articles

img

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான மாணிக்கம் தோழர் அப்துல் வஹாப்....

தோழர் அப்துல் வஹாப் அவர்கள் மறைந்து ஒரு வருடம் நிறைவடைகிறது. அவர் வாழ்ந்த 94 ஆண்டுகளில் 75 ஆண்டுகளுக்கு மேல் நாட்டைக் காக்கும் ராணுவத்திலும், தேசத்தின் விடுதலைக்காகவும், ஜனநாயக உரிமைகளுக்காகவும், தொழிலாளி, விவசாயி நலனுக்காக அவர்களின் கோரிக்கைகளுக்கான வர்க்கப் போராட்டத்திலும், பத்திரிகை துறையிலும் அறிவார்ந்த தன்மையில் செயல்பட்ட ஒரு மகத்தான தோழர். எந்த இடத்திற்கு கட்சிப் பணிகளை செய்ய அனுப்பினாலும் அந்தபணிகளை மனமகிழ்வோடு ஏற்றுக் கொண்டு அந்தப் பணிகள் வெற்றியடைவதற்காக அப்பகுதியில் உள்ள தோழர்களை இணைத்து சிறப்பாகசெய்து முடிக்கும் உறுதியும் அழுத்தமான செயல்பாடும் அமைதியான அணுகுமுறையும் கொண்ட அற்புதமான தோழர் அப்துல் வஹாப்.

அடிமை இந்தியாவில் இண்டர்மீடியட் படிப்பைமுடித்துவிட்டு வீட்டிலிருந்தால் விவசாயப் பணிகளோடு, குடும்பப் பணிகளை கொடுத்து கட்டிபோட்டுவிடுவார்கள் என்ற அச்சத்தில் படிப்பை முடித்துக் கொண்டு குடும்பத்தினருக்கே தெரியாமல் ராணுவ சேவைக்காக சென்றுவிட்டார் சுதந்திரத்திற்கான போராட்டம் காந்தி தலைமையில் நாடு முழுவதும் எழுச்சி கொண்ட காலகட்டம். இந்த நிலையில் அவர் தேசப்பணிக்காக ராணுவத்தில் சேர்ந்துவிட்டதை அறிந்த அவரது குடும்பத்தினர் பெரு முயற்சி செய்து வீட்டுக்கு கொண்டு வந்தார்கள். அப்படி  தன் சொந்த ஊர் வந்தபொழுதுதான் சுதந்திரப் போராட்டத்திலும், கம்யூனிஸ்ட் கட்சியின் அறிமுகத்தோடு இளம்வயதிலேயே பொது வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தான் பிறந்த கம்பம் உத்தமபாளையம் வட்டாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைகட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். கட்சி தடை செய்யப்பட்ட காலமாக இருந்ததினால் கட்சித் தலைமையோடு தொடர்பு கொண்டார். ஜனசக்தி பத்திரிகை பணிகளுக்காக  அழைக்கப்பட்டதின் பேரில் சென்னை சென்றார். அங்கிருந்துதான் அவருடைய அனைத்துப் பணிகளும், அரசியல் போராட்டங்களும் தீர்மானிக்கப்பட்டன.

