வியாழன், செப்டம்பர் 23, 2021

articles

img

70 கோடி குழந்தைகளின் படிப்பு முடங்கியது..... உணவுக்காக பள்ளிகளை நம்பியுள்ளோர் 36.9 கோடி.... 77.3 கோடி வயது வந்தோருக்கு எழுத்தறிவில்லை....

கோவிட் உருவாக்கிய நெருக்கடி கல்வி சமத்துவமின்மையை பெரிதும் அதிகரித்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபைகூறுகிறது. பல நாடுகளில் எழுத்தறிவுநடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பள்ளிகள் மூடப்பட்டதால் 91 சதவிகித (160 கோடி) குழந்தைகளின் கல்வி பல மாதங்களாக பாதிக்கப்பட்டுள்ளது. பல நாடுகள் கோவிட் நீட்டிக்கப்படுவதைக் கண்டு டிஜிட்டல்கல்வியை நோக்கி நகர்ந்துள்ளன. இருப்பினும், சுமார் 70 கோடி மாணவர்கள் பள்ளிக்கு வெளியே உள்ளனர். 143 நாடுகளில், 36.9 கோடி குழந்தைகள் உணவுக்காக பள்ளிகளை நம்பியுள்ளனர். பள்ளியைத் திறக்காதது குழந்தைகளின் பசியையும் ஊட்டச்சத்துக் குறைவையும் அதிகரித்தது. இது வரும் ஆண்டுகளில் அதிக உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று ஐநா மதிப்பீடு செய்துள்ளது.

முன்னெப்போதும் இவ்வளவு குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியே நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டதில்லை. இது மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் கற்றலையும் எதிர்கால வாழ்க்கையையும் பாதிக்கும். உலகின் நாற்பத்தைந்து சதவிகிதம் ஆரம்பப் பள்ளிகள் கை கழுவும் வசதி கூட இல்லாதவை. கோவிட்டுக்கு முன்பே, 61.7 கோடி குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு அடிப்படை கல்வி கூட கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட பாதி குழந்தைகள் மற்றும் வாலிபர்களுக்கு வாசிப்பு மற்றும் கணிதத்தில் அடிப்படை தேர்ச்சி இல்லை.வயது வந்தோரில் 77.3 கோடி படிக்காதவர்கள் உள்ளனர். அவர்களில் மூன்றில் இரண்டு பங்குபெண்கள். பல வளரும் நாடுகள் தொடக்கக் கல்வியில் கூட பாலினசமத்துவத்தை அடைய முடியவில்லை. சுமார் 40 லட்சம் அகதி குழந்தைகள் தொடக்கக் கல்விக்கு வெளியில் உள்ளனர். கோவிட் முடிவடைந்தாலும், 2030 க்குள் பள்ளிக்குச் செல்ல முடியாத குழந்தைகளின் எண்ணிக்கை 20 கோடியை எட்டும் என்று ஐநா மதிப்பிடுகிறது.

அதிகரிக்கும் டிஜிட்டல் சமத்துவமின்மை
ஆன்லைன் கல்வி உலகில் டிஜிட்டல் சமத்துவமின்மையை அதிகரித்துள்ளது. சர்வதேச தொலைத் தொடர்பு சங்கத்தின் கூற்றுப்படி, உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி (370 மில்லியன்) பேருக்குஇணைய வசதி இல்லை. வளர்ச்சியடையாத நாடுகளில் நிலைமை மோசமாக உள்ளது. கிராமப்புற-நகர்ப்புற வேறுபாடுகள் மற்றும் பாலின வேறுபாடுகளும் உள்ளன.சஹாரா நாடுகளில்  93.3 சதவிகித வீடுகளில் கணினி இல்லை.புர்கினா பாசோவில், 88 சதவீத வீடுகளுக்கு மின்சாரம் இல்லை. உலகளாவிய கல்வியால் கிடைத்த பயன்கள் ஆன்லைன் கல்வியால் சிதறுண்டு போயின. இது கோவிட்டின் தொலைநோக்கு விளைவுகளில் ஒன்றாக இருக்கலாம் என்று ஐநா மதிப்பிடுகிறது. ‘டிஜிட்டல் சமத்துவமின்மையிலிருந்து எழுத்தறிவின் மனித நேயத்தை மீட்டெடுத்தல்’ என்பதே இந்த ஆண்டுக்கான உலக எழுத்தறிவு தின செய்தியாகும்.

உலக எழுத்தறிவு தினத்தையொட்டி தேசாபிமானி இணையப் பதிப்பில் வெளியான ஆய்வுக்கட்டுரை.  

தமிழில் : சி.முருகேசன் 

;