Aritcle

img

கியூப மக்களுக்கு சிரிஞ்சுகள் அனுப்பி வைப்பீர்.... இந்திய மக்களுக்கு மார்க்சிய அறிஞர் பேரா. விஜய் பிரசாத் வேண்டுகோள்....

“அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சரணடைய மாட்டோம், புரட்சியைப் பாதுகாப்போம்” என்ற முழக்கத்துடன் துணிந்து முன்வரிசையில் போராடிக் கொண்டிருக்கும் கியூப மக்களுக்கு அறிவார்ந்த உலக சமூகம் பக்கபலமாக நிற்க வேண்டிய நேரம் இது. அந்த ஒருமைப்பாடு, பொருளுதவி சார்ந்து அமைய வேண்டும். கொடுந்தொற்று அபாயத்திற்கு எதிராக ஐந்து தடுப்பூசிகள் உருவாக்கியுள்ள கியூபாவிடம், சிரிஞ்சுகள் இல்லை.கியூபாவுக்கு சிரிஞ்சுகள் அனுப்பி வைக்க சர்வதேச அளவில் பெருமுயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் இந்த வேளையில், இந்திய கம்யூனிஸ்டுகள் உடனடியாக முன்வந்து கியூப மக்களுக்கு சிரிஞ்சுகள் அனுப்பி வைக்க வேண்டும்  என்று உணர்ச்சிகரமான வேண்டுகோள் விடுத்தார் மார்க்சிய அறிஞரும், டிரை காண்டினைன்டல் சமூக ஆய்வுக் கழகத்தின் செயல் இயக்குனருமான பேரா.விஜய் பிரசாத். 

செவ்வாய்க் கிழமை மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டமுக நூல் நேரலை ஓராண்டு நிறைவு சிறப்புக் கருத்தரங்கு நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய பேரா.விஜய் பிரசாத், “கியூபாவில் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி என்று ஊடகங்கள் சொன்னது உண்மை. ஜூலை 11 அன்று சான் ஆன்டோனியோ டி லாஸ் பெனோஸ் என்ற இடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆனால், ஊடகங்கள் சொல்லாத விஷயம், அடுத்த சில மணி நேரத்தில், கியூப குடியரசுத் தலைவர் மிகயீல் தியாஸ் கேனல், ஹவானாவில் இருந்து காரில் புறப்பட்டு பிற்பகல் 1 மணிக்கு ஆர்ப்பாட்ட மையத்திற்கே நேரடியாகச் சென்று,போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் என்ன பிரச்சனை என்று பேசினார்.  அதன் பிறகு ஹவானா திரும்பியதும், “போதிய உணவுப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் சந்தையில் இல்லை; இங்கே பிரச்சனைகள் இருப்பது உண்மை; ஆனால், இதற்கு காரணம் அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து விதித்துவரும் தடைகள் தான்; அவர்களே இப்போது போராட்டங்களைத் தூண்டவும் செய்கின்றனர் என்று பத்திரிகையாளர்களை அழைத்துப் பேசவும் செய்தார்” என விவரித்தார்.

ஒரு பகுதி குடிமக்கள் போராட்டத்தில் இறங்கும்போது அந்த தேசத்தின் ஜனாதிபதி அவர்களோடு நேருக்கு நேர், முகத்திற்கு முகம் கொடுத்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் அனுபவம் வேறெங்காவது உண்டா என்று கேள்வி எழுப்பிய விஜய் பிரசாத், இந்தியாவில் 25 கோடி தொழிலாளர்கள் கடந்த ஆண்டு நவம்பர் 26 அன்று மாபெரும் வேலை நிறுத்தம் செய்தனரே, பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த ஏழு மாதங்களாக தலைநகர் தில்லியை முற்றுகையிட்டுப் போராடிக் கொண்டிருக்கின்றனரே, பிரதமர் மோடி நேரடியாகக் களத்திற்கே போய் என்ன பிரச்சனை, எதற்காகப்போராடுகிறீர்கள் என்று கேட்டதுண்டா என்றும் வினவினார். அவர் மேலும் பேசினார்:“ஜூலை 11, 12 தேதிகளில் தென் ஆப்பிரிக்காவில் டர்பன் மாநகர வீதிகளில் பயங்கர வன்முறைக் கலவரங்கள் நடைபெற்று சிலர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. ஆனால், அந்த நாட்டுத் தலைவர் சிறில் ரமபோசா நேரில் செல்லவில்லை, அறிக்கை மட்டுமே வெளியிட்டார். கியூபாவில் போராட்டம் நடைபெற்றபோது, அடுத்த நாளே, அதற்கு ஆதரவாக நிற்பதாகவும், கியூப அரசைத் தூக்கி எறியுங்கள், கியூப புரட்சியைத் தகர்த்தெறியுங்கள் என்றும் அறிக்கை வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தென் அமெரிக்க நிகழ்வுகள் குறித்து எதுவும் பேசவில்லை. அது மட்டுமல்ல, அமெரிக்காவிலேயே லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் காவல் துறையினர் அத்து மீறி காட்டுத்தனமாக அடித்து நொறுக்கும் காட்சிகள் சமூக ஊடங்களில் வலம்வந்த போதும், ஜோ பைடன் அது பற்றியும் எதுவும் பேசவில்லை.  

