articles

img

வங்க அரசியல்.... (ஓர் உண்மை ரிப்போர்ட்)

அரசியல் நிலையற்ற மாநிலமாக்கப்பட்டுவிட்ட வங்கத்தில், அதன் சமூகக் கட்டமைப்பையே கூறுபோடக்கூடிய வகையில், வன்முறை மோதல்களும், சச்சரவுகளும் அதிகரித்து வருகின்றன. 34 ஆண்டு கால இடது முன்னணி ஆட்சியில் பெரும்பாலும் இருந்திராத போக்கு இது.

‘திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடிய தேர்தல்’ எனச் சொல்லப்படும் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு மாநிலம் தயாராகிவரும் சூழலில், நாடு விடுதலைஅடைந்தபோதும், இந்தியா -பாகிஸ்தான் பிரிவினையின்போதும், வங்கத்தை சின்னாபின்னமாக்கிய வன்முறை வெறியாட்டங்களின் கொடூர நினைவுகள்மக்களின் நினைவலைகளில் மீண்டும் எழத்தொடங்கியுள்ளன.

இருளடைந்த அந்தக் கடந்தகாலம், 1977 முதல் 2011 வரையிலான 34 ஆண்டுகால இடது முன்னணி ஆட்சியில், துடைத்தழிக்கப்பட்டு, புதைக்கப்பட்டிருந்தது. 2011 ஆம் ஆண்டில், மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் அதிகாரத்துக்கு வந்ததில் இருந்து, ஆளுங்கட்சித் தொண்டர்களால் இடதுசாரிகள் மீது கட்டவிழ்த்து விடப்படக்கூடிய அரசியல் வன்முறை உச்சத்தைத் தொட்டது. பிறகு, பிளவுவாத, நச்சு அரசியலைப் பயன்படுத்தி பாரதிய ஜனதா கட்சி, வங்கத்தில் புதிய அரசியல் போட்டியாளராக அதிகாரத்துக்கு வரத்துடிக்கும் நிலையில், கடந்த சில மாதங்களில், மேன்மேலும் ஆபத்தான திருப்பம் வங்கத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. பாஜகவும், திரிணாமுல்லும் அரசியல் களத்தை தங்களுக்கிடையே வரையறுத்துக் கொள்வதற்காகப் போட்டுக்கொள்ளும் மோதலில், இந்த மரண விளையாட்டை விளையாடி வருகின்றன.

[சில முக்கிய மதவாத வன்முறைச் சம்பவங்களின் பட்டியல் தனியாக தரப்பட்டுள்ளது]

அரசியலை மதவெறிமயமாக்குவதற்காக ஒவ்வொருவாய்ப்பையும் பாஜகவும், சங்பரிவாரமும் வெளிப்படையாகவே பயன்படுத்தும் போக்கு, மேற்கு வங்கத்தில் உண்மையில் தொடங்கியது 2011க்குப் பிறகுதான். ஆர்.எஸ்.எஸ் தன்னுடைய செயல்பாடுகளை மாநிலத்தில் அதிகரித்தது. மக்களிடையே பல ஆண்டுகாலமாக நிலவி வந்த நல்லிணக்கத்தை  சீர்குலைத்து, சமூகங்களுக்கு இடையே கசப்புணர்வை தூண்டுவதற்கான ஆரம்ப கட்ட போர்க்களமாக வங்கத்தின் முக்கியப் பண்டிகையான துர்கா பூஜை மாற்றப்பட்டது. சிறுபான்மை மக்கள் மீது விரோதப்போக்கை உருவாக்கும் நோக்கில், துர்கா பூஜை காலத்தில் வரக்கூடிய இசுலாமியர்களுடைய மொஹரம் பண்டிகையைப் போலியாகக் காரணம் காட்டி, உச்சகட்ட மோதல்களைத்  தூண்டும் நோக்கில், துர்கா பூஜை சிலை கரைப்பு நிகழ்வுகளைத் திட்டமிடும் பல்வேறு முயற்சிகள் அங்கே அரங்கேறியுள்ளன. இவையெல்லாம் இதற்கு முன்னர் நிகழ்ந்ததே இல்லை. வகுப்புவாத சக்திகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் செயல்பட்டதன் விளைவாகவே நிலைமை இந்தளவுக்கு மோசமடைந்தது.

