செவ்வாய், செப்டம்பர் 22, 2020

மாவட்டங்கள்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூன் 10 நெடுவாசலில் பொதுக்கூட்டம்

புதுக்கோட்டை, மே 23-தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி ஜூன் 10-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டக்குழுக் கூட்டம் ஏ.ஸ்ரீதர் தலைமையில் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் மாநிலக்குழு முடிவுகளை விளக்கிப் பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விளக்கி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:பூமிக்கடியில் இருந்து ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக வேதாந்த குழுமத்திற்கும், ஓஎன்சிஜி நிறுவனத்திற்கும் மத்திய அரசு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் காவிரி பாசனப் படுகையில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு துடிக்கிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் இப்பகுதியில் செயற்கையான ஒரு பாலைவனத்தை உருவாக்கி மனிதர்கள் வாழத் தகுதியற்ற பூமியாக மாற்றும் உள்நோக்கம் இதில் அடங்கி இருக்கிறது. தடுத்து நிறுத்த வேண்டிய மாநில அரசு மோடி அரசின் எஜமான விசுவாசத்தால் மவுனம் சாதிக்கிறது. தமிழக மக்களையும், விவசாயத்தையும் நாசமாக்கும் இத்திட்டத்தை செயல்படுத்த ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே, ஹைட்ரோகார்பன் திட்டத்தினால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதகங்களை விளக்கி ஜூன் 5-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் முழுவதும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் சக்திமிக்க அளவில் இந்த இயக்கத்தை நடத்துவதற்கு கட்சியின் மாவட்டக்குழுவில் திட்டமிடப்பட்டுள்ளது. ஜூன் 5-ம் எதிர்ப்பு இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியாக மாவட்டம் முவழுதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இதனைத் தொடர்ந்து ஜூன் 8,9 ஆகிய தேதிகளில் நமது மாவட்ட எல்லையின் ஒரு பகுதியாக உள்ள கந்தர்வகோட்டையை அடுத்த சிவியார்குடிக்காட்டிலிருந்து ஒரு குழுவும், மற்றொரு எல்லையான மணமேல்குடியில் இருந்து ஒரு குழுவுமாக இந்தப் பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது. ஒவ்வொரு குழுவிலும் சுமார் 100 பேர் கொண்ட செந்தொண்டர்கள் இரு சக்கர வாகனத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களும் பங்கேற்பர். பிரச்சாரக்குழு வரும் பகுதிகளில் உள்ள கட்சி அணியினரும் இதில் கலந்துகொள்வர். 

நெடுவாசலில் பொதுக்கூட்டம்

பிரச்சாரக் குழுக்கள் வரும் பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். இதில், கலைக்குழுக்களும் பங்கேற்கும். இரண்டு குழுக்களும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு ஜூன் 10 அன்று ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக வீரம்செறிந்த போராட்டம் நடைபெற்ற நெடுவாசலில் மண்ணில் நிறைவடையும். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறும். இதில் மாநிலத் தலைவர்கள் பங்கேற்று உரை நிகழ்த்துவர். இவ்வாறு கவிவர்மன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

;