பெனோஸ் நகரில் ஆர்ப்பாட்டம் நடந்த அதே நாள், தலைநகர் ஹவானாவில் ஒரு லட்சம் கியூப மக்கள் வீதிகளில் இறங்கி கியூப புரட்சியை பாதுகாப்போம் என்று முழக்க மிட்டனர். தேசியக் கொடிகளோடு தங்கள் கைகளில் அவர்கள் கியூப புரட்சியின் முக்கிய போராட்டமான ஜூலை 26 இயக்க பதாகை களை உயர்த்தி ஆர்ப்பரித்தனர். அமெரிக்க ஏகாதிபத்திய முயற்சிகளுக்கு ஒரு போதும் அடிபணிய மாட்டோம் என்ற தீர்மானமான முழக்கம் அது. 

243 புதிய தடைகள்
ஏன், அமெரிக்க ஏகாதிபத்தியம் கியூபாவுக்கு எதிரான முயற்சிகளைத் தூண்டுகிறது எனில், அது, 1959ல் தோழர் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் புரட்சி வெற்றி பெற்று அரசு அமைந்தது முதல் அதை வீழ்த்த வேண்டும் என்பது அமெரிக்காவின் அரசியல் திட்டமாகும்.1960 முதல் அடுத்தடுத்து தடைகளை விதித்து எப்படி புரட்சிகர அரசை அப்புறப்படுத்துவது என்று தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறது. கியூபா மற்ற நாடுகளோடு சுதந்திர வர்த்தகம் செய்வதைத் தடை செய்தது அமெரிக்க ஏகாதிபத்தியம். ஹெல்ம்ஸ் - பர்ட்டன் சட்டம் உள்ளிட்டு எத்தனையோ தடைகளை கியூபாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்து வந்துள்ளது. கடந்த ஆண்டு, டொனால்டு டிரம்ப் 243 புதிய நடவடிக்கைகளை அறிவித்து, தடைகளை மேலும்இறுக்கினார். அயல் நாட்டிலிருந்து யாரும் பணம்அனுப்பக் கூட முடியாத அளவு கடுமையான நடவடிக்கைகள். இப்போதைய  ஜனாதிபதி ஜோ பைடன், தமது கூற்றுக்கு மாறாக, தடைகளை நீக்க முடியாதென்று மறுத்துவிட்டார்.  

இந்தக் கொடுந்தொற்றுக் காலத்தில் மேலும்தடைகளின் பிடியை இறுக்கி, குரல்வளையை நெறிக்கும் வேலையைச் செய்து வருகிறது அமெரிக்கா. இதனால் கியூபா கடுமையான நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருப்பது உண்மை. இது சமூக நெருக்கடி. அரசியல் நெருக்கடி அல்ல. இதற்கு சோஷலிச அரசு காரணமல்ல. அமெரிக்காவின் தடைகளேகாரணம். ஆனாலும், எதிர்ப்பிரச்சாரத்தை அவர்கள் செய்கின்றனர்.  

