வெள்ளி, செப்டம்பர் 25, 2020

மாவட்டங்கள்

பைக்-வேன் மோதல் : இருவர் பலி; 10 பேர் காயம்

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்ற வேன் மீது பைக் மோதிய விபத்தில் இருவர் பலியாகினர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த அதிராம்பட்டினம் காந்திநகரை சேர்ந்தவர் சமுத்திரம் மகன் முத்து (18). இவர் செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணிக்கு அதிராம்பட்டினத்தில் இருந்து வீட்டிற்கு ஹீரோ ஹங் பைக்கில், கிழக்கு கடற்சாலையில் அசுர வேகத்தில் சென்றுள்ளார்.  திருவாரூர் மாவட்டம் பின்னத்துார் கிராமத்திலிருந்து திருமண நிகழ்ச்சியாக மணப்பெண் உட்பட 10 பேர் திண்டுக்கல் மாவட்டம் டி.பள்ளப்பட்டியை நோக்கி மகேந்திரா வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பைக்கில் அசுர வேகத்தில் சென்ற முத்து, வேனில் நேருக்கு நேராக மோதியுள்ளார்.  இவ்விபத்தில் முத்து, வேன் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த சண்முகசுந்தரம்(39) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், வேனில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அதிராம்பட்டினம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.     

;