வெள்ளி, ஆகஸ்ட் 14, 2020

பொருளாதாரம்

img

22 உணவுப் பொருட்களின் விலைகள் கடும் உயர்வு... வெங்காய விலை 4 மடங்கு பாய்ச்சல்

புதுதில்லி:
நடப்பு நிதியாண்டில் அரிசி, பருப்பு, கோதுமை, பால் உள்ளிட்ட 22 அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் கடும் உயர்வை சந்தித்துள்ளதாகவும்; குறிப்பாக கடந்த மார்ச் மாதத்துக்குப்பின் வெங்காயத்தின் விலை மட்டும் 4 மடங்கு உயர்ந்துள்ள தாக மத்திய அரசே ஒப்புக் கொண்டுள்ளது.கடந்த 10 மாதங்களுக்கான உணவுப் பொருட் களின் விலை உயர்வு குறித்து, நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

மேலும், உணவுப் பொருட்கள் விலை உயர்வு குறித்தும், அதைத் தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், விலைவாசி உயர்வதற்கான காரணம் குறித்தும் கேட்டிருந்தனர். அவற்றுக்கு மத்திய நுகர்வோர் விவகாரத்துறை மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அண்மையில் பதில் அளித்துள்ளார்.அதில் “கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி நிலவரப்படி வெங்காயத்தின் விலை சராசரியாகக் கிலோ 81 ரூபாய் 90 பைசாவாக இருக்கிறது; ஆனால், கடந்த மார்ச் மாதம் 15 ரூபாய் 87 பைசாவாக மட்டுமே இது இருந்தது” என்று தெரிவித்துள்ளார். கடந்த 9 மாதங்களில் வெங்காயத்தின் விலை மட்டும் 4 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.இதேபோல அரிசி, கோதுமை ஆகியவற்றின் விலைகள் 10 சதவிகிதம்; பருப்பு வகைகளின் விலைகள் 30 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள் ளன. காய்கறிகள், குறிப்பாக உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம், சமையல் எண்ணெய், தேயிலை, சர்க்கரை, பால் உள்ளிட்ட 22 அத்தியாவசியப் பொருட்களின் விலையும் சீராக உயர்ந்துள்ளது என்று பஸ்வான் ஒப்புக் கொண்டுள்ளார்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், உணவுப்பொருட்களின் விலைகள் உயர்ந்து, பணவீக்கம் 5.54 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.நாட்டின் பணவீக்கம் குறித்த புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், கடந்த அக்டோபர் மாதத்தில் 4.6 சதவிகிதமாக இருந்த பணவீக்கம், நவம்பர்  மாதத்தில் 5.54 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதே பணவீக்கம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 3.2 சதவிகிதமாகவும், செப்டம்பரில் 3.9 சதவிகிதமாகவும் அதிகரித்திருந்தது.தற்போதைய உணவுப் பொருட்கள் விலை பணவீக்கமானது, கடந்த 3 ஆண்டுகளில் இல்லாதஉயர்வாகும். இதற்கு முன்பு கடந்த 2016-ஆம் ஆண்டில் அதிகபட்சமாக உணவுப் பொருட்கள் பணவீக்கம் 6 சதவிகிதமாக இருந்தது. தற்போது மீண்டும் 6 சதவிகிதத்தை நெருங்கியுள்ளது.பணவீக்கம் உயர்வு எதிரொலியாக காய்கறிகளின் விலை 36 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக பருப்பு வகைகள் 14 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்துள்ளன.

;