அவருடைய குடும்பத்தினர் அவருக்கு திருமணத்தை செய்துவைத்து வீட்டோடு இருக்கச் செய்வதற்கு முயற்சிகள் செய்த பொழுது  அதிலிருந்து ஒதுங்கியே வாழ்வதற்கு அவர் எல்லாவிதமான முயற்சிகளையும் செய்துகொண்டே கட்சிப்பணிகளை ஆற்றி வந்தார். அமைதியான நடவடிக்கை, அழுத்தமான அரசியல் கருத்துக்கள், கட்சித் தலைமையிடுகிற கட்டளைகளை நிறைவேற்றுவதில், அவர் காட்டிய உறுதி இவையனைத்தும் தோழர் அப்துல் வஹாப் மீது கட்சிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்கியது. எனவே அவரை எல்லா முனைகளிலும் பயன்படுத்துவது, பாதுகாப்பது, குடும்பத்தினரோடும் அவர் இணைந்து நின்று கட்சிப் பணிகளை ஆற்றுவது என்கிற தன்மையில் தொடர்ந்து அவரோடு பேச்சுவார்த்தை நடத்தி அவரை திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வைத்தனர். இந்தக் காலத்தில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கட்சிப் பணி செய்வதற்கு ஒரு இளம் கம்யூனிஸ்ட் தமிழ் தோழர் வேண்டுமென்று கேரள மாநிலக்குழு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தோழர் அப்துல் வஹாபை இடுக்கி மாவட்டத்திற்கு தமிழ் மாநிலக்குழு அனுப்பி வைத்தது. அன்றைய இடுக்கி மாவட்டம் தேயிலை, காபி, ஏலம், மிளகு போன்ற பணப் பயிர்களை உருவாக்கக்கூடிய பகுதியாக இருந்தது. அந்த மலைப்பகுதியில் வேலைக்காக தமிழகத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர். அந்தப் பகுதி கேரள மாநிலத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் அன்றைய சூழ்நிலையில் 80 சதவீதமான பேர் இடுக்கி மாவட்டத்தில் தமிழர்களே. 

அங்கு பல சிரமங்களுக்கு இடையில் பொறுப்புகளை எடுத்துக் கொண்டு கட்சி எதிர்பார்த்ததைவிட சிறப்பான முறையில் அந்தப் பணிகளை செய்தார். குறிப்பிட்ட காலத்தில் கேரளத்தில் இருந்து வந்த இளம் கம்யூனிஸ்ட்டுகளை இந்த பணியில் ஈடுபடுத்தி அவர்களிடம் அந்தப் பணிகளை ஒப்படைத்துவிட்டு மீண்டும் தமிழ்நாட்டில் தமது கட்சிப் பணிகளை துவக்கினார். இந்தக் காலத்தில் அவர் என்னுடைய கட்சிப் பணிகளுக்கு தடைவிதிக்கக்கூடிய விதத்திலோ, என்னை குடும்பத்துடன் மட்டும் நிற்க வேண்டும் என்று யார் வற்புறுத்தினாலும் நான் அதை ஏற்க முடியாது. எனவே ஒரு கம்யூனிஸ்ட் கட்சியினுடைய குடும்பத்தை சேர்ந்த பெண், என்னுடைய அரசியல் நடவடிக்கைக்கு தடை விதிக்காத பெண், காலப்போக்கில் என்னோடு இணைந்து செயல்படும் போக்கு இருந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வேன் என்று கட்சியிடம் கோரிக்கை வைத்தார். கம்பம், உத்தமபாளையம், கூடலூரில் இந்த வட்டாரத்தில் முஸ்லிம் சமூகத்தில் இருக்கிற எந்த பெண்ணும் அவருடைய குடும்பத்தினரும் இதை ஏற்கிற தன்மையில் இருப்பது கஷ்டம் என்பதினால் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அன்றைக்கு கம்யூனிஸ்ட் கட்சியில் முன்னின்று செயல்பட்ட முகமது குஞ்ஞ என்ற  தோழருடைய மகளாகிய ஆயிஷாபேகத்தை நிச்சயம் செய்து, திருமணம் நடைபெற்றது. தோழர் ஆயிஷா அவர்களும் அவர் எதிர்பார்த்ததை விட சிறப்பான முறையில் இவருடைய கட்சிப் பணிகளுக்கு உதவியாக இருந்தார். 

முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த இவருடைய மற்ற சகோதரர்கள் இவருக்கான சொத்துக்களை பிரித்து கேரளத்தில் இருக்கும் ஏலக்காட்டை இவருக்கு ஒப்படைத்தார்கள். அப்படி செய்தால் இவர் விவசாயப் பணிகளோடு நின்றுவிடுவார் என்று கருதினார்கள். ஆனால் தோழர் வஹாப், தனது மனைவியோடு பேசி கேரளத்தில் உள்ள ஏல விவசாயப் பணிகளை நீ பார்த்துக் கொள். கேரளத்தில் உள்ள கம்யூனிஸ்ட் தோழர்களும் உனக்கு உதவியாக இருப்பார்கள். என்னால் முடிந்தளவுக்கு உனக்கு உதவி செய்கிறேன். முழுமையாக நான் உன்னோடு இருப்பது கட்சிப் பணிகளுக்கு உதவாது என்று கூறியதை தோழர் ஆயிஷா பேகமும் ஏற்றுக்கொண்டார். கம்பத்திலிருந்து தன்னுடைய ஒரு வயது குழந்தையை எடுத்துக் கொண்டு கேரளத்தில் உள்ள ஏலக் காட்டுக்கே ஆயிஷா குடி சென்றுவிட்டார். இது அந்தக் காலத்தில் மிக பரபரப்பாகப் பேசப்பட்ட விஷயம். ஒரு முஸ்லிம் பெண் சொந்த ஊரை விட்டுவிட்டு அறிமுகம் இல்லாத இடத்தில் விவசாயப் பணிகளை ஏற்றுக்கொண்டு அங்கேயே தன் குழந்தையுடன் தங்கி விவசாயத்தையும் செய்வது அந்தச் சமூகத்திலேயே கேட்டிராத ஒரு விஷயம். அதில் திறம்பட செயல்பட்டு நல்ல வருமானத்தை கிடைக்கக்கூடிய விதத்தில் உற்பத்தியைப் பெருக்கி கட்சிக்கு ஒவ்வோராண்டும் பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை நன்கொடையாக வழங்குகிற தோழராக மாறினார். இதனால் அந்த வட்டாரத்தில் அவர் மீது பெரிய மரியாதையை ஏற்படுத்தியது. அதன் காரணமாக அந்த பஞ்சாயத்தின் தலைவராகவே இவரை தேர்வு செய்தனர். அந்த மாவட்டத்திலேயே சிறப்பாக பஞ்சாயத்து நிர்வாகத்தை செய்தவர் என்று பாராட்டைப் பெற்ற தோழர் ஆயிஷா அரசாங்கத்தால் கௌரவிக்கப்பட்டார்.

மலைப்பகுதியிலேயே மிகவும் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களை அணிதிரட்டுவதிலும், சங்கம் அமைப்பதிலும் மிகப் பெரிய பங்காற்றினார் தோழர் அப்துல் வஹாப். தனது மனைவியின் சம்பாத்தியத்தில் வாங்கிய சில சொத்துக்களை கூட காலப்போக்கில் கட்சிக்கு கொடுத்தவர் அவர். மேகமலை டீ எஸ்டேட் பகுதியில் உள்ள வெள்ளி மலையில் வாங்கிய சில ஏக்கர் நிலங்களை கட்சிக்கே வழங்கினார். அதுபோல மதுரை தீக்கதிருக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு காலி இடத்தை தீக்கதிர் பத்திரிகை அபிவிருத்திக்காக அந்த இடத்தை கட்சிக்கு வழங்கினார். அதுபோல அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வோராண்டும் கட்சிக்கு பல ஆயிரம் ரூபாய் நன்கொடையாக தருவது, கட்சியின் பல்வேறு விதமான அமைப்புகளின் மாநாடுகளுக்கு நிதி தருவது என்பது தொடர் நடவடிக்கையாக இருந்தது. இப்போது வரை அது தொடர்கிறது. நான் (கட்டுரையாளர்) கே.ராஜப்பன் (தேனி மாவட்டம் முன்னால் செயலாளர்) போன்ற தோழர்களை கட்சிக்குள் கொண்டு வருவதற்கான பெரு முயற்சிகளை எடுத்தவர் தோழர் வஹாப். புதிதாக ஒரு தோழர் கட்சிக்கு அறிமுகமாகிறார் என்ற தகவல் கிடைத்தால் போதும், வீடு தேடி சென்று அந்ததோழரை சந்தித்து அந்த குடும்பத்தினரோடும் நட்பாக பழகி அந்த தோழரைக் கட்சிக்குள் கொண்டுவருவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்பவர்.

அதிர்ந்து பேசாத அவருடைய பேச்சு, ஆடம்பரமில்லாத அவருடைய வாழ்க்கை, அரவணைத்துச் செல்லும் அவருடைய போக்கு, அவரோடு பழகிய தோழர்களுக்கு அவர் மீது மிகப் பெரிய பற்றை ஏற்படுத்தும். அவர் வழியில் தன்னுடைய அரசியல் நடவடிக்கையை துவக்க வேண்டும் என்ற உந்துதலை ஒவ்வொரு தோழருக்கும் ஏற்படுத்தும். புதிய தோழருக்கு தைரியமாக பொறுப்புகளை கொடுத்து அவர்களுக்கு பயிற்சியும் கொடுத்து அவர்களை சுதந்திரமாக செயல்பட வைப்பதன் மூலம் கட்சிக்குநல்ல தோழர்களை உருவாக்க வேண்டுமென்ற கோட்பாட்டோடு செயல்படக்கூடிய தோழர். தன்னை எந்த நிகழ்ச்சியிலும் முன்னிலைப்படுத்தமாட்டார். எந்த இடத்திலும் தன்னை விளம்பப்படுத்திக் கொள்ளமாட்டார். மற்றவர்கள் இவர்களை விளம்பரப்படுத்தினாலும் ஏற்றுக்கொள்ளமாட்டார். “அடக்கம் அமரருள் உய்க்கும்” என்ற வள்ளுவரின் கோட்பாட்டை உயர்த்திப் பிடித்த தோழர்என்றால் அது அப்துல் வஹாப்புக்கே பொருந்தும். மரணிக்கும் வரை அவர் தன்னுடைய கோட்பாடுகளிலிருந்து பின்வாங்கியதேயில்லை. 

அவரால் வளர்க்கப்பட்ட தோழர்கள் கட்சியில் உயர்ந்த பொறுப்புகளுக்கு வந்த பொழுது அவர்களோடு இணைந்து நின்று ஒரு கூட்டு தலைமையின் கீழ் தன்னை உட்படுத்திக் கொண்டு கட்சி எடுக்கின்ற முடிவுகளை செயல்படுத்தினார். என்னால் கொண்டு வரப்பட்டவர்கள் என்கிறதன்மையில் அவர்களிடம் மேலாதிக்கம் செலுத்துகிற வரலாறு இருந்ததில்லை. அந்த அனுபவம் எனக்கும் உண்டு. கம்யூனிச நெறிமுறைகளை மற்றவர்களுக்கு உபதேசம் செய்துவிட்டு தன்னுடையவாழ்க்கையில் அதை பின்பற்றாத போக்குகளை அவர் ஒருபொழுதும் ஏற்க மாட்டார். கம்யூனிஸ்ட்டுகள் நெறிமுறைகளின் அடிப்படையில் தான் தங்களுடைய வாழ்க்கையை வாழ வேண்டும் என்று உறுதியாக நின்ற தோழர் அப்துல் வஹாப் அவர்கள். அதனால் தான் அவரை மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்த மாணிக்கம் என்று அனைத்துத் தோழர்களும் குறிப்பிடுவார்கள்.தோழர் அப்துல் வஹாப்பின் வாழ்க்கையும் வழிமுறையும் சிறந்த கம்யூனிஸ்ட்டுகளை, புரட்சியாளர்களை உருவாக்கும். அவர் வழியில் மார்க்சியத்தை முன்னெடுத்துச் செல்ல சபதம் எடுப்போம். தோழர் அப்துல் வஹாப்பின் நாமம் நீடுழி வாழ்க!

===ஏ.லாசர், மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)===

;