பொருளாதாரம்

img

தனியாருக்கு கோடிக்கணக்கில் சாலைப் பராமரிப்பு நிதி

கொரோனா மருத்துவச் செலவுக்கு வழங்கப்படுமா?

திருப்பூர், ஜூலை 30 – தனியாருக்கு சாலைப் பராமரிப்பு நிதியாக ஒதுக்கும் கோடிக்கணக்கான ரூபாயை கொரோனா தொற்றில் இருந்து மக்களை மீட்பதற்கு மருத்துவச் செலவு செய்ய பயன்படுத்தும்படி தமிழ்நாடு சாலைப் பணியாளர் சங்கம் கோரியுள்ளது. அதேசமயம் சாலைப் பராமரிப்புப் பணியை இரவு, பகலாகச் செய்வதற்கு தயாராக இருப்பதாக வும் சாலைப் பணியாளர் சங்கத்தின் சார்பில் உறுதியளிப்பதாகக் கூறியுள்ளனர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மா.பாலசுப்பிரமணியம், பொதுச் செயலாளர் ஆ.அம்சராஜ் ஆகியோர் புதன்கிழமை விடுத்துள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:  தமிழகத்தில் 2.61 லட்சம் கிலோமீட்டர் நீள சாலைகளில் நெடுஞ்சாலைத் துறையின் மூலம்  66ஆயிரத்து 39 கிலோமீட்டர் நீள நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அதேசமயம் மத்திய, மாநில அரசுகளின் புதிய பொருளாதாரக் கொள்கை கள், உலகமய, தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் என அரசுத் துறைகளில் தனியாரைப் புகுத்துவது செயல்வடிவம் பெற்றதால் நெடுஞ்சாலைப் பராமரிப்பும் தனியார்வசம் அளிக்கும் கொள்கை முடிவை அரசு மேற்கொண்டது.  இதனால் கடந்த 2002ஆம் ஆண்டு 10 ஆயிரம் சாலைப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யவும் உத்தரவிடப்பட்டது. 41 மாத கால வேலையிழப்புக் காலத்தில் தொடர்ச்சியாகப் போராடியதுடன், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாகவும் சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டது. ஆனால், சாலைப் பராமரிப்பைத் தனியாருக்கு வழங்கும் தமிழக அரசின் கொள்கை முடிவு இதுவரை திரும்பப் பெறப்படாமல் உள்ளதால் இப்பணி தொடர்ந்து தனியாருக்கு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலைகளை நீண்ட கால பராமரிப்பு ஒப்பந்த அடிப்படையில் ஒரே நிறுவனம் ஐந்தாண்டுகள் பராமரிக்க வழங்கப்பட்டுள்ளது. இதன்படி 2014ஆம் ஆண்டு முதல் ஒரு கோட்டத்தில் உள்ள மொத்த சாலை களும் தனியார் பராமரிப்புக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தனியார் பைகள் நிரம்புகின்றன

பொள்ளாச்சிக் கோட்டத்தில் 378.388 கி.மீ., நீள சாலைகளை தனியார் பராமரிக்க ரூ.233.93 கோடி ஒதுக்கீடு செய்து எஸ்பிகே அன் கோ என்ற நிறுவனத்துக்கு 2014ஆம் ஆண்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் காரணமாக அரசு கஜானாவில் சேமிக்க வேண்டிய 133.93 கோடி  சேமிக்க வேண்டிய தொகை தனியார் முதலாளிக்கு வழங்கப்பட்டது. இதே பணியை நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் மேற்கொண்டிருந் தால் ரூ.100 கோடி மட்டுமே செலவிடப்பட்டிருக்கும். இப்போது ஒப்பந்த காலம் நிறைவடைந்த நிலையில் மீண்டும் சாலைப் பணியாளர்களைக் கொண்டு பராமரிப்புப் பணி தொடரப்படுகிறது.

கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய கோட்டங்களில் தனியார் சாலைப் பராமரிக்க ரூ.2152.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சாலைகளில் 642 சாலைப் பணியாளர்கள் பணி செய்தால் ஐந்தாண்டுகளுக்கு ஊதியம் ரூ.150 கோடி மட்டுமே செலவாகும். இதர சாலைப் பொருட்கள் ரூ.500 கோடி என மொத்தம் ரூ.750 கோடி மட்டுமே செலவாகும். அரசு கஜானாவில் ரூ.1800 கோடி மிச்சமாகும். ஆனால் இப்போது அவை தனியார் நிறுவன லாபமாகச் சென்றுள்ளது. இதேபோல் பழனி, சிவகங்கை கோட்டங்கள் உள்ள 1065.85 கி.மீ., சாலைகளைத் தனியார் பராமரிக்க ரூ.1403.26 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளது. இதே பணியை 266 சாலைப் பணி யாளர்கள் பராமரிக்க ஊதியம் ரூ.55 கோடி, இதர பொருட்கள் ரூ.260 கோடி என மொத்தம் ரூ.315 கோடி  செலவாகும். அரசுக்கு ரூ.1085.26 கோடி மிச்ச மாகும். ஆனால் இப்போது இத்தொகை தனியாருக்கு லாபமாகச் செல்லும் நிலை உள்ளது. தஞ்சை கோட்டத்தில் 833.66 கி.மீ., நீள சாலைகளைத் தனியார் பராமரிக்க ரூ.1947.23 கோடி செலவிடப் பட்டுள்ளது. இதே பணியை 208 சாலைப் பணியா ளர்கள் ஐந்தாண்டு பராமரிக்க ரூ.45 கோடி ஊதியம், ரூ.300 கோடி இதர பொருட்கள் என மொத்தம் ரூ.345 கோடி மட்டுமே செலவாகும். மாறாக 1602.23 கோடி தனியார் லாபமாகச் செல்லும் நிலை உள்ளது. சாலைகளைப் புதுப்பிக்கும் ஒப்பந்தத்துடன், ஐந்தாண்டுகள் பராமரிப்பு ஒப்பந்தத்தையும் பெரும் தொகை செலவில் வழங்க தமிழக அரசு நிர்வாக உத்தரவு மூலம் அனுமதித்து வருகிறது. 

கொரோனா நோய்த் தொற்று பரவிவரும் நிலையில் மிகப்பெரும் நிதிச் செலவினத்தை தமிழக அரசு சமாளிக்கும் வகையில், தனியாருக்கு பராமரிக்கக் கொடுத்த ஒப்பந்தங்களை ரத்து செய்து பல ஆயிரம் கோடி ரூபாய்களை தமிழக அரசின் கஜானாவில் சேர்த்திட வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு தரமான முகக்கவசம், கையுறை, சோப்பு, கிருமி நாசினி வழங்க வேண்டும், ஆபத்துப்படி வழங்க வேண்டும், 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும், தொழில்நுட்ப கல்வித் திறன் பெற ஊழியருக்கு ஊதியம் வழங்க வேண்டும், சாலைப் பராமரிப்புப் பணிக்கு கருவி, தளவாடங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 29 புதன்கிழமை முதல்வர், நெடுஞ்சாலைத் துறை  உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அத்துடன் உதவிக் கோட்டப் பொறியாளர் அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆக.1 முதல் 10 வரை சாலைப் பணியாளர்களைச் சந்தித்து பிரச்சார இயக்கம் நடத்துவது, ஆகஸ்ட் 10 அன்று கோட்டப் பொறியாளர் அலுவலகங்கள் முன்பு கோரிக்கை முழக்க போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

;