புதன், அக்டோபர் 21, 2020

பொருளாதாரம்

img

சிறு-குறு தொழில்கள் சீரமைப்பிற்கு அதிகம் செலவிட வேண்டும்.... ‘தற்சார்பு இந்தியா’ என்ற பொருளாதாரப் ‘பாதுகாப்பு வாதம்’ வளர்ச்சிக்குப் பலனளிக்காது

புதுதில்லி:
“கொரோனா வைரஸ் தொற்றால்ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளிலிருந்து விடுபட நிவாரணப் பணிகளில் அதிகமான தொகையை செலவிட வேண்டும்” என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.மத்திய பாஜக அரசு தற்போது கையில் எடுத்துள்ள தற்சார்பு பொருளாதாரம் என்ற ‘பாதுகாப்பு வாதம்’,இந்திய பொருளாதார மீட்சிக்கு உதவாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.சர்வதேச பொருளாதார உறவுகள் குறித்த இந்திய ஆராய்ச்சிக் கவுன்சில் (ICRIER) சார்பில் நடைபெற்ற காணொலிக் கருத்தரங்கில் ரகுராம் ராஜன் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அதில் அவர் கூறியிருப்ப தாவது: வளரும் நாடுகள், இன்றைய கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளிலிருந்து விடுபட, அதிகமான தொகையை நிவாரணப் பணிகளிலும், சீரமைப்புப் பணிகளிலும் செலவிட வேண்டும். 

இந்த இடத்தில், நிவாரணப் பணிகளையும், பொருளாதார ஊக்கப்பணிகளையும் ஒன்றாக குழப்பிக்கொள்ளக்கூடாது. பொருளாதா ரத்தை மேலும் உந்தித் தள்ளுவதற்குவழங்கப்படுவது ஊக்க உதவித் திட்டங்கள். மாறாக, குறு, சிறு நடுத்தர நிறுவனங்களைக் கைதூக்கி விடுவதற்கு நிவாரணத் திட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன. பொருளாதாரத்தின் உற்பத்தித் திறன் பாதிப்படையாமல் இருப்பதற்கு இவற்றைமேற்கொள்ள வேண்டியது அவசியம்.தற்போது, உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்க வேண்டும், ஊக்குவிக்க வேண்டும் எனும் நோக்கில் ‘ஆத்ம நிர்பர் பாரத் அபியான்’ எனும் தற்சார்பு பொருளாதாரத் திட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. என்னைப் பொறுத்தவரை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மறுவடிவம்தான் தற்சார்பு இந்தியா. ஆனால், கடந்த காலங்களில் இதுபோன்ற திட்டங்கள் பெரிதாக பலனளிக்கவில்லை.

தற்சார்பு இந்தியா திட்டம், உள்நாட்டில் உற்பத்திக்கான சூழலை உருவாக்குமா? என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. உண்மையிலேயே உள்நாட்டுத் தொழில்களை-உற்பத்தியை ஊக்குவிப்பதுதான் ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தின் நோக்கம் என்றால், துரதிர்ஷ்டவசமாக, இறக்குமதி வரி விகிதங்களை மத்திய அரசு ஏன்உயர்த்தியது? என்ற கேள்வி எழுகிறது. எனவே, உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்போம் எனும் ‘பாதுகாப்பு வாதம்’ என்பதே சிக்கலானதுதான். இது வெளிநாட்டு வர்த்தகத்தில்சிக்கலை ஏற்படுத்திவிடக்கூடாது. தற்போதைய சூழலில் இந்தியாவுக்கு உலகத்தரம் வாய்ந்த உற்பத்திஅவசியம். அதாவது வெளிநாடு களில் இருந்து மிகக் குறைந்த விலையில் மூலப்பொருட்களை இறக்குமதி செய்து, அதை முழுமைபெற்றபொருளாக மாற்றி வெளிநாடுகளுக்கு அதிக விலைக்கு இந்தியா ஏற்றுமதி செய்ய வேண்டும். அதற்கு,நமது கட்டமைப்பு, போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும்.மாறாக, மற்ற நாடுகளுடன் வரிப்போரை உருவாக்குவது கூடாது. இறக்குமதி வரியை அதிகப்படுத்தும் முயற்சிகள் பல நாடுகளில்தோற்றுப்போன ஒரு திட்டமாகவே உள்ளது.’’ இவ்வாறு ரகுராம் ராஜன் பேசியுள்ளார்.

;