articles

img

வர்க்க விடுதலை இலட்சியத்தில் உறுதியுடன் பயணிப்போம்...

இன்று (மே5) மாமேதை காரல் மார்க்ஸ் 203 வது பிறந்த தினம். பல தலைவர்கள், அறிஞர் பெருமக்களின் பிறந்த தினங்களை தவறாது கொண்டாடி வருகின்றோம். அவர்களுக்கும் காரல்மார்க்ஸிற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. மற்றவர்கள், மானுட சமூகத்தின் துன்பங்கள்,பிரச்சனைகள், ஒடுக்கு முறைகள் அனைத்தையும் ஆராய்ந்து  விரிவாக விளக்கினார்கள். 

 ஆனால் மார்க்ஸ் மட்டுமே, காலந்தோறும் துன்ப துயரங்களுக்கு ஆளாகி வந்த பெரும்பான்மை மக்கள், ஒரு புதிய பொன்னுலகம் கண்டிட புதிய தத்துவம் கண்டார். அவரே குறிப்பிட்டது போன்று, தத்துவ ஞானிகள்பலர் உலகின் துயரங்களை, கொடூரங்களை விளக்கியிருக்கிறார்கள்; ஆனால் அப்படிப்பட்ட உலகை எவ்வாறு மாற்றுவது என்பதுதான் அடிப்படைப் பிரச்சனை. அந்த அடிப்படை, மையப் பிரச்சனைக்குள் சென்று, மானுட வரலாற்றின் போக்கை மாற்றுவதற்கான வழி கண்டவர்கள் காரல் மார்க்ஸும் அவருடைய உற்ற தோழரான ஏங்கெல்சும்.

பிரடெரிக் ஆரூடங்கள் பல
முதலாளித்துவ சமூகம் பெருவாரியான மக்களை வேலையின்மை, பட்டினிக் கொடுமைகளுக்கு உள்ளாக்கிடும் இயல்பு கொண்டது என்று ஆதாரப் பூர்வமாக; அறிவியல் பூர்வமாக நிறுவினார்,மார்க்ஸ். இந்தக்கருத்தை பொருளாதார நிபுணர்கள் உட்பட பலர் ஏளனம் செய்தனர். குறிப்பாக இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு பொருளாதார நெருக்கடிகள் சமாளிக்கப்பட்டு உலகில் சுபிட்சம் நிலவும், ஏற்றத்தாழ்வு இல்லாமல் போகும் என்றெல்லாம்  என்று பலர் ஆரூடம் சொன்னார்கள். அதற்கு மாறாக, அடுத்தடுத்த பல இன்னல்களை பெரும்பான்மை உழைக்கும் மக்கள் சந்தித்தனர்.

 2008ஆம் ஆண்டு உலகம் முழுவதுமே உற்பத்தித் தேக்கம்,வங்கிகள் திவாலானது, தொழில் நசிவு, வேலையிழப்பு என உலக மக்கள் சொல்லொண்ணாத் துன்பங்களை எதிர்கொண்டனர். இன்றளவும் அந்த நெருக்கடிகள் நீடித்து வருகின்றன. கடந்த ஆண்டு முதல் உலக மக்களை வாட்டி வதைக்கும் கொரோனா  நோய்த்தொற்று ஏற்கனவே வருமான வீழ்ச்சிக்கு ஆளாகியிருந்த உழைக்கும் மக்களுக்கு மேலும் மேலும் வருமான வீழ்ச்சியையும் வாழ்வாதார பாதிப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளது.
 அண்மையில் பியூ ஆய்வு மையம்(Pew Research Centre ) பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் நடுத்தர நிலையில் இருந்த சுமார் மூன்று கோடியே 20 லட்சம் மக்களின் வருமானம் பெரும் அளவு வீழ்ச்சி கண்டுள்ளது என்றும், அதற்கு அடுத்த நிலையில், அடித்தட்டில் இருந்த சுமார் மூன்றரை கோடிமக்களின் வருமானமும் அதிக அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது என்றும் விவரங்களை அந்த ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. ஆக,வறுமை எனும் சாக்காட்டில்மக்கள் வீழ்வது சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. 

