வெள்ளி, செப்டம்பர் 25, 2020

மாவட்டங்கள்

புதர்மண்டிக் கிடக்கும் அழிஞ்சியாறு  வடிகால் வாய்க்காலை தூர் வார கோரிக்கை

சீர்காழி: சீர்காழி - கொள்ளிடம் பகுதியில் உள்ள அழிஞ்சியாறு வடிகால் வாய்க்காலை தூர் வாரக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  நாகை மாவட்டம் சீர்காழி அருகே தேனூர் மதகு பாசன வாய்க்காலிலிருந்து பிரிந்து வரும் அழிஞ்சியாறு வடிகால் வாய்க்கால், குமாரகுடி, ஓலையாம்புத்தூர், மாத்தூர், குன்னம், பெரம்பூர், மாதிரவேளூர், கொன்னக்காட்டுப்படுகை, சரஸ்வதிவிளாகம், கீரங்குடி, சித்மபரநாதபுரம் ஆகிய கிராமங்கள் வழியாக கடந்து வந்து, கொள்ளிடம் ஆற்றுப்பாலம் அருகே குத்தவக்கரை என்ற இடத்தில் கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது. இந்த அழிஞ்சியாறு சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு வடிகால் வாய்க்காலாக இருந்து வருகிறது. பிரதான தெற்குராஜன் வாய்க்கால் மற்றும் அனைத்து கிராமங்களில் உள்ள பாசன கிளை வாய்க்கால்கள் வழியாக வெளியேறும் உபரி நீர் முழுவதையும் வாங்கி கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றும் வாய்க்காலாகவும் இந்த அழிஞ்சியாறு இருந்து வருகிறது. மழைக்காலத்தில் அதிக மழை பெய்து வயல்களில் அளவுக்கு அதிகமாக தேங்கும் நீரை எளிதில் வெளியேற்றும் இந்த வாய்க்காலில், நெய்வேலி, காட்டாமணக்கு உள்ளிட்ட செடிகள் புதர்மண்டி கிடக்கின்றன. சில நாட்களில் மேலும் இந்த வாய்க்காலில் செடிகள் மற்றும் புதர்கள் அதிகமாவதுடன் வாய்க்காலும் தூர்ந்து போகும் வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி இந்த கோடைகாலத்திலேயே அழிஞ்சியாறு வடிகால் வாய்க்காலை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

;