மாவட்டங்கள்

ஓட்டுக்கு பணம் வாங்க மறுத்த மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது தாக்குதல்: ஆளுங்கட்சியினர் அராஜகம்

தரங்கம்பாடி, மே 10-திருக்கடையூர் அருகே சிங்கானோடை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களை வீடு புகுந்து தாக்குதல் நடத்திய அதிமுகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளதோடு, இச்சம்பவத்திற்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.நாகை மாவட்டம் திருக்கடையூர் அருகே சிங்கானோடை பாரதியார் தெருவில் வசிக்கும் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த சிங்காரவேலு, சீனிவாசன், சண்முக வடிவேல் அய்யப்பன், ராஜவேலு உள்ளிட்டோர் திமுக வேட்பாளருக்கு வாக்கு அளித்துள்ளனர். அதிமுகவுக்கு ஓட்டுப் போட சொல்லி பணம் கொடுத்ததை வாங்க மறுத்ததோடு, மற்ற மக்களும் பணத்தை வாங்க மறுத்து திமுகவுக்கு தான் ஓட்டு போடுவோம் என கூறியதை கேட்ட அதிமுகவை சேர்ந்த பஞ்சாயத்து என்பவரின் மகன் ராஜேந்திரன், பாலு மகன் பிரபாகரன், உத்திராபதி மகன் சிலம்பரசன், சேகர் மகன் ஆனந்தராஜ், ராஜகோபால் மகன் ராமகிருஷ்ணன் ஆகியோர் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியினரை ஆபாசமாக திட்டி தொடர்ந்து பிரச்சனை செய்து வந்ததோடு, வியாழனன்று இரவு வீடு புகுந்து தாக்கியுள்ளனர்.இது சம்பந்தமாக இருதரப்பினரையும் காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சம்பவம் நடந்த கிராமத்திற்கு சென்ற கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் டி.சிம்சன் மக்களுக்கு ஆறுதல் கூறினார். காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தோல்வி பயம் காரணமாக அதிமுகவினர் இது போன்ற கீழ்தரமான, அராஜக போக்கில் நடப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

;