வெள்ளி, செப்டம்பர் 25, 2020

தேசம்

img

தீவிரமடையும் ஆணாதிக்க வெறியும் சமூக, பொருளாதார காரணங்களும்

ஹைதராபாத்தின் புறநகர்ப்பகுதியில், 27 வயதுள்ள, கால்நடை பெண் மருத்துவர், கும்பல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள கொடூரநிகழ்வு, நாள்தோறும் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைக் கொடுமைகளை மீண்டும் ஒருமுறை அப்பட்டமானமுறையில் வெளிப்படுத்தி இருக்கிறது. பெண்ணை, மிகக்கொடூரமான முறையில் வன்புணர்வுக்கு உள்ளாக்கி, கொன்றிருப்பது நாடு முழுதும் மக்கள் மத்தியில் ஆத்திரத்தையும் ஆவேசத்தையும் கிளப்பி, இதற்கெதிராகக் கிளர்ச்சி நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வைத்திருக்கிறது. ஹைதராபாத் கொடூர