வகுப்புவாத உலை
2016 சட்டமன்றத் தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் அதிகாரத்துக்கு வந்தபிறகு, மாநிலத்தில் பல்வேறுமதவாத வன்முறைச் சம்பவங்களை பாஜக தூண்டியது. 2016 ஆம் ஆண்டிலேயே, துலாகரில் கலவரம் வெடித்தது; பிறகு 2017 ஆம் ஆண்டில், அதே போன்றதொரு சம்பவம் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் பஷீர்ஹட் பகுதியில், பதுரியாவில் நடந்தது. 2018 ஆம் ஆண்டில், மாநிலத்தின் நிலக்கரி சுரங்கப் பகுதியான அசன்சாலில் நடைபெற்ற இந்து மதப் பண்டிகை ஊர்வலம் ஒன்று, கொடூரமான கலவரமாக மாறியது. இந்தச் சம்பவத்தின்போதுதான், ஒரு மௌல்வி, பள்ளி மாணவனான தன்னுடைய மகன், ஆயுதம் ஏந்திய கும்பலால் மிரட்டப்பட்டுக் கொல்லப்பட்ட பிறகும் கூட, மக்களிடையே சமாதானத்தைக் கோரிய செயல் பிரபலமானது; உள்ளத்தைத் தொட்டது. 

முக்கிய எழுத்தாளரான சுபஜித் பக்ஜி, கலவரங்கள் நடந்து முடிந்தவுடன் பஷீர்ஹட் பகுதிக்கு சென்று பார்த்துவிட்டு, கலவரங்களின் பின்னணியில் ஆளும்கட்சித் தலைவர்களின் இரட்டை வேடங்கள் இருப்பதாகக் கருத்து தெரிவித்திருந்தார். உண்மையில் மேற்குவங்கம், மதவாதம் மற்றும் சாதியத்தின் கொடிய சேர்க்கையைக் கண்டு வருகிறது.இதுநாள் வரை வங்கத்தில் மத, சாதிய அடையாளங்களுக்கு ஊடாகப் பரவியிருக்கும் வர்க்கப் பிரச்சனைகள் முன்னணியில் இருந்தன. தேர்தல்களில்கூட, சிறுபான்மை வகுப்பினரில் ஒரு சில பிரிவுகளைத் தவிர்த்து, இதுதான் பிரதானமாக இருந்தது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இந்நிலை அழிந்து, சிதைந்துவிட்டது. வரவிருக்கும் தேர்தல்களம் சூடுபிடிக்கும் நிலையில், வன்முறை மற்றும் பிளவுவாத அரசியலே மாநிலத்தில் முக்கிய வழிமுறையாக மாறிவிடுமோ என்று பலருக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் பிற பகுதிகளில், அரசியல் பிரிவினைகளை, மதவாதப் பிளவாக மாற்றும் முயற்சிகளில் பாஜக ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் ஒரு சமூகத்தின் ஓட்டுக்களை அதிகமாகப் பெற முடியும் என அவர்கள் நம்புகிறார்கள். அவர்களுடைய கடந்த இரண்டாண்டு கால நடவடிக்கைகள் அனைத்தும் - மதவெறியைத் தூண்டும்வதந்திகள், பொய்களைப் பரப்புவதற்கான அவர்களுடைய பிரம்மாண்டமான ஆன்லைன் படைகளின் நடவடிக்கைகள் உட்பட அனைத்தும் – இந்த முனையை நோக்கியே முடுக்கி விடப்பட்டுள்ளன. இதை எதிர்த்து முற்போக்கு சக்திகள் தீரமாகப் போராடி வருவதையும் தாண்டி, இந்தப் போக்கு வருத்தமளிக்கும் வகையில், மாநிலத்தின் சூழலில் ஓரளவுக்கு நச்சைக் கலந்துவிட்டது. 