இந்தியா உள்ளிட்ட பல ஆசிய  நாடுகளில் உழைக்கும் மக்கள் வருமான வீழ்ச்சியால் துன்பப்பட்டு வருகின்றனர். உலகின் பல முன்னேறிய நாடுகள் உள்ளிட்டு அனைத்து நாடுகளிலும் இதே நிலை நீடித்து வருகிறது. இதில் சோசலிச முறையைப் பின்பற்றுகிற சீனா உள்ளிட்ட நாடுகள் மட்டுமே வருமான வீழ்ச்சியை தடுத்து நிறுத்தும் திறன் கொண்டவையாக விளங்குகின்றன.வருமான வீழ்ச்சி ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்க, மறுபுறம் உலகப்பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு நோய்த்தொற்று காலத்திலும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

 இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகள் அத்தனையும் சில குறைபாடுகளை சரி செய்தால் மறைந்துவிடும் என்றும் மார்க்ஸ் சொன்னது போல் அவையெல்லாம் நீடிக்காது என்றும் முதலாளித்துவ அறிஞர்கள், அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்பு ஓயாது பேசியும் எழுதியும்வந்தனர். ஆனால், இன்று ஏற்றத்தாழ்வு கற்பனைக்கெட்டாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. சுரண்டும் வர்க்கங்களுக்கும் சுரண்டப்படும் வர்க்கங்களுக்கும் இடையில் வரலாறு காணாத அளவில்  பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது.முதலாளித்துவ சமூகத்தினுடைய தீராத ஒரு நோயாக ஏற்றத்தாழ்வு இருக்கும் என்று மார்க்ஸ் ஆராய்ந்து கண்டறிந்தது உண்மையென நிரூபிக்கப்பட்டுள்ளது.முதலாளித்துவம் தன்னை சரி செய்து ‘மனிதநேய முதலாளித்துவமாக’ மாறிவிடும் என்று நம்பிக்கை தெரிவித்தவர்களின் வாதங்கள் பொய்யானவை என்று இன்றைய நடப்புக்கள் நமக்கு புலப்படுத்தி வருகின்றன.எனவே முதலாளித்துவத்தை சரிசெய்ய நினைத்தவர்கள் அதற்கு சரணாகதி அடைந்ததுதான் வரலாறு.

வர்க்கப் போராட்டமே தீர்வு 
முதலாளித்துவத்தின் தீமையை எதிர்ப்பது என்றுநிலையெடுத்து, போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுத்தபலர் வேறொரு வகையில் சிந்தித்தனர். முதலாளித்துவத்தை அடியோடு தூக்கி எறிய வேண்டும் என்கிற மார்க்ஸ் காட்டிய பாதையில் பயணிப்பதற்கு பதிலாகதனித்தனியாக அணி திரள்வது பயனளிக்கும் என்று நம்பினார்கள். அதற்கு அவர்கள் அடையாளத் திரட்டலில் ஈடுபட்டனர். எடுத்துக்காட்டாக, பெண்களை சமூக பொருளாதார இரட்டைச் சுரண்டலுக்கு ஆளாக்கும் முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்கு மாறாக,பெண்கள் மீதான கொடுமைகளை தடுத்து நிறுத்த பெண்கள் மட்டுமே இணைந்து இயக்கம் காண வேண்டும் என, பெண்ணியம் என்கிற பெயரால் பல தீர்வுகள் முன்வைக்கப்பட்டன.அதேபோன்று நிற அடிப்படையில் ஒடுக்குமுறைக்கு ஆளானவர்கள் தனித்தனியாக,அமெரிக்க கருப்பர்கள், இந்தியாவில் தலித்துகள் என்ற வகையில் ஒன்றுசேர்ந்து ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டிவிடலாம் என்கிற தீர்வினை முன்வைத்து செயல்பட்டனர்.

