articles

img

உணவு உரிமையை உறுதிசெய்க! மது, போதை அதிகரிப்பை கட்டுப்படுத்துக!=எஸ்.ராமச்சந்திரன்

புதுச்சேரி மாநிலத்தின் மக்கள் தொகை 15 லட்சம். மொத்த  குடும்ப அட்டைகள் 3லட்சத்தி  52ஆயிரத்து 382 வறுமைக் கோட்டுக்கு கீழே முன்னுரிமைக் குடும்பங்கள் சிவப்பு அட்டைகள் 1 லட்சத்தி 60 ஆயிரத்து 211, வறுமைகோட்டுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு மஞ்சள் அட்டைகள் 1 லட்சத்தி 66 ஆயிரத்து 142… புதுச்சேரியில் 515 ரேஷன்கடைகள். இதில் பணிபுரிந்த ஊழியர்கள் ஆயிரத்திற்கு மேல்.  இவர்களுக்கு கடந்த ஐந்து ஆண்டு களாக ஊதியம் இல்லை. இவர்களின் பல குடும்பங்கள் வறுமையின் பிடியில் சிக்கி யிருக்கின்றன. தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுபட்டவர்களும் உண்டு.

உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்குகீழ் உள்ள குடும்பங்க ளில் பரம ஏழை குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களுக்கு வழக்கமாக  கிடைக்கும் மாநில அரசின் உணவு வழங்கல்  திட்டத்துடன், கூடுதலாக ஒன்றிய அரசின் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின்கீழ் 5 கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்தது. இதனால் 26 ஆயிரம்  குடும்பங்கள் பயனடைந்தன. மானிய விலையில் பருப்பு, பாமாயில், சர்க்கரை இவற்றுடன் கூடுதல் தானியங்களையும் பெற்றுவந்தனர். புதுச்சேரியில் அரிசிக்கு பதில் பணம் என்ற திட்டம் வந்ததால்இவை எதுவும் சரிவர அமல்படுத்தப்படவில்லை. புதுச்சேரி உணவு உரிமை மறுக்கப்பட்ட மாநிலமாக மாறியது. 

உணவு உரிமைக்காக தொடர் போராட்டம் கடந்த ஆட்சியின்போது ஆளுநராக இருந்த கிரண்பேடி அரிசிக்குப் பதில் பணம் என்று அறிவித்தவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி இதை ஏற்க முடியாது என்று போராட்ட களத்தில் இறங்கியது.

ரேஷன் கடைகளை திறந்து அரிசி உள்பட அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை இடைவிடாமல் நடத்தியது. 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தை நடத்தியது.

2022 நவம்பர் மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய  பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி பங்கேற்ற மாநில உரிமைச் சிறப்பு மாநாட்டில் ரேஷன் கடைகளை உடனடியாகத் திறக்க வேண்டும். அது  புதுச்சேரி மக்களின் உணவு உரிமை என்ற  கோரிக்கைப் பிரகடனத்தை வெளியிட்டது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இதர மகளிர் அமைப்புகளுடன் இணைந்து கணக்கெடுப்பு நடத்தி, ‘’பணம் வேண்டாம், அரிசிதான் வேண்டும்” என்று 99 விழுக்காடு குடும்பங்களின் பெண்கள் வலியுறுத்தியதை கோரிக்கைமனுவாக உருவாக்கி துணைநிலை ஆளுநர் கிரண்  பேடியை சந்தித்து வழங்கியது. மேலும் மாதர்சங்கம் குடிமைப் பொருள் வழங்குதுறை அலுவலகத்திற்கு அருகில்  மறியல் போராட்டங்கள் நடத்தி நூற்றுக் கணக்கான பெண்கள் கைதாகினர். 

கடந்த 2024, பிப்ரவரி மாத இறுதியில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரேஷன்  கடைகளை திறக்கும் வரை குடிமைப் பொருள் வழங்குதுறை அலுவலகம் முன்பாககாத் திருப்புப் போராட்டத்தை நடத்தியது. புதுச்சேரி மக்கள் மத்தியில் போராட்ட உணர்வுகளை தூண்டியது. இதர  அரசியல் கட்சிகளையும் இப்பிரச் சினையில் தலையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முக்கியப் பங்காற்றியது. இதன் விளைவாக முதல்வர் அவர்கள்,  “ரேஷன் கடைகளை திறந்து அத்தியாவசியப் பொருட்களை மானிய  விலையில் தருவதற்கு ஆவண  செய்கிறேன் என்று உறுதி அளித்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜிராமகிருஷ்ணன் தலைமையில் மறியல் போராட்டத்தை நடத்திக்காத் திருப்புப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது .

புதுச்சேரி ஆன்மீக நகரம்...

புதுச்சேரியை ஆனமீக நகரமாக மாற்று வோம் என்று தேர்தல் பரப்புரையில்  நரேந்திரமோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் முழங்கினர். ஆனால் புதுச்சேரியை போதை நகரமாக மாற்றி இருக்கிறார்கள்.

“ஸ்பிரிட்சுவல்சிட்டி”யை ’ஸ்பிரீட் ‘சிட்டியாகமாற்றிக்கொண்டிருக்கின்றனர. பள்ளி மாணவர்கள் இளைஞர்கள் வரை கஞ்ஜாபோதைப் பழக்கத்திற்கு அடிமையாவது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதில் புதுச்சேரி இந்திய அளவில் முதல் இடத்தை பெறு வதற்கு வாய்ப்பு இருக்கிறது. புதுச்சேரி  இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாய் இருக்கிறது .இந்தியாவிலேயே இளம் விதவைகள் அதிகம் உள்ள மாநிலம் புதுச்சேரிதான். காரைக்காலில் 125 குடும்பங்கள் கொண்ட சிறுகிராமத்தில் 65 இளம் விதவைகள் இருக்கிறார்கள். 

மதுபோதையின் கொடுமையால்தான் புதுச்சேரி முத்தியால் பேட்டையில் ஒரு சிறுமி கூட்டு பாலியல் வன்முறைக்கு பலியானார். இக்கொடுமைக்கு எதிராக  புதுச்சேரி மாநில மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு வீதியில் இறங்கினர். இதற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் அவர் ராஜினாமா செய்யவில்லை.  புதுச்சேரி மக்களவை உறுப்பினரா வதற்கு வேட்பாளர் ஆனார். 30 சட்ட மன்றத் தொகுதிகளில் அவரும், முதல்வரும்  வெற்றிபெற்ற தொகுதி உள்பட 28 தொகுதிகளில் தோற்கடிக்கப்பட்டார். மக்கள் தக்க பாடங்களை ஆட்சியாளர்க ளுக்கு ஜனநாயக ரீதியில் வழங்கிக் கொண்டே இருக்கின்றனர்.

நீண்ட போராட்டங்களின் விளைவாக ரேஷன்கடை ஊழியர்களுக்கு ஆறு மாதச் சம்பளம் உடனடியாக வழங்கப்பட்டது நம்பிக்கையை அளித்தது. 2024 மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறக்க வேண்டும் என்பது பேசு பொருளாகமாறியது.

இதன்விளைவாகத்தான் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தற்காலிக துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற ராதாகிருஷ்ணன் ரேஷன் கடைகளை திறப்பதற்கு கொள்கையளவில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. திறப்பதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ளலாம் என்ற அவரது கருத்தை பத்திரிக்கை வாயிலாக அறியமுடிந்தது. புதுச்சேரி முதல்வரும் அதற்குப் பின்னர்,”  ரேஷன் கடைகளை மீண்டும் திறப்போம்” என்று பத்திரிகை வாயிலாக வாக்குறுதி களை அளித்திருக்கிறார். இருந்தும் காலதா மதம் ஏன் என்ற கேள்வியை எழுப்புகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

தள்ளாடும் புதுச்சேரி 

புதுச்சேரியில் ஏற்கெனவே ஆறு மதுபானத் தொழிற்சாலைகள் உள்ள நிலையில், 2022 மே 30 ல்மேலும் 6 புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதற்கான உரிமம் மற்ற அனுமதி அனைத்தும் மின்னல் வேகத்தில் நடைபெற்றன. இதற்கான உரிமங்களை வழங்குவதில் கோடிக்கணக்கான ரூபாய்கள் லஞ்சமாக கைமாறின.  ஏற்கெனவே மாநிலத்தில் ஏழு மருத்துவக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவைகளாலும் புதுச்சேரியில் , ரியல்எஸ்டேட் மாபியாக்களாலும், தனியார் கல்வி நிறுவனங்களாலும் நிலத்தடி நீர்சூறை யாடப்பட்டு விவசாயம் கேள்விக்குறியாகி வருகிறது. இவைகளோடு  புதிய மதுபான தொழிற்சாலைகளாலும் நிலத்தடி நீர் சூறையாடுவதற்கு வழிவகை செய்தனர். 