சமூகத்தை தங்களுக்கு  ஏற்றவாறு இயக்குவது
மேற்கு வங்கம் போன்ற வர்க்க அடிப்படையிலான ஒற்றுமை அதிக செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒரு மாநிலத்தில், சாதிய அரசியலுக்கு ஆயுத பலம் அளிப்பது என்பது,மற்ற மாநிலங்களைப் போல அவ்வளவு எளிதான காரியம் அல்ல, என மாநிலத்தின் முக்கிய அரசியல் விமர்சகரும், நாடகவியலாளருமான அஜிஜுல் ஹக் கூறியிருந்தார்.“சோசியல் எஞ்சியனிரிங் அதாவது, சமூகத்தை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றுவதும் இயக்குவதும் என்பது சாதியத்தின் மற்றொரு பெயர்தான். மேற்கு வங்கத்தில் சாதியம் என்பது மிகுந்த இழிவாகப் பார்க்கப்படும் ஒன்று. அதனால், பழைய மொந்தையில் புதிய கள் என்பது போல, ஆர்.எஸ்.எஸ்ஸால் ‘சோசியல் எஞ்சினியரிங்’ எனப்பெயர் மாற்றப்பட்டு பேக்கேஜிங் செய்யப்பட்டுவிட்டது” எனநியூஸ்கிளிக் ஊடகத்திடம் பேசிய போது அவர் குறிப்பிட்டார்.அண்டை மாநிலமான பீகார் போன்ற பிற மாநிலங்களில், சாதி அடிப்படையிலான அரசியலும், சமூக எதார்த்தங்களும் மேற்கு வங்கத்தில் இருந்து மிகவும் வேறுபடுகின்றன. எனவே, பல அரசியல் பார்வையாளர்கள் மேற்கு வங்கத்தின் தேர்தல் முடிவுகளைக் கணிக்கும்போது, ஒரே மாதிரியான கணிப்புகளை உருவாக்கி தவறு செய்துவிடுகிறார்கள் என ஹக் தெரிவித்தார்.‘சிந்தனைஅழிப்பு’ (memocide) என்ற ஒன்று இருக்கிறது. ஒருவர் ஒரு பொருளிற்கோ, அல்லது சிந்தனைக்கோ பெயர் மாற்றம் செய்து, அது வேறுபட்டது போன்ற மாயையை ஏற்படுத்துவது. உதாரணத்துக்கு வங்கத்தில் இண்டியன் பீப்பிள்ஸ் தியேட்டர் அசோசியேஷனின் (இந்திய மக்கள் நாடக சங்கம்- இப்டா) பழையபதமான, ‘கண சங்கீத்’ (மக்கள் இசை) என்பது ‘ஜீவன்முக்தி’ பாடல்கள் (வாழ்க்கையை வளமாக்கும்) என்று பெயர்மாற்றப்பட்டது. கார்ப்பரேட்டுகள் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய இந்தியாவில், சிந்தனைஅழிப்பு செய்வதற்காக அவர்களுடைய மொழியும், பதங்களும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, வெறுக்கப்பட்ட பதங்களான ‘சாதியம்’ போன்றவை – மத்துவாக்கள் (Matuas) போன்றசமூகங்களைத் தூண்டிவிடுதற்காக – சோசியல் எஞ்சினியரிங் என்று பெயர் மாற்றி அழைக்கப்படுகிறது என்று, அவர் விளக்கினார்.

