சனி, செப்டம்பர் 26, 2020

பொருளாதாரம்

img

அமெரிக்காவிடம் ராணுவ ஹெலிகாப்டர்கள் வாங்கும் இந்தியா

டிரம்ப் வருகையின்போது கையெழுத்தாகும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கான வர்த்தகம்

புதுதில்லி, பிப்.12- அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பிப்ரவரி 24-ஆம் தேதி இந்தியா வரவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறி விப்புகள் வெளியாகியுள்ளன. தனது சிறந்த நண்பரான- இந்தியப் பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் உள் ளேன் என்று டிரம்ப்பே, பயணத்தை உறுதி செய்திருக்கிறார். டிரம்பின் வருகை குறித்து, கடந்த சில மாதங்களாகவே பேச்சு அடிபட்டு வந்தது, என்றாலும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் செய்யப்படவில்லை. அமெரிக்கா உடனான வர்த்தகம் குறித்து, இந்தியாவிடமிருந்து சாதக மான ‘சமிக்ஞைகள்’ வராமல் இருந்ததே, இதற்குக் காரணம் என்று செய்திகள் வெளியாகின. வர்த்தக அடிப்படையில், அமெரிக்கா வுக்கு மிகவும் நெருக்கமான நாடுகளின் பட்டியலில் (Generalized System of Preferences) இந்தியா இருந்து வந்தது. ஆனால், சீனா உடனான வர்த்தகப் போரையொட்டிய காலத்தில், இந்தியா வை முன்னுரிமை நாடுகள் பட்டியலில் இருந்து டிரம்ப் நீக்கினார். இதனால் இந்தியா இறக்குமதி செய்யும் சுமார் 5.6 பில்லியன் டாலர் அளவிற்கான வர்த்த கப் பொருட்கள் மீதான வரி உயர்ந்தது. இந்தியாவும் தனது பங்கிற்குச் சுமார் 12-க்கும் அதிகமான அமெரிக்கப் பொருட்களின் மீது வரியை விதித்தது. இந்த சூழலில், இந்தியா - அமெ ரிக்கா இடையிலான இந்த வர்த்தகப் பிரச்சனையைச் சரி செய்யவும், அமெ ரிக்காவின் வர்த்தகத்தை அதிகரிக்கவும் டிரம்ப் இந்திய பயணத்திற்குத் திட்ட மிட்டார். இந்தியாவும் அதை விரும்பி யது.

எனவே, இந்தியா மீண்டும் அமெரிக்க வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டிய லில் சேர்க்கப்பட வேண்டும் என்றால், சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண் டும் என்று டிரம்ப் கூறினார். முக்கியமாக அமெரிக்கப் பொருட்களுக்கு வரிக் குறைப்பு செய்யப்பட வேண்டும்; 5 முதல் 6 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை அமெரிக்காவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்ய வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதுதொடர்பாக கடந்த சில மாதங்க ளாக பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. அதில் இந்தியாவின் முடிவைத் தெரிந்து கொள்வதற்காக டிரம்ப் தனது இந்தியப் பயணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே போனார். ஆனால், பிப்ரவரி 24, 25 ஆகிய இரண்டு நாட்கள், இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யவிருப்பதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தற்போது உறுதிப் படுத்தியுள்ளார். டிரம்ப்பின் வர்த்தக நிபந்தனைகளுக்கு மோடி அரசு ஒப்புக்கொண்டதே இதன் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் இருந்து இறக்கு மதி செய்யப்படும் மருத்துவ உபகர ணங்கள் மீது விதிக்கப்பட்ட அதீத வரி யைக் கணிசமாகக் குறைக்க வேண்டும்; அமெரிக்காவின் பண்ணை உற்பத்தி பொருட்கள், பால் பொருட்களுக்கு வரியை குறைக்க வேண்டும் என்பது டிரம்ப்பின் நிபந்தனை. அதனை இந்தியா ஏற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல அமெ ரிக்கத் தயாரிப்பான ஹார்லி டேவிட்சன் இருசக்கர வாகனத்தின் மீது விதித்த வரியில் 50 சதவிகிதத்தைக் குறைக்க வும் மோடி அரசு ஒப்புக் கொண்டுள்ள தாக செய்திகள் தெரிவிக்கின்றன. அனைத்திற்கும் மேலாக, அமெ ரிக்காவைச் சேர்ந்த ராணுவ உபகர ணங்கள் மற்றும் ஆயுதத் தயாரிப்பாள ரான லாக்ஹீட் மார்டின் நிறுவனத்திடம், இந்தியா 2.6 பில்லியன் டாலர் (சுமார் 18 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) மதிப்பி லான 24 சீஹாக் ரக ராணுவ ஹெலி காப்டர்களை (24 MH-60 Romeo Seahawk Helicopters) வாங்கும் ஒப்பந்தத்திற்கும் இந்தியா தலையாட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மகிழ்ச்சியான செய்திகளைத் தொடர்ந்தே, டிரம்ப் தனது இந்தியப் பய ணத்தை உறுதி செய்துள்ளதாக கூறப்படு கிறது. மோடி மீதும் அவர் அன்பைப் பொழிந்துள்ளார். டிரம்ப் தனது இந்தியப் பயணத்தை, புதுதில்லி மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கு செல்லும் வகையில் அமைத்துள்ள நிலையில், அவருக்கு ஒபாமாவிற்கு அளித்ததை விட மிகப் பெரிய வரவேற்பை அளிப்பதற்கான ஏற்பாடுகளில் மோடி அரசு இறங்கி யுள்ளது.

;