செவ்வாய், செப்டம்பர் 29, 2020

விளையாட்டு

img

ஹர்பஜன் சிங்கிடம் காசோலை மோசடி... விசாரணைக்கு ஒத்துழைக்க அறிவுறுத்தல்

சென்னை:
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிடம் காசோலை மோசடி செய்ததாக குற்றச் சாட்டப்பட்டவரை வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உத்தண்டியைச் சேர்ந்த மகேஷ், பிரபா சேகர் ஆகிய இருவர் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிடம் இருந்து கடந்த 2015ஆம் ஆண்டு 4 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.

இந்தக் கடனுக்காக அவர்கள் அளித்த காசோலை வங்கியிலிருந்துத் திரும்பி வந்ததையடுத்து, இருவர் மீதும் ஹர்பஜன் சிங் நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.அந்தப் புகாரை அடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மகேஷ் என்பவரை கைது செய்ய நடவடிக்கைகளை மேற் கொண்டனர். இதனையறிந்த மகேஷ், தனக்கு முன்பிணை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அதில், “ 4 கோடியே 5 லட்சம் ரூபாயை திருப்பி செலுத்தி விட்ட நிலையில், வட்டி குறைப்பு பற்றி பேச்சுவார்த்தை நடந்திவந்தோம்.

இந்நிலையில், தொகையை நிரப்பாமல் கொடுத்த காசோலையில் 25 லட்சம் ரூபாயை நிரப்பிய ஹர்பஜன் சிங், அதை வங்கியில் செலுத்தியுள்ளார். ஏற்கெனவே, காசோலைக்கு பண தரவேண்டாம் என்று வங்கிக்கு கடிதம் கொடுத்திருந்ததால் அந்தக் காசோலை திருப்பி அனுப்பப்பட்டது. இதில் மோசடி ஏதும் நடைபெறவில்லை. எனவே, எனக்கு முன்பிணை வழங்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், ஹர்பஜன் சிங் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஆரம்பகட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து நீதிமன்றம், காவல்துறையினரின் விசாரணைக்கு மனுதாரர் ஒத்துழைக்க வேண்டும். புகாரின் மீது வழக்குப்பதிவு செய்யும் பட்சத்தில் முன்பிணைக் கோரி உயர் நீதிமன்றத்தை நாடலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

;