சோசலிசத்திற்கு எதிரான சூழ்ச்சிகள்
கியூபாவில் ஜூலை 11 போராட்டம் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்பு, அமெரிக்காவில் மியாமி நகரில் உள்ள நிறுவனம் ஒன்று, கியூப அரசுக்கு எதிரான மோசடியான  பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டது. கியூப புரட்சி தூக்கி எறியப்படும் என்றும் அது பேசத் தொடங்கியது. ஏன் அமெரிக்கா கியூபாவைத் தொடர்ந்து குறி வைக்கிறது எனில், சோசலிச அரசுமுறை வெற்றியடைவதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. உலகில் எங்கே சோசலிச முறையில் அரசு உருவாக்க முயற்சி நடைபெற்றாலும் அதை முறியடிப்பதில் அவர்கள் குறியாயிருப்பார்கள். கிரனடாவில் அப்படியான அரசு உருவான போது, அமெரிக்க அரசு தாக்குதல் நடத்தி அதை முறியடித்தது. இப்போது சதி என்று கூட சொல்ல வேண்டியதில்லை, வெளிப்படையாக ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளில் இறங்குகின்றனர். மியாமி நகர மேயர், கியூப புரட்சியைத் தகர்ப்போம் என்று வெளிப்படையாகப் பேசுகிறார். அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர், கியூப அரசை வீழ்த்துவோம் என்று வெளிப்படையாகச் சொல்கின்றனர்.

சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு...
அமெரிக்கத் தடைகளை மீறி ஆட்சி நடத்த, கியூபாவுக்கு முன்பு சோவியத் ஒன்றியம்பேருதவி புரிந்து வந்தது. கோர்பச்சேவ் சோவியத் ஆட்சியைப் படுகொலை செய்து சீர்குலைத்த பிறகு,  கியூபா கடுமையாக பாதிப்புற்றது. கியூபாவின் பொருளாதாரம், கரும்புப் பயிர் சார்ந்தது. அமெரிக்கா விதித்த தடைகள் காரணமாக உலக நாடுகள் கரும்பு இறக்குமதி செய்ய மறுத்த போது, மிகவும் பிரச்சனைகள் ஏற்பட்டன. வெனிசுலாவில் ஹியூகோ சாவேஸ் தலைமையில் அரசு அமைந்தபோது, புதிய உயிர்ப்பு 
கிடைத்தது. ஆனால், வெனிசுலாவுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல்கள் நடத்தத் தொடங்கியது. மூன்றாம் வாய்ப்பாக, கியூபாதனது பொருளாதாரத்தை நிமிர்த்திக் கொள்ளவெளிநாட்டுப் பயணிகளை கியூபாவைச் சுற்றிப் பார்க்க அழைப்பு விடுத்தது. கொரோனா கொடுந்தொற்று காரணமாக அந்த வாய்ப்பும் பறிபோய்விட்டது. அண்மையில் ஐ நா அவையில் 184 நாடுகள் சேர்ந்து, கியூபாவுக்கு எதிரான தடைகளை நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றின. அதில் கையெழுத்திட்ட நாடுகளில், எப்போதும் அமெரிக்க ஆதரவுப் பாதையிலேயே நடைபோடும் மோடி தலைமையிலான இந்திய அரசும் ஒன்று. அதையும் அமெரிக்க அரசு மதிக்கவில்லை. 

‘புரட்சியைத் தாழவிடோம்’
இந்தப் பின்னணியில் தான் ஒரு நெருக்கடியில் கியூபா இருக்கிறது. 1991-92 சமயத்தில் ஏற்பட்ட நெருக்கடியின் போது, கியூப தலைவர் பிடல் காஸ்ட்ரோ, ‘என்ன நடந்தாலும் சரி, தியாகங்கள் செய்வோம், தடைகளை எதிர்கொள்வோம், புரட்சியைத் தாழவிடோம், ஏகாதிபத்தியத்திற்கு அடி பணியோம்’ என்று ஒரு மகத்தான உரை நிகழ்த்தினார்.இந்தியாவில் மார்க்சிஸ்ட் கட்சி அப்போதுகியூபா மக்களோடு ஒருமைப்பாடு காப்போம்என்று ஒரு மகத்தான முயற்சி எடுத்து, இந்திய நாடு முழுவதும், நகரம் நகரமாக, கிராமம் கிராமமாக மக்களிடையே சென்று பொருளுதவி திரட்டியது.  விவசாய சங்கங்கள் உள்பட அனைவரும் வீதியில் இறங்கி அரிசி, கோதுமை என்று தானியங்கள் திரட்டினர். கொல்கத்தாவில் இருந்து புறப்பட்ட கரீபியன் இளவரசி எனும் கப்பலில் பல்லாயிரம் டன் கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருட்கள், மருந்துகள், அத்தியா வசிய பொருட்கள் அனுப்பப்பட்டன. அந்தக்கப்பல் ஹவானா கரையைத் தொட்ட அதேநேரத்தில் அங்கே விமானத்தில் சென்றடைந்தமார்க்சிஸ்ட் தலைவர்கள் ஹர்கிஷன் சுர்ஜித், எம்.ஏ.பேபி இருவரையும் ஆரத் தழுவி நன்றிபாராட்டினார் காஸ்ட்ரோ. 

