சனி, செப்டம்பர் 19, 2020

பொருளாதாரம்

img

வர்த்தக வாய்ப்புகளை கோட்டைவிட்டது இந்தியா.... அந்நிய முதலீடு ஈர்ப்பு, ஏற்றுமதி என அனைத்திலும் தோல்வி....

புதுதில்லி:
அமெரிக்க - சீனா இடையிலான வர்த்தகப் போர் மற்றும் கொரோனா பிரச்சனைகள் காரணமாக, சீனாவில் இயங்கி வரும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பல பன்னாட்டு நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளன; இதுதொடர்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தியாவிடம் பேச்சுவார்த்தைநடத்தி வரும் நிலையில், குறைந்தபட்சம் 300 நிறுவனங்களாவது இந் தியா வருவது உறுதி என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்டோரும் கூட இதனைக் குறிப்பிட்டு, இந்தியா இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, இந்தவிஷயத்திலும் கோட்டை விட்டு, சீனாவிலிருந்து வெளியேறும் வர்த்தகவாய்ப்புக்களை வியட்நாமிடம் பறிகொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.சீனா உடனான பிரச்சனையால், அந்நாட்டிலிருந்து இதுவரை 56 அமெரிக்க நிறுவனங்கள் வெளியேறியுள்ள நிலையில், அவற்றில் வெறும் 8 நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் முதலீடு செய்துள்ளன என்றும், 26 நிறுவனங்களை வியட்நாம் கொத்திக் கொண்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இது இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. இந்நிலையில், வியட்நாம் இந்தியாவைத் தாண்டி அமெரிக்க நிறுவனங்களை ஈர்த்ததில் பெரிய ஆச்சரியம் எதுவும் இல்லை என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வியட்நாம் அளவில் சிறிய நாடாகஇருந்தாலும், இந்தியாவுக்கு சவால்விடும் வகையில் கடந்த பத்தாண்டுகளில் அது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் பொருளாதாரமாக உருவாகி இருப்பதாகவும் கூறியுள்ளனர்.கடந்த 2019-ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி ஆண்டுக்கு வெறும் 5 சதவிகிதம்தான். ஆனால் இதே காலத்தில் வியட்நாமின் ஏற்றுமதி வளர்ச்சி 18 சதவிகிதமாக உள்ளது.

இந்தியா தற்போதுவரை வர்த்தகபற்றாக்குறையில்தான் போய்க் கொண்டிருக்கிறது. 2019 ஆண்டு நிலவரப்படி இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 156 பில்லியன் டாலராக உள்ளது.ஆனால், இதே காலக்கட்டத்தில் வியட் நாம் 47 பில்லியன் டாலர்களை வர்த்தகஉபரியாக கொண்டுள்ளது.இவை அனைத்தையும் விட, 2019-இல் உலகின் முன்னணி ஏற்றுமதியாளர்களில் ஒருவராக வியட்நாம் மாறியுள்ளது. இந்தியாவின் ஏற்றுமதியில் பெரும்பாலும், குறைந்த தொழில் நுட்பம் கொண்ட உற்பத்தி பொருட்களான கனிம எரிபொருட்கள் (14%), இயந்திரங்கள் (6%), இரசாயனங்கள் (5%), வாகனங்கள் (5%) ஆகியவற்றின்ஏற்றுமதியே முக்கியப் பங்கு வகிக்கின்றன.ஆனால், வியட்நாமின் ஏற்றுமதியில் பெருமளவு உயர்தொழில் நுட்பம் கொண்ட மின்சார உபகரணங்கள், இயந்திரங்கள் இடம்பிடித்துள்ளன. குறிப்பாக மொபைல் தொலைபேசி ஏற்றுமதி அதிகளவில் இருந்துள்ளது. மின்சார இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் (41%), ஆடைகள் (11%), காலணிகள் (8%), மெஷினரி மற்றும் இயந்திர உபகரணங்களை (5%) வியட்நாம் ஏற்றுமதி செய்துள்ளது. 

மேலும், 2010-இல் 10 சதவிகிதமாக இருந்த அந்நாட்டின் ஏற்றுமதி, 2019-இல் 42 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்று காரணங்களை அடுக்குகின்றனர்.இந்தியாவைப் பொறுத்தவரை ஹைடெக் ஏற்றுமதி 2018 நிலவரப்படிவெறும் 9 சதவிகிதம் மட்டுமே. ஆனால்,வியட்நாமில் அது 40 சதவிகிதமாக இருக்கிறது. தென் கொரிய நிறுவனமான சாம்சங்கின் மிகப்பெரிய உற்பத்திதொழிற்சாலையே, வியட்நாமில்தான் உள்ளது.கடந்த 2009 - 2018 ஆண்டுகளுக்கு இடையே, ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு இந்தியாவின் ஏற்றுமதி 1.6 மடங்கு அளவிற்கே அதிகரித்துள்ளது. ஆனால் இதுவே வியட் நாமின் ஏற்றுமதி 4.4 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரியில் 18.3 பில்லியன்டாலராக இருந்த வியட்நாமின் ஏற்றுமதி, பிப்ரவரியில் 20.8 பில்லியன் டாலர், மார்ச் மாதத்தில் 24.2 பில்லியன் டாலர், ஏப்ரலில் 17.6 பில்லியன் டாலர், மே மாதத்தில் 19.4 பில்லியன் டாலர், ஜூன் மாதத்தில் 22.6 பில்லியன் டாலர் என்று உயர்ந்துள்ளது.கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் ஜனவரி முதல் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் வியட்நாமின் பிற நாடுகளுக்கான ஏற்றுமதி 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆனால் இதே காலத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 24 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்றும் புள்ளிவிவரங்களை அளிக்கின்றனர்.

;