திரிணாமுல் காங்கிரஸ், பாஜக - இரண்டுமே இந்த விஷயத்திலும், தங்களுடைய கருத்தியல் சார்ந்த பல்வேறு விஷயங்களிலும் ஒரே மாதிரிதான் என்று, ஹக் உறுதிபடத் தெரிவித்தார்.நிபுணர்கள் என்று அழைக்கப்படும் பெரும்பாலான நபர்களும், தொடர்ச்சியாக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பவர்களும் வங்கத்தில் ‘சாதிய வாக்கு வங்கி’ உள்ளதாக திட்டமிட்டு பொய் பரப்புகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. உதாரணமாக புருலியாவில், ‘மஹதோ ஓட்டு’என்ற ஒன்றோ, ‘குர்மி ஓட்டு’ என்ற ஒன்றோ இல்லை என்றுதான் பிற அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்த மாவட்டம் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையாலும், ‘ஜங்கல் மஹால்’ என அழைக்கப்படும் வனங்களை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பலர், அதிகாரம் மற்றும் பணபலத்தால் பாஜகவால் திரிணாமுல் கட்சியை வலுவாக எதிர்க்க முடியும் என்று கருதி இடதுசாரி முகாமில் இருந்து விலகியதன் விளைவாக, அங்கு இடதுசாரிகளின் இருப்பு மிகச் சொற்பமாக மாறியதாலும், மக்களவை தேர்தலில் எதிர்த்து வாக்களிக்கும் போக்கு இருந்தது. தற்போதும் விளிம்புநிலை ஏழைமக்கள் தான், உறுப்பினர்களின் தலையெழுத்தை அங்கு தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்களே ஒழிய, அவர்களை மதம் அல்லது சாதி அடிப்படையில் வகைப்படுத்த முடியாது.
இப்போது என்ன நிலைமை?

வங்கத்தில் சிறுபான்மையினர் பாஜகவை வீழ்த்துவதற்காக சூழ்ச்சித்திறன் மிக்க வாக்களிப்பு முறையைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று சில அரசியல் நோக்கர்கள்,  கருதுகிறார்கள். சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னணிப் போராளியின் மரணம், கணிசமான பகுதியினரிடம் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையை அதிகரித்துவிட்டது. ஃபுர்ஃபுரா ஷரீஃபில், மதகுருமார்களில் ஒரு பகுதியினரின் கிளர்ச்சியும் இத்தகைய மனநிலை உருவாவதற்குப் பங்களிப்பு செய்திருக்கிறது.எனவே, சிறுபான்மையினரில் ஒரு பகுதியினர் மனம்மாறியுள்ளனர் – பெரும்பான்மை சமூகத்தை அணிதிரட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்தக்கூடிய பாஜகவுக்குத் தங்கள் மேல் அக்கறை இல்லை, திரிணாமுல் காங்கிரஸ்
நம்பத்தகுந்ததாக இல்லை என்று அவர்கள் கருதுகிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் தற்போதும், சிறுபான்மையினர் ஓட்டுக்களும், பெண்களின் ஓட்டுக்களும் தங்கள் சட்டைப்பையில் உள்ளதாக நம்புகிறது. ஆனால் கள எதார்த்தங்கள் வேகமாக மாறி வருகின்றன- குறிப்பாக இடதுசாரிகள், காங்கிரஸ், இந்திய மதச் சார்பற்ற முன்னணிஅடங்கிய மகா கூட்டணி உருவானதில் இருந்து.

நாடு முழுவதும் நடைபெறக்கூடிய விவசாயிகள் போராட்டமானது, இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு உதவும் மற்றொரு காரணியாக இருக்கிறது. பாஜகவின் நச்சுக் கருத்துகள் நபானாவுக்குள் (மேற்கு வங்க சட்டமன்றம்) நுழைவதை ஏற்றுக்கொள்ள முடியாத சிறுபான்மை சமூகத்தின் ஒரு பகுதியினரிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் இடதுசாரிகள் பயனடைவார்கள் எனப் பலர் கருதுவதால், அப்படி நிகழ வாய்ப்பிருக்கிறது.

                                           ***************

சில மதவாத வன்முறை சம்பவங்கள் மற்றும் திரிணாமுல் - பாஜக மோதல்கள்

$ பன்கரில் (தெற்கு 24 பர்கானா) திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்து வீட்டிலேயே அடங்கி இருக்குமாறு மற்ற கட்சி விசுவாசிகளுக்கு மிரட்டல்கள் வரத் தொடங்கிவிட்டன. இது இந்து-முஸ்லீம் பிளவை விட, கட்சி அடிப்படையில்தான் அதிகம். 

$ மல்லர்பூரில் (பீர்பூம்), 2019 மக்களவை தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்ற பிறகு, ஜூன் மாதம் (திரிணாமுல் - பாஜக) இரண்டு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வகுப்புவாத பிளவாக மாறியது.  

$ நானூரில் ஜூன் 2019ல் நடந்த சம்பவம் முதலில் வகுப்புவாத தன்மையைப் பெற்றிருக்கவில்லை. ஆனால், பாஜக, திரிணாமுல் கட்சிகளுக்கு இடையிலான மோதலால் ஒரு காவல்துறை அதிகாரி தலையில் காயம்பட்டார். பிகுண்டி, ஷாக்பகா எனும் இரண்டு கிராமங்கள் தான் வன்முறையின் மையப்புள்ளியாக இருந்தன.

$ சியூரி (பீர்பூம் ): புக்குதிகி கிராமத்தில் ஜூலை 18, 2019ல், பாஜகவுக்கு மாறிய சாஹேப் எனும் ‘தாதா’ மீது குண்டுகள் வீசப்பட்டன.

பரூவி (பீர்பூம்): ஜூலை 28, 2019ல், பாஜகதலைவர் ஒருவரின் வீடு திரிணாமுல் காங்கிரஸ்காரர்களால் தாக்கப்பட்டது. அதன்பிறகு திரிணாமுல் காங்கிரஸ், பாஜக தலைவர்கள் மீது தாக்குதல் தொடுக்கிறது என்ற பிரச்சாரத்தை பாஜக துவங்கியது.

பங்குராவின் கத்ராவில் ஜூன் 5, 2019ல், இரண்டு கட்சிகளின் உறுப்பினர்களுக்கு இடையே மோதல் நடைபெற்றது.

$ ஜூன் 23, 2019ல், பங்குராவில் திரிணாமுல் காங்கிரசார் சென்ற பேருந்து பத்ரசயார் பகுதியில் நிறுத்தப்பட்ட பிறகு, பொதுமக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.

$ ஜூன் 16, 2019ல், நாடியா மாவட்டத்தின் கல்யாணியில், திரிணாமுல் காங்கிரஸ் - பாஜகவுக்கு இடையே கடும்மோதல் நடைபெற்றது.

$ வடக்கு 24 பர்கானாவின் பாரசாத் நகரில் ஜூலை 11, 2019ல், சில ‘சமூக விரோதிகள்’ அரசியல் அணி மாறியதால், பஷீர்ஹட், சந்தேஷ்காலி பகுதிகள் கொதிநிலையில் இருந்தன.

$ ஜூன் 12, 2019ல் வடக்கு பர்கானாவின் காக்கிநாடாவில், வகுப்புவாத சாயலில் நடைபெற்ற ஒரு அரசியல் மோதலில் இருவர் கொல்லப்பட்டார்கள்.

$ வடக்கு 24 பர்கானாவின் ஷாஷன்னில், திரிணாமுல் காங்கிரஸ்- பாஜக பெயரில் ‘சமூக-விரோதிகள்’ மோதிக்கொண்டதில், நான்கு பாஜக ஊழியர்கள் காயமடைந்தனர்.

$ ஆகஸ்ட் 1, 2019ல் வடக்கு 24 பர்கானாவின் அம்தண்டங்காவில், திரிணாமுல்-பாஜக இடையில் நடைபெற்ற மோதல், வகுப்புவாத மோதலாக மாறியது. 

$ 2019 மக்களவை தேர்தலில், கூச் பிகாரில் பாஜக வெற்றிபெற்ற பிறகு, அங்கு கடுமையான கலவரம் வெடித்தது.

$ வடக்கு 24 பர்கானாவில் 2020 மார்ச்-ஜூன் மாதங்களில் பாஜக-திரிணாமுலுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வகுப்புவாத மோதலாக மாறி, பிறகு கலவரம் போன்ற நிலை உருவானது.

கட்டுரையாளர் :  சந்தீப் சக்கரவர்த்தி, கொல்கத்தாவில் செயல்படும் கணசக்தி மற்றும் பிரஜா சக்தி, தீக்கதிர் ஏடுகளின் செய்தியாளர்.

தமிழில் : நர்மதா தேவி

;