அது மட்டுமல்ல, இனி அடுத்த சில வாரங்களுக்கு கியூப இல்லங்கள் எல்லாவற்றிலும் இந்திய ரொட்டி தான் உணவு என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்தார். கியூப மக்கள் இந்திய ரொட்டியை உண்பது என்பது இரண்டு தேச மக்களுக்குமான உள்ளார்ந்த நேயத்தின் பிரதிபலிப்பு. இப்போது கொரோனா காலம். நாம் இப்போதுஎன்ன செய்ய முடியும் எனில், பொருளுதவி சார்ந்த ஒருமைப்பாட்டை அவர்களோடு நிறுவ வேண்டும். 

தடுப்பூசிகள் உள்ளன; சிரிஞ்சுகள் தேவை
கொரோனா அபாயத்திற்கு எதிராக கியூபா 5 தடுப்பூசிகள் தயாரித்துள்ளது. அதில்ஒன்று வாய்வழி கொடுப்பது. மற்றவற்றை செலுத்த அவர்களிடம் சிரிஞ்சுகள் இல்லாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு உடனடியாக சிரிஞ்சுகள் அனுப்புவது இந்தத்தருணத்தில் நாம் ஆற்றக்கூடிய பேருதவியாக இருக்கும். சோசலிசப் புரட்சியைப் பாதுகாக்க,  நாசகர ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் துணிந்து நிற்கும் சின்னஞ்சிறு நாட்டு மக்களுக்கு உலகளாவிய அறிவார்ந்த மக்கள் உதவியாக நிற்கவேண்டும். 
உலக அளவில் அறுபது சதவீத சிரிஞ்சுகள் இந்தியாவில் தான் உற்பத்தி ஆகின்றன. இந்துஸ்தான் சிரிஞ்சு நிறுவனம் அதை அதிக அளவில் உற்பத்தி செய்கிறது. இந்திய கம்யூனிஸ்ட்கள் கியூப மக்களுக்கு உடனடியாக தங்களால் முடிந்த அளவு சிரிஞ்சுகள் வாங்கி கியூப மக்களுக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடுக்கும் இந்த மோசமான போரை முறியடித்து கியூபப் புரட்சியை பாதுகாப்போம் என்றும் உறுதி மேற்கொள்ள வேண்டுகிறேன்” இவ்வாறு பேரா. விஜய்  பிரசாத் உணர்ச்சிப் பெருக்குடன் வேண்டுகோள் விடுத்தார்.

முன்னதாக, கருத்தரங்கில் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ வாசுகி, கியூப புரட்சிகர அரசை அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏன் கவிழ்க்க முயல்கிறது என்பதன் பின்னணியைச் சுருக்கமாக எடுத்துரைத்தார். மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், சோசலிச அரசை பாதுகாப்பது நம் கடமை என்று தமது உரையில் குறிப்பிட்டார். மாற்று ஊடகக் குழுவினரின் கலை நிகழ்ச்சியுடன் தொடங்கிய நிகழ்வுக்கு மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ் வரவேற்புரை ஆற்றி னார். முகநூல் தொழில்நுட்பப் பணிகளை ஒருங்கிணைத்து வரும் எஸ்.கே.முருகேஷ் உள்ளிட்ட தோழர்களை சிறப்பித்த மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மத்திய சென்னை மாவட்ட முக நூல் முயற்சிஇந்தக் கொடுந்தொற்றுக் காலத்தில் தீக்கதிர் வாசிப்பு, பீப்பிள்ஸ் டெமாக்ரசி வாசிப்பு, நூல் விமர்சனம் போன்று நிகழ்வுகள் மூலம் கட்சி உறுப்பினர்களிடையே உயிரோட்டமான தொடர்பைத் தக்க வைத்திருக்கிறது என்று பாராட்டினார். 

தொகுப்பு : எஸ்.வி.வேணுகோபாலன்

இந்த கட்டுரைத் தொகுப்பு 1 மற்றும் 3 என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. தோழர்கள் தொடர்ந்து படிக்கும் வசதிக்காக இதே தொகுப்பில் ஒரே தொகுப்பாக தொகுக்கப்பட்டுள்ளது.   

;