வெள்ளி, செப்டம்பர் 25, 2020

பொருளாதாரம்

img

நூறுநாள் வேலைத்திட்ட நிதி ரூ.5812 கோடி மாநிலங்களுக்கு பாக்கி...கிராமப்புற வறுமையை அதிகரித்த மோடி அரசு

புதுதில்லி:
தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) அண்மையில் கசியவிட்டநுகர்வோர் செலவினக் கணக்கெடுப்பில்,“2011-12 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது2017-18 ஆம் ஆண்டில் கிராமப்புறங் களின் சராசரி மாதச் செலவில் 8.8 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தது.“கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களின் ஊதியம் ஜூலை மாதத்தில் 3.4 சதவிகிதம் அளவிற்கு குறைந்துள்ளது; அதே ஜூலை மாதத்தில் விவசாயத் தொழிலாளர்களின் நுகர்வோர் விலைப் பணவீக்கம் 6.21 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள்ளது” என்று தொழிலாளர் துறையும் 2019 அக்டோபரில் அறிக்கை வெளியிட்டது.

இவ்வாறு கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களின் வருமானம்- வாங்கும் சக்தி குறைந்ததற்கு, 2016 பணமதிப்பு நீக்கத்தால் வேளாண்துறை, தொழிற்துறை உட்பட அனைத்துத் துறைகளில் ஏற்பட்ட பாதிப்பு, வேலையிழப்பு, பணப்புழக்க குறைவு போன்ற பல காரணங்கள் இருந்தாலும், நூறுநாள் வேலைத்திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசியஊரக வேலையுறுதித் திட்டத்தின் மோசமான அமலாக்கமும் இதில், முக்கியப் பங்கு வகித்தது தெரியவந்துள்ளது.கிராமப்புற வேலைவாய்ப்பின் மைக்கு ஒரு நிவாரணம் அளிக்கும் வகையிலும், அங்குள்ள மத்தியில் பணப்புழக் கத்தை ஏற்படுத்தி, வாங்கும் சக்தியை கொண்டுவரவும் மகாத்மா காந்தி தேசியஊரக வேலையுறுதித் திட்டம் பயன்பட்டது. இடதுசாரிகளின் தலையீட்டால்,முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டம், கிராமப்புற வாங்கும் சக்தியில் குறிப்பிடத்தக்க மாற்றத் தையும் ஏற்படுத்தியது.ஆனால், 2014-இல் மத்தியில் பாஜகஆட்சிக்கு வந்தபிறகு, நூறுநாள் வேலைத் திட்டம் திட்டமிட்டு சீர்குலைக்கப்பட்டது. நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது. வேலைநாட்கள் குறைக்கப் பட்டன. காலதாமதமின்றி உரிய நேரத்தில் ஊதியம் வழங்குவதிலும் அலட்சியம்காட்டப்பட்டது.

இதுவே, 2011-12 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 2017-18 ஆம் ஆண்டில் கிராமப்புறங்களின் சராசரி மாதச் செலவில் 8.8 சதவிகிதம் சரிவு ஏற்பட்டதற்கும் கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களின் ஊதியம் ஜூலை மாதத்தில் 3.4 சதவிகிதம் குறைந்து போனதற்கும் காரணம் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தேசிய புள்ளியியல் அலுவலகம் மற்றும் தொழிலாளர்துறை அறிக்கைகள் அதையே பிரதிபலித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.2019 நவம்பர் 25 வரையிலான கணக் கின் அடிப்படையில் மட்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தின் கீழ், மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய சுமார் ரூ. 5 ஆயிரத்து 812 கோடி நிதியை, மத்தியஅரசு வழங்காமல் உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத் தில் வெளியிடப்பட்ட தரவுகளின்படியே, பாஜக ஆட்சியில் இல்லாத ஆந்திரா, மேற்குவங்கம், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மட்டும் சுமார் 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் வரை பாக்கி வைக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவிற்கு ரூ. 767 கோடி, மேற்கு வங்கத்திற்கு ரூ. 683 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ. 633 கோடி,மத்தியப் பிரதேசத்திற்கு ரூ. 329 கோடி,கேரளத்திற்கு ரூ. 203 கோடி வழங்கப்படவில்லை.இதேபோல பாஜக ஆளும் கர்நாடகாவுக்கு ரூ. 603 கோடி, பீகாருக்கு 378 கோடி,மணிப்பூருக்கு ரூ. 371 கோடி, அசாமிற்கு ரூ. 205 கோடி மற்றும் ஜார்க்கண்டிற்கு ரூ. 170 கோடி, கோவாவிற்குரூ. 44 லட்சம் என நிலுவைத் தொகைகள் உள்ளன. ஜம்மு- காஷ்மீருக்கு 125 கோடி வழங்கப்பட வேண்டும்.இதனால் மாநிலங்கள் உரிய நேரத்தில், நூறுநாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் போனதுடன், சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.மகாத்மா காந்தி வேலையுறுதித் திட்டஊதியம் 2016-17 நிதியாண்டில் தாமதம் செய்யப்பட்டது குறித்து ராஜேந்திரன் நாராயணன், சக்கினா தோராஜிவாலா மற்றும் ராஜேஷ் கோலன் ஆகியோர் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.2016-–2017 நிதியாண்டில் 10 மாநிலங்களில் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளை, இவர்கள் ஆய்வுசெய்ததில், 21 சதவிகித அளவிற்கேசரியான நேரத்தில் ஊதியம் வழங்கப் பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

வேலை வாரம் முடிந்த 15 நாட்களுக்குள் தொழிலாளி ஊதியம் பெற வேண்டும் என்று சட்டம் கூறுகிறது, அவ்வாறில்லையேல் தாமதத்திற்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இவ்வாறான இழப்பீடு என்ற வகையில் மட்டும் சுமார் 36 கோடி ரூபாய் பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.“கிராமப்புற பொருளாதாரத்தை பாதிக்கும் அனைத்துத் துறைகளும், நாட்டில் தற்போது நெருக்கடியில் உள்ளன. இந்நிலையில் ஏழைகளின் கைகளில் அதிக பணம் புழங்குவதற்கான திட்டங்கள் வேண்டும். அதற்கான ஏற்பாடுகளில் ஒன்றுதான் நூறுநாள் வேலைத்திட்டம்; ஆனால், இந்த அரசாங்கம் ஏழைகளை கவனிப்பதில்லை” என்று குற்றம் சாட்டுகிறார், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் துறை பேராசிரியர் ஹிமான்ஷூ.“மிகவும் ஏழ்மையில் இருப்பவர்களை, அரசாங்கம் தொந்தரவு செய்வது உண்மையில் குற்றமாகும். நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் என்பதே, சந்தை ஊதியத்தில் பாதிதான். அந்த ஊதியம் அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், உரிய ஊதியத்தை வழங்குவதில் கூட தாமதம் செய்யப்படுகிறது. இது அதிகமான மக்களை வறுமையில் தள்ளும். வாங்கும் சக்தியை குறைந்து, அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும்” என்றும் ஹிமான்ஷூ கூறுகிறார்.

;