மாநிலங்கள்

img

கூட்டணி தலைவரை அவமானப்படுத்தி வெளியேற்றிய ஆதித்யநாத்

லக்னோ:

உத்தரப்பிரதேச பாஜக கூட்டணி கட்சிகளில் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியும் ஒன்றாகும். அந்த கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பதவி வகித்து வந்தார். மேலும் அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் சிலரும் இணை அமைச்சர்களாக பொறுப்பில் இருந்தனர்.


எனினும் முதல்வர் ஆதித்யநாத், தங்களைமதிப்பதில்லை ஓம் பிரகாஷ் ராஜ்பர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். ஆதித்யநாத் அரசின் தவறான நடவடிக்கைகளை சாடுவதற்கும் அவர் தயங்கவில்லை.இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் ராஜ்பர் கட்சியை, கழற்றிவிட முடிவு செய்த பாஜக, அவர்களை தாமரைச் சின்னத்தில் போட்டியிட நிபந்தனை விதித்தது.


எதிர்பார்த்ததைப் போலவே, அதனை மறுத்துவிட்ட ராஜ்பர், மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து, 39 தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் களமிறக்கினார். ஏனையஇடங்களில் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதாக அறிவித்த ராஜ்பர் ஒருகட்டத்தில், நேரடியாகவே காங்கிரசை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். அந்த பிரச்சாரத்தில், பாஜகவை மிகக் கடுமையாக சாடிய அவர், பாஜக உறுப்பினர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்ற அளவிற்கு கோபத்தை வெளிப்படுத்தினார்.


அவரது இந்த பேச்சு உத்தரப்பிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பாஜக வழங்கிய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அதிரடியாக அறிவித்தார். அதற்கான கடிதத்தையும் பாஜகமுதல்வர் ஆதித்யநாத்துக்கு அனுப்பினார். ஆனால் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள் ளாத ஆதித்யநாத், ராஜ்பரை அவமானப்படுத்தும் வகையில், அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு ஆளுநருக்கு பரிந்துரை செய்தார். இதேபோல் இணை அமைச்சர் அந்தஸ்து கொண்ட பதவிகளில் இருக்கும், சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் மற்ற உறுப்பினர்களையும் உடனடியாக நீக்க பரிந்துரை செய்தார். 


ஆதித்யநாத்தின் அந்த கடிதத்தை ஏற்றுக்கொண்டு, ஓம்பிரகாஷ் ராஜ்பர் மற்றும் அவரது கட்சியினரை பதவியிலிருந்து நீக்கி, ஆளுநர் ராம் நாயக் உத்தரவிட்டுள்ளார்.

;