மார்க்ஸ் முன்வைத்த வர்க்க ஒற்றுமை, வர்க்கப் போராட்டம் என்கிற தீர்வுகளை புறந்தள்ளி தீர்வுக்கான பாதை காண முற்பட்டனர்.ஆனால் இவை அனைத்தும் முதலாளித்துவத்தை ஒழித்திடாது என்பதனை அன்றே மார்க்ஸ் கண்டறிந்தார். கம்யூனிஸ்ட் அறிக்கையில் அவர் குறிப்பிட்ட மூன்று வழிகாட்டுதல்கள் முக்கியமானவை; ஒன்று, சுரண்டப்படுகிற  உழைக்கும் வர்க்கம் வர்க்க உணர்வு பெற்று தன்னை புரட்சிகர வர்க்கமாக ஒருங்கிணைத்து, உயர்த்திக்கொள்ள வேண்டும்; இரண்டு, உழைக்கும் வர்க்கங்கள் தங்களுக்கென்று ஒரு அரசியலை, கம்யூனிச இலட்சியத்தை அடிப்படையாகக்கொண்ட அரசியல் கட்சியை வளர்த்துக்  கொள்ளவேண்டும்; மூன்று, இவை அனைத்தும் முதலாளித்துவத்திற்கு சமாதி கட்டுவதற்கு இட்டுச் சென்று, பாட்டாளி வர்க்கம் தனக்கென்று ஒரு ஆட்சி அதிகாரத்தை நிறுவிட வேண்டும்; இந்த வழிகாட்டுதல்களை மார்க்ஸ் தனது எழுத்துக்களில் விரிவாக எடுத்துரைத்தார்.

  மானுட விடுதலைக்கு இந்தப் புரட்சிகரப் பாதையே தீர்வாக அமைந்திடும். மற்றவை அனைத்தும் திசை திருப்பவும் சரணாகதிக்கும் இட்டுச் செல்லும். உலகம் முழுவதும் வர்க்கப் போராட்டம் ஓய்ந்திடாது; வரலாறு முழுவதும் வர்க்கப் போராட்டம் நீடிக்கும் என்று மார்க்ஸ் சொன்ன அந்த எதார்த்தத்தை இன்றைய உலகில் காண்கின்றோம்.முதலாளித்துவத்தை அடியோடு தூக்கி எறிகிற மாற்றத்திற்கு செல்லுகிற அந்த நிகழ்வுப் போக்கு அதிக காலம் ஆகலாம். ஆனால் இடையறாது நிகழும் வர்க்கப் போராட்டம்  பல மாற்றங்களை அவ்வப்போது ஏற்படுத்திடும்.

 தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றமானது, மத்தியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதனுடன் கைகோர்த்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் நவீன தாராளமய கொள்கைகளுக்கு எதிராக
வும், வகுப்புவாத படையெடுப்புக்கு எதிராகவும்   உழைக்கும்மக்கள் நடத்திய பல ஆண்டுகால வர்க்கப் போராட்டத்தின் விளைவாக ஏற்பட்டுள்ளது. உழைக்கும் மக்களின் ஒற்றுமை ஏற்படுத்திய ஒரு மாபெரும் மாற்றமாக கேரளாவில் மீண்டும் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி ஏற்பட்டுள்ளது.

எனவே வர்க்கப் போராட்டம் பல முன்னேற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது;  ஆனால், முதலாளித்துவ ஆட்சியாளர்களின் தாக்குதலால் பின்னடைவு ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.ஆனால் வர்க்கப் போராட்டம் தடைபடாது; எவ்வித தளர்வோ,தடுமாற்றமோ இல்லாமல் மார்க்சிய இலட்சியங்களின் மீது உறுதியாக நடை போடுவது இன்றைய காலத்தின் மிக முக்கிய தேவை; மார்க்சிய லட்சியமான உழைக்கும் வர்க்க ஆட்சியை ஏற்படுத்துவோம்; அதற்கு வர்க்கப் போராட்டத்தை தீரமுடன் முன்னெடுப்போம் என்று உறுதி ஏற்பதுதான்  மார்க்ஸ்  பிறந்த தினத்தின் மகத்துவம்.

கட்டுரையாளர் : என்.குணசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

;