பாக்டீரியா தொற்றை விரைவாக கண்டுபிடிக்கும் புதிய முறை
தண்ணீர், சிறுநீர், பால் போன்ற திரவங்களில் பாக்டீரியா கிருமிகள் இருப்பதைக் கண்டறிய ஒரு எளிய வழியை மக்மாஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பாக்டீரியோ ஃபேஜஸ்(bacteriopages) எனப்படும் நுண்கிருமிகள் அடங்கிய ஜெல்லை பயன்படுத்தும்போது திரவங்களில் பேக்டீரியாக்கள் இருந்தால் அதன் நிறம் மாறுகிறது. இதைக் கொண்டு அந்த திரவம் மாசு பட்டிருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஃபேஜஸ் எனப்படும் நுண்கிருமிகள் குறிப்பிட்ட பாக்டீரியாவை தாக்கி அதன் செல்லினுள்ளிருக்கும் பொருளை வெளிவிட வைக்கிறது. அது ஜெல்லிலிருக்கும் பொருளுடன் இணைந்து நிறம் மாறுகிறது. நிறம் மாறவில்லையென்றால் திரவம் தூய்மையானது என்று தெரிந்து கொள்ளலாம். இப்போதுள்ள முறைகளில் சோதனைச் சாலையில் பாக்டீரியாக்கள் வளர்ந்து முடிவு தெரிய இரண்டு நாட்கள் பிடிக்கும். இந்த முறையில் சில மணி நேரங்களில் முடிவு தெரிந்து கொள்ளலாம். இந்த ஆய்வு ‘Advanced Materials’ என்கிற இதழில் வந்துள்ளது.
நிலவின் அச்சு குறித்து ஆய்வு
நிலவின் உட்பகுதி திரவத்தினால் ஆனதா அல்லது திடப் பொருளால் ஆனதா என்பது குறித்து திட்டவட்டமான முடிவு இல்லாமல் இருந்தது. விண்கோள்களின் உட்பகுதியை சோதிப்பதற்கு நில அதிர்வு தரவுகள்(seismic data) உதவுகின்றன. அப்போல்லோ திட்டங்கள் மூலம் கிடைத்த நிலவு அதிர்வு தரவுகள் பலவீனமானவையாக இருந்ததால் இரண்டு வாய்ப்புகளுக்கும் பொருந்துவதாக இருந்தன. இதற்கு ஒரு இறுதி முடிவு செய்வதற்கு, ஃபிரான்சிலுள்ள தேசிய அறிவியல் ஆய்வு மய்யத்தை சேர்ந்த ஆர்தர் பிரிவ்ட் தலைமையில் ஒரு குழு ஆய்வு செய்தது.
விண்கோள் திட்டங்கள் மூலமும் லூனார் லேசர் ரேன்ஜ் சோதனைகள் மூலமும் தரவுகளை திரட்டினர். இதன் மூலம் பூமியின் புவி ஈர்ப்பு விசையினால் நிலவிற்கு ஏற்படும் உருச் சிதைவுகள், பூமிக்கும் நிலவிற்கும் உள்ள தொலைவு மாற்றங்கள் போன்ற பண்புகளை தொகுத்தனர். அடுத்தபடியாக நிலவின் உட்பகுதியின் வெவ்வேறு மாதிரிகளுக்கு இவற்றைப் பொருத்திப் பார்த்தனர். பல சுவாரசியமான முடிவுகள் காணபட்டன. முதலாவது நிலவின் உட்பகுதியின் மிக ஆழத்தில் பொருட்கள் தீவிரமாக புரள்வது; அதாவது அடர்த்தியான பொருட்கள் மய்யத்தை நோக்கி விழுகின்றன; அடர்த்தி குறைவான பொருட்கள் மேல்நோக்கி எழும்புகின்றன.
இரண்டாவது நிலவின் மய்யப் பகுதி பூமியைப் போலவே வெளிப்பக்கம் திரவப் பகுதியாலும் உள் அச்சு திடப் பொருளாலும் ஆனது. அதன் அடர்த்தி இரும்பின் அடர்த்திக்கு நெருக்கமாக உள்ளது. 2011இல் நாசாவின் சோதனையும் இதைப் போன்ற முடிவுகளையே காட்டியது. நிலவு எவ்வாறு பரிணாமம் அடைந்தது என்பதற்கு இது முக்கியமானது. நிலவு உருவானபோது அது ஆற்றல் மிக்க காந்தப் புலத்தைக் கொண்டிருந்தது. 3.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இது குறையத் தொடங்கியது. இத்தகைய காந்தப் புலம் அச்சின் சுழற்சியாலும் அங்கு நடக்கும் கன்வெக்சன் எனும் சுழற்சியாலும் ஏற்படுகிறது. எனவே நிலவின் காந்தப் புலம் ஏன் மறைந்தது, எப்படி மறைந்தது என்பதற்கு நிலவின் அச்சு குறித்து அறிவது அவசியம். இந்த ஆய்வின் முடிவுகளை நிலவு அதிர்வு தரவுகள் மூலம் மேலும் உறுதிப்படுத்துவது வெகு விரைவில் நடைபெறும். இந்த ஆய்வு ‘nature’ எனும் இதழில் வந்துள்ளது.