மொத்தம் புதுச்சேரி மாநிலத்தில் 536 மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. இவை தவிர சாராயக்கடைகள்110, கள்ளுக்கடைகள்92 இருக்கின்றன. மேலும் ரெஸ்டோபார்கள் என்ற பெயரில் மதுபானக் கடைகள் திறக்க புதுச்சேரி அரசு திட்டமிட்டு வருகிறது. மக்களின் ஆரோக்கியம்குறித்தோ, இளைஞர்களின் எதிர்காலம் குறித்தோ பாஜக, என்.ஆர்காங். ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை. (ரேஷன் கடைகளின் எண்ணிக்கை 515, மதுபானக்கடைகள் 536) பெண்களுக்கு மதுபானம் இலவசம் என்று விளம்பரம் செய்து நள்ளிரவு வரை விற்பனைசெய்ய எவ்வித கட்டுப்பாடும் இல்லை. கல்வி நிறுவன

விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் மதுபானக் கடைகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களைத் திரட்டிப் போராடி வருகிறது, நீதி மன்ற வழக்குகளையும் சந்தித்து வருகிறது.ங்கள்,

புதுச்சேரியில் பல தலைமுறைகளாக வாழ்வாதாரங்களை அளித்து வந்த மூன்று பஞ்சாலைகள் மூடிக் கிடக்கின்றன. கூட்டுறவு, சக்கரை ஆலைகள், பஞ்சாலைகள், இதர நிறுவனங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. அரசுத் தொழிற்பேட்டைகள் அவல நிலையில். ஆனால் அரசு மதுபானத் தொழிற்சாலைகளையும், ரெஸ்டோபார்களையும் திறந்து கொண்டே இருக்கிறது.

வழி பாட்டுத்தலங்கள், குடியிருப்புகள் ஆகியவற்றிற்கு அருகில் மதுபான கடைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்ற வழிகாட்டுநெறி முறைகள் அனைத்தும் தூக்கி எறியப்பட்டு வருகின்றன.

உணவு உரிமைப் பாதுகாப்பு,  மது, போதை எதிர்ப்பு மாநாடு 

இந்த நிலையில்தான், புதுச்சேரியில் மறுக்கப்படும் உணவு உரிமைக்காகவும், மது, போதை எதிர்ப்புக்காகவும் சிறப்பு  மாநாடு புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற உள்ளது.  மாநில செயலாளர் ராஜாங்கம், முதல்வருக்கு அளித்த கோரிக்கை மனுவில், புதுச்சேரி மக்களின் உணவு உரிமைகளைப் பாதுகாக்க, மூடப்பட்ட ரேஷன்கடைகளை காலதாமதமின்றி உடனடியாக திறக்க வேண்டும். ரேஷன்கடை ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தி அவர்களது குடும்பங்களை பாதுகாக்க வேண்டும். மானிய விலையில் அத்தியாவசிய பொருட்கள் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றை வழங்க வேண்டும்.

மதுபானங்களின் விற்பனையை கட்டுப்படுத்துவதற்கு, மேலும்  மதுக்கடைகள் திறப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். மதுக்கடைகள் எண்ணிக்கை விரிவடையும் போது சமூக குற்றங்கள்  பெருகுவதற்கு வாய்ப்பாக இருக்கும்.நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட அரசின் உறுதிமொழி காப்பாற்றப்பட வேண்டும்.  கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் புதுச்சேரியில் பெருகிவருகிறது. வழக்குகள் தொடுக்கப்பட்டாலும் குறையவில்லை. போதையிலிருந்து இளைஞர்களை மீட்டெடுக்கவும், விதிமுறைகளை மீறி செயல்படும் ரெஸ்டோபார்களை கட்டுப்படுத்தவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரினர்.

இதை வலியுறுத்தி, இன்று புதுச்சேரியில் உணவு உரிமைப் பாதுகாப்பு, மது, போதை எதிர்ப்பு சிறப்பு  மாநாடு நடைபெற உள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி பங்கேற்கிறார். புதுச்சேரி மாநில மக்களின் உணவு  உரிமையை பாதுகாக்கவும், மது, போதையில்லா மாநிலமாக புதுச்சேரியை மாற்றவும் இம்மாநாட்டில் உறுதி ஏற்போம்.

எஸ்.ராமச்சந்திரன்
மாநில செயற்குழு உறுப்பினர், 
சிபிஎம் புதுச்சேரி.