articles

img

இதையெல்லாம் செய்யுமா மத்திய அரசு?

இந்தியாவில் இரண்டாவது அலை பரவிக் கொண்டிருக்க, உலகின் பல்வேறு நாடுகள் மூன்றாம், நான்காம் கட்ட அலைகளை கடந்து கொண்டிருக்கின்றன.மூன்றாம், நான்காம் அலைகளை எதிர்கொண்டாலும் கூட உலகின் பெரும்பாலான நாடுகள் பொது முடக்கத்தை தவிர்த்து, பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி பரவலாக்கல் திட்டம்  ஆகியவற்றை அமலாக்கிக் கொண்டிருக்க, நமது இந்தியாவோ, குழப்பமான பொதுமுடக்க அறிவிப்புகள், தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கைகளின் பற்றாக்குறை, மரணம் குறித்த அச்சம் ஆகியவற்றால் சூழப்பட்டிருக்கிறது.

அச்சமூட்டுகிற இத்தகைய நெருக்கடியான நிலைமைகளிலிருந்து எவ்வாறு மீளப்போகிறோம் எனும் ஒற்றைக் கேள்வியே தேசத்தின் அனைத்து முனைகளிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.இதிலிருந்து நிச்சயமாக மீண்டு வருவோம். ஆனால் அதுவொன்றும் தற்செயலாக நடந்து விடுகிற காரியமல்ல. அரசு தனது ஒட்டு மொத்த நிர்வாகத் திறனை மேம்படுத்திக் கொள்வதிலும், உறுதியான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் தான் மீட்பிற்கான துவக்கம் அடங்கியிருக்கிறது. 

$ பிஎம் கேர்ஸ் என திரட்டப்பட்ட மொத்தநிதியையும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதியையும் உடனடியாக கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பயன்படுத்த வேண்டும்.

$ நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட தடுப்பூசி திட்டத்திற்கான நிதி மற்றும் பொது சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடு ஆகியவற்றையும் உடனடியாக பயன்படுத்தவேண்டும்.

$ உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் தடுப்பூசியை பொதுத்துறை மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உட்பட இதரநிறுவனங்களும் உடனடியாக தயாரிக்க உரிமம் வழங்கப்பட வேண்டும்.

$ 200 மில்லியன் குப்பிகள் வரைதயாரிக்கும் உற்பத்தித் திறன் பெற்றிருந்தாலும் தற்போது 60 மில்லியன் குப்பிகள்மட்டுமே கோவிஷீல்டு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. ஏனெனில் இம்மருந்து தயாரிப்பிற்கான மூலப்பொருட்கள் பெரிதும்அமெரிக்காவிலிருந்து வர வேண்டியிருக்கிறது. அமெரிக்கா விதித்துள்ள தடைகள் காரணமாக இம்மருந்து தயாரிப்பில் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்திய அரசு  உடனடியாக அமெரிக்க அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி இத்தடையை முற்றாக விலக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

$ மிகவும் விலை குறைவானதும், எளிதில் கையாளக்கூடியதுமான தடுப்பூசிகளான, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி, சீனாவின் சினோவேக் மற்றும் சினோபார்ம் ஆகிய தடுப்பூசிகளை உடனடியாக இந்தியாவில் இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

$ ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பொது சுகாதாரத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 3 % நிதியை உடனடியாக அதிகரிப்பதற்கான நடவடிக்கையை எடுத்திட வேண்டும்.

$ கொரோனா நோய்த்தடுப்பு, நோய்க்கான சிகிச்சை மற்றும் தடுப்பூசி ஆகிய அனைத்து சேவைகளிலும் வணிக நோக்கமின்றி, அனைத்து  தனியார் மருத்துவமனைகளும் முழுமையாக அரசோடு இணைந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

$ மருந்துகள், தடுப்பூசி, ஆக்சிஜன், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளுக்குமான ஜிஎஸ்டி வரியை நிபந்தனைகள் ஏதுமின்றி உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

$ உலகம் முழுவதும் பரவி இருக்கும்இந்தப் புதுவகை நோயை கட்டுப்படுத்துவதற்கும், நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்குமான நடவடிக்கைகள் அனைத்தும் அறிவியல் கண்ணோட்டத்துடன் கூடியதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

$ நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு, மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகள் என அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுவதை  மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். அரசியல் கட்சிகள், அரசு சாரா தன்னார்வ குழுக்கள் என வாய்ப்புள்ள அனைத்து தரப்பினரையும் நோய்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முன்வர வேண்டும்.மிகவும் வேகமாக பரவுகிற ஒரு நோயைமுற்றாக தடுக்க முடியுமா என தெரியாதநிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதே புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்க முடியும்.செய்யுமாமத்திய அரசு?

கட்டுரையாளர்:ஆர்.பத்ரி, மாநிலக்குழு  உறுப்பினர், சிபிஐ(எம்)

;