சுற்றுச் சூழலும் சர்க்கரை உட்கொள்ளலும்
வெள்ளை சர்க்கரை உட்கொள்வது உலகளவில் அதிகரித்துக் கொண்டே போகிறது. பலர் அதன் பழக்கத்திற்கு அடிமையாக மாறிவருகிறார்கள். அது வெற்று கலோரிகளை மட்டுமே தருகிறது. உடல் பருமனோடு அது தொடர்புடையது. உடல்நலம் மட்டுமல்ல சுற்றுச்சூழலும் சர்க்கரை உற்பத்தியினால் பாதிக்கப்படுகிறது. வாழ்விட இழப்பு, பல்லுயிர் சூழல் மறைவு, உரத்தினாலும் ஆலைகளினாலும் நீர் மாசுபடுதல் ஆகிய பிரச்சனைகள் உள்ளன. உலகில் அதிகம் பயிரடப்படும் சர்க்கரை குறித்து போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்கிறார்கள் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பால் பெஹரன்சும் டெல் அவீவ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆலன் ஷெபனும்.
இவர்களது ஆய்வில் உணவில் தகுந்த அளவு மட்டுமே சர்க்கரை சேர்ப்பதற்கு உற்பத்தியை குறைப்பது அல்லது சர்க்கரையை மிச்சப்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பயன்படுத்துவது போன்ற வழிகள் கவனிக்கப்பட்டன. உற்பத்தியை குறைத்து அந்த நிலங்களை கார்பனை சேமிக்கும் இடங்களாக பயன்படுத்தலாம். அல்லது சர்க்கரையை உணவுப் பயன்பாட்டிலிருந்து விலக்கி சுற்றுச் சூழலுக்கு உகந்த உயிரி பிளாஸ்டிக் அல்லது உயிரி எரிபொருள் தயாரிக்கலாம். இன்னொரு விதத்தில், சர்க்கரையை நுண்ணுயிரிகளுக்கு அளித்து புரதம் தயாரிக்கலாம். இத்தகைய தாவர அடிப்படையிலான புரத உணவினால் 52 கோடி மக்களுக்கு தொடர்ந்து உணவளிக்கலாம்.
விலங்கு புரதத்தினால் பெரும் அளவில் வெளிவிடப்படும் வாயுக்கள், நீர் ஆகிய பாதகங்களை மாற்றலாம். உயிரி பிளாஸ்டிக்கினால் 20% பாலித்தீன் பொருட்களை தவிர்க்கலாம். உலகில் தயாராகும் உயிரி எரிபொருளான எத்தனாலில் 85% பிரேசில் நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்காக அங்கு பெருமளவில் கரும்பு வளர்க்கப்படுகிறது. அதற்குப் பதிலாக உணவிற்காக செலவிடப்படும் சர்க்கரையை எத்தனால் தயாரிக்க மாற்றலாம். ஆனால் இந்த மாற்றத்தில் பெரும் பிரச்சனைகள் உள்ளன. சர்க்கரை விநியோகத்தில் நூற்றுக்கணக்கான நாடுகள் ஈடுபட்டிருக்கின்றன.
பல்லாயிரக்கணக்கான மக்கள் சர்க்கரை தொடர்பான வருமானத்தை நம்பி இருக்கிறார்கள். ஆகவே பல நாடுகள் கூட்டாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சர்க்கரை உட்கொள்வதை குறைக்க வேண்டும் என்று கூறியுள்ள உலக சுகாதார நிறுவனமும் இதில் ஈடுபட வேண்டும். சர்க்கரை உற்பத்தி மற்றும் உணவுப் பழக்கத்தை குறுகிய காலத்தில் மாற்றிவிட இயலாது. ஆனால் சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலம் குறித்த பலன்களை எடுத்து சொல்வதன் மூலம் வளங்களை திறனார்ந்த முறையில் பயன்படுத்த கொள்கை வகுப்புபவர்களுக்கு உதவ முடியும்.
ஆர்.ரமணன்