செவ்வாய், ஆகஸ்ட் 11, 2020

பொருளாதாரம்

img

ஆளுங்கட்சி அரசியல் தலையீட்டால் ரூ.300 கோடி வரைமுறையின்றி செலவு - செ.கவாஸ்கர்

கணக்கு கொடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்

சென்னை மாநகராட்சியில் கொரோனா ஒழிப்புப் பணிக்கு ரூ.  300 கோடிக்கு மேல் செலவிடப் பட்டுள்ளது. அதில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் கீழ் சென்னை வடக்கு, தெற்கு, மத்தி என 3 வட்டாரங்களும், அவற்றின் கீழ் 15 மண்டலங் களும் உள்ளன. இந்த மண்டலங்களில் 200 வார்டுகள் உள்ளன. கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் 22 அன்றும் அதன்பிறகு மார்ச் 24 நள்ளிரவிலிருந்தும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு பணிகள், தனிமைப்படுத்தும் மையங்கள் அமைத்து பராமரிப்பது, துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உணவு, குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பது, சுண்ணாம்பு, பிளிச்சிங் பவுடர் போடுவது, தொழிலாளர்களுக்கு முகக்கவசம், கையுறை வழங்குவது, தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைப்பது என ஏராளமான பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இதுவரை மண்டல அலுவலகங்கள் மற்றும் வட்டார அலுவலகங்களுக்கு மார்ச் 22 முதல் ஏப்.20 வரை முன்பணமாக சுமார் 18 கோடி ரூபாயை ஒதுக்கியது.

இதன்பின்னர், சென்னை மாநகராட்சியின் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக தற்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.  ராதாகிருஷ்ணன்  நியமிக்கப்பட்டார். அதன் பிறகு மண்டலவாரியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மேலும் ஜூன் 5 அன்று தலா 3 மண்டலங்களுக்கு ஒருவர் என அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ், ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்தப்பட்டியலில் பின்னர் கே.பாண்டியராஜனும் இணைக்கப்பட்டார். இதற்குப் பிறகும் கொரோனா தொற்று  அதிகரிப்பது குறையவில்லை.  இதன்பின்னர் செலவினங்கள் ‘சூடு’ பிடிக்கத் தொடங்கின. அதற்கேற்ப பல கோடி ரூபாய் தவணை  முறையில் மண்டலங்களுக்கு முன்பணமாக வழங்கப்பட்டது. மாநகராட்சியின் கொரோனா தடுப்பு செலவு 300 கோடி ரூபாயைத் தாண்டியது. (சென்னை மாநகராட்சி ஆணை யாளர் கோ.பிரகாஷ், கடந்த 5ஆம் தேதி ஒரு நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இதனைத்  தெரிவித்துள்ளார்).

8 கேட்பு அறிக்கைகள்

இந்நிலையில் முன்பணமாக கொடுக்கப்பட்ட தொகைக்கு கணக்கு அனுப்புமாறு மாநகராட்சி நிதித்துறை கடந்த மே 2ஆம் தேதி முதல் மின்னஞ்சல், கம்பியில்லா அலைபேசி செய்தி ஆகியவற்றின் வாயிலாக 5 முறை கணக்கு கேட்டுள்ளது. இது தவிர்த்து 4 முறை நினைவூட்டல் கடிதத்தை யும் அனுப்பியுள்ளது. ஆனாலும், கணக்கு விவரங்களை மண்டல அலுவலர்கள் அனுப்பாமல் உள்ளனர். இறுதியாக ஜூன் 30 அன்று அனுப்பிய நினைவூட்டல் கடிதத்தில், ‘முன்பண தொகைக்கான கணக்கை வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று சமர்ப்பிக்காத நிலையில், நிர்வாக அலுவலரும், மண்டலங்களின் பொறியியல் துறை கண்காணி ப்பாளரும் பொறுப்பாவார்கள்’ என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரித்தபோது, “அதிகாரிகள் பொறுப்பாக இருந்து செலவிட்டபோது சிறுசிறு முறைகேடுகள் நடக்கும். கொஞ்சம்  கமிஷன் அடித்தாலும் ரசீது வைத்து ஈடுகட்டும் வகை யில் இருக்கும். ஆனால், அமைச்சர்கள் பொறுப்பாக வந்த பிறகு, அவர்கள் சொல்லும் நபர்களுக்கே, சொல்லும் தொகைக்கு வண்டி, உணவு உள்ளிட்ட அனைத்து காண்ட்ராக்ட்டுகளையும் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. காண்ட்ராக்ட் எடுத்தவர்கள் அதன்படி நடக்கவில்லை. மண்டலம் 11, மண்டலம் 15 ஆகியவற்றில் உணவு காண்ட்ராக்ட் மாறிக் கொண்டே இருக்கிறது. இருப்பினும் தரமான உணவு கிடைக்கவில்லை. உணவில் புழு, கரப்பான் பூச்சி இருப்பதாக ஊழியர்கள் புகார் தெரிவித்தனர். உதார ணத்திற்கு மண்டலம் 4ல் சாந்திவிலாஸ் ஓட்டலில் உணவு வாங்கி கொடுத்துக் கொண்டு இருந்தனர். ஆளும்கட்சி தலை யீட்டால் மாவட்டச் செயலாளர் பினாமிகளுக்கு காண்ட்ராக்ட் மாற்றப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தகடுகள் வைத்து தடுப்பு அமைக்கப்படுகிறது. கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களுக்கு சென்று, அங்குள்ளவர்களை அதிகாரிகள், ஆளும்கட்சியினர் மிரட்டி தகடுகளை கொண்டு வந்து தடுப்பு அமைக்கின்றனர். அவற்றிற்கும் போலி பில் கொடுத்து பணம் வசூலிக்கின்றனர்.  ஒருசில பணிகளுக்கு செயற்கையாக ஒப்பந்தம் கொடுக்கின்றனர். 3 நிறுவனத்திடம் ‘கொட்டேசன்’ பெற்றதாக ஆவணத்தை உருவாக்கி, பினாமிகளுக்கு ஒப்பந்தம் கொடுக் கின்றனர். அதனால்தான் பல பணிகள் தரமற்றதாகஉள்ளன.

ஒரு மண்டலத்திற்கு 2 பிரச்சார வாகனங்கள் அமர்த்தப் பட்டன. ஒரு வண்டி ஒரு நாளைக்கு 180கி.மீ. சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும். அதன்படி ஒரு வண்டி கூட இயக்கப்பட்ட தாகத் தெரியவில்லை. ஒரே இடத்தில் நிறுத்தி வைத்து  பேசிவிட்டு, பெட்ரோல், வாடகை, பேட்டா என வசூலிக்கின்ற னர். இதேபோன்று உணவு, பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு, சானி டைசர் என அனைத்திலும் நடந்துள்ளதாகத் தெரிகிறது. வாங்கி யதை விட குறைவான தொகைக்கே ரசீது தருகிறார்கள். இதனால் கணக்கு கொடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர். இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தினால் ரூ. 300 கோடியில் 30 முதல் 40 சதவீதம் வரை  ஊழல் நடந்ததைக் கண்டுபிடிக்க முடியும்” என்று நேர்மை யான அதிகாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.

“சென்னை மாநகராட்சியில் நிலவும் முறைகேடுகளால் ஊழியர்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். துப்புரவு தொழி லாளர்களுக்கு மட்டுமே ஓரளவுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. சாலை, பூங்கா, மலேரியா, மின்சாரம், அம்மா உணவகம் போன்றவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு முகக்கவசம், கையுறை, சானிடைசர் கூட கொடுப்பது இல்லை. பலகோடி செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தொழிலாளர்களுக்கு உபகரணங்கள் கூட முறையாக கிடைக்காத நிலை உள்ளது” என்று சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.சீனிவாசுலு கூறுகிறார்.

இவை குறித்தெல்லாம் முழுமையான விசாரணை நடக்குமா என்பதுதான் கேள்வி?


 

;