான உழைப்பையும் திறமையையும் கோருவதாக அந்த அடிப்படை செயல்பாடுகள் இருக்கின்றன.

பயிர் முளைத்தபின் களையெடுத்தல், தோண்டுவது, அகற்றுதல், பராமரித்தல், கத்தரித்தல், வெட்டுதல், பூச்சிகள், கால்நடைகள், நோய் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பது போன்ற செயல்பாடுகள் அடுத்தடுத்த செயல்பாடுகள் என்ற பகுதிக்குள் அடங்குகின்றன.

விவசாயிகள் ஒப்பந்த விவசாயத்தின் கீழ் இந்த செயல்பாடுகளில் பலவற்றை மேற்கொண்டு வருமான வரிவிலக்கு பெறுவதற்கான தகுதியைப் பெறலாம். விவசாயிகள் பெருநிறுவன விவசாயத்தின் கீழ் தங்களுடைய நிலத்தை முழுவதுமாக குத்தகைக்கு விடுகின்றனர். அடிப்படை மற்றும் அடுத்தடுத்த செயல்பாடுகள் பெருநிறுவனம் மேற்கொள்கிறது. தற்போது அதிலும் விவசாயி வருமான வரிவிலக்குக்கு தகுதி பெற்றவராகவே இருக்கிறார்.    

சட்டங்களுக்குள் மறைந்திருக்கும் விதிகள்

ஆனால் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தின் வில்லத்தனமான இரட்டை வேடம் வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்படுகின்ற போது கதைக்களம் இன்னும் மோசமான நிலைமைக்கு வந்து சேர்ந்து விடுகிறது. 2017ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் அட்டவணை II, பாரா எண் 2(அ) குத்தகை, குடிவாரம், துய்ப்புரிமை, நிலத்தில் இருப்பதற்கான உரிமம் ஆகியவற்றை சேவை வழங்கலாகக் கருதி அவை 18% ஜிஎஸ்டிக்கு உட்பட்டவை என்கிறது.  

அதே நேரத்தில், "இவை தொடர்பான சேவைகள்: குதிரைகளை வளர்ப்பதைத் தவிர அனைத்து பிற விலங்குகளை வளர்ப்பது, உணவு, நார், எரிபொருள் தொடர்பான மூலப்பொருட்கள் அல்லது பிற ஒத்த பொருட்கள் தவிர பிற தாவரங்களை விளைவிப்பது அல்லது விவசாய விளைபொருட்களுக்காக மேற்கொள்ளப்படும் (அ) ​​சாகுபடி, அறுவடை, கதிர், தாவர பாதுகாப்பு அல்லது பரிசோதனை உள்ளிட்ட எந்தவொரு விவசாய விளைபொருட்களின் உற்பத்தியுடன் நேரடியாக தொடர்புடைய விவசாய நடவடிக்கைகள்; (ஆ) விவசாயத் தொழிலாளர்களை வழங்குதல்; (இ) கத்தரித்தல், வெட்டுதல், அறுவடை செய்தல், உலர்த்துதல், சுத்தம் செய்தல், ஒழுங்கமைத்தல், வெயிலில் காயவைத்தல், தூய்மைப்படுத்துதல், குணப்படுத்துதல், வரிசைப்படுத்துதல், தரம் பிரித்தல், குளிரூட்டல் அல்லது மொத்தமாக சிப்பமிடுதல் மற்றும் இதுபோன்ற விவசாயத்தின் அத்தியாவசிய பண்புகளை மாற்றாமல் முதன்மைச் சந்தையில் மட்டுமே சந்தைப்படுத்தக்கூடியதாக மாற்றக் கூடியதாக வேளாண் பண்ணைகளில் மேற்கொள்ளப்படும் செயல்முறைகள், (ஈ) வேளாண் இயந்திரங்கள் அல்லது கட்டிடங்கள் இல்லாத அல்லது தற்செயலான பயன்பாட்டிற்கான கட்டிடங்கள் உள்ள காலியான நிலத்தை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடுதல்; (இ) வேளாண் விளைபொருட்களை ஏற்றுதல், இறக்குதல், சிப்பமிடுதல், சேமித்தல் அல்லது கிடங்குகளில் வைத்தல்; (உ) வேளாண் விரிவாக்க சேவைகள்; (ஊ) எந்தவொரு வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்தல் குழு அல்லது வாரியத்தின் சேவைகள் அல்லது விவசாய விளைபொருட்களை விற்பனை செய்வதற்காகவோ அல்லது வாங்குவதற்காகவோ கமிஷன் முகவர் வழங்குகின்ற சேவைகள்” ஆகியவை ஜிஎஸ்டி வரி எதுவுமில்லாத தொகுப்பிற்குள் அடங்கும் என்று குறிப்பிடுகிறது.

வேளாண் நடவடிக்கைகளைச் சேர்த்து விவசாய நிலங்களை குத்தகைக்கு விடுவதற்கு ஜிஎஸ்டி வரி இல்லை என்று ஜிஎஸ்டி சட்டம் சுட்டிக் காட்டியிருக்கிறது என்றாலும் உற்பத்தியுடன் நேரடியாகத் தொடர்புடைய செயல்பாடுகள் மட்டுமே வரிவிலக்கிற்கான தகுதியைப் பெறுகின்றன என்பதையும் அது குறிப்பிடுகிறது. விவசாயத்திற்குத் தேவையான பொருட்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடுவது குறிப்பிடப்பட்டிருந்தாலும், விவசாய நிலங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடுவது குறித்த குறிப்புகள் எதுவும் இல்லை. எனவே விவசாய குத்தகைகளை இந்த சட்டம் எவ்வாறு கணக்கில் எடுத்துக் கொள்கிறது என்பதில் சந்தேகம் ஏற்படுகிறது. மேலும் மூன்று வேளாண் சட்டங்களின் பின்னணியில் அது மிகவும் தெளிவற்றதாகவே இருக்கிறது.

ஆகையால் தன்னுடைய விவசாய நிலங்களை விவசாயி ஒருவர் ஒப்பந்தம் அல்லது பெருநிறுவன விவசாயத்தின் கீழ் குத்தகைக்கு விடும்போது, ​​அடிப்படை அல்லது அடுத்தடுத்த நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ளாத நிலையில், சேவைகளை அவர் வழங்குவதாகவே நாம் விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.

2018 மே 28 அன்று நிதி அமைச்சகம் அளித்திட்ட விளக்கத்தில் ‘விவசாயிகளுக்கு ஜிஎஸ்டி பதிவிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. விவசாயி என்பவர் தனிநபர் அல்லது ஹிந்து பிரிக்கப்படாத குடும்பம் சார்ந்து இருந்து தனது சொந்த உழைப்பு அல்லது குடும்பத்தின் உழைப்பு அல்லது ஊழியர்களின் உழைப்பு அல்லது பணம் அல்லது வேறு வகையான ஊதியம் மூலம் தனிப்பட்ட மேற்பார்வை அல்லது குடும்பத்தின் எந்தவொரு உறுப்பினரின் தனிப்பட்ட மேற்பார்வையின் கீழ் வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்களின் உழைப்பு அல்லது… மூலம் விவசாயம் செய்பவர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

தனிப்பட்ட முறையில் அடிப்படை அல்லது அடுத்தடுத்த நடவடிக்கைகளில் விவசாயி ஈடுபடவில்லை என்றால் ஜிஎஸ்டி பதிவு செய்வதிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்படாது என்பதையே அந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது. எனவே அவர் சேவைக்கான 18% ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. விவசாய நில குத்தகையை சேவை வழங்கல் என்று சொல்கின்ற நிதி அமைச்சகத்தின் செய்திக்குறிப்புக்குப் பதிலாக, அதுகுறித்த தெளிவான அறிவிக்கையை அரசாங்கம் வெளியிடுவது இன்னும் கூடுதலாக தெளிவுபடுத்துவதாக இருக்கும். பெருநிறுவன விவசாய மாதிரியின் கீழ், விவசாயி அடிப்படை அல்லது அடுத்தடுத்த செயல்பாடுகளை மேற்கொள்ளாமல் இருக்கும் போது விவசாய நிலத்திலிருந்து கிடைக்கும் வாடகைக்கு எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது என்பது குறித்தும், அதற்கான வருமான வரம்பு குறித்தும் தெளிவு இல்லை. 

விவசாயிகள் ஏற்கனவே கணிக்க முடியாத வானிலை, மண்ணின் தன்மைகள், நீர் மட்டங்கள், விவசாய உள்ளீட்டுப் பொருட்களின் விலைகள், குறைந்தபட்ச ஆதார விலை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர்களைப் பொறுத்தவரை எந்தவொரு அனுபவமும், உதவியும் இல்லாத இந்த வரிச் சட்டங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்பது கதையில் ஏற்பட்டுள்ள திருப்பமாக இருக்கிறது.   

இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளைப் பொறுத்தவரை ஒரு திகில் படமாகவே மாறப் போகிறது. இந்த வேளாண் சட்டங்கள் ஒருவேளை ரத்து செய்யப்பட்டாலும், ஏற்கனவே சட்டமாகி இருக்கின்ற விவசாய குத்தகை வருமானத்திற்கான ஜிஎஸ்டி வரி மீதான அக்கறையோ அல்லது தெளிவுபடுத்தலோ எதுவுமே இப்போதைக்கு இல்லை. 

அடிப்படை அல்லது அடுத்தடுத்த நடவடிக்கைகளுடன் இருக்கின்ற அல்லது இல்லாதிருக்கின்ற அனைத்து விவசாய நிலங்கள், கட்டிடங்களுக்கான குத்தகை வருமானத்தை ஜிஎஸ்டி எதுவுமில்லாத பட்டியலில் இடம் பெறும் வகையில் தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டியதன் அவசியம் குறித்து மாநில அரசுகளும் விவசாயிகள் சங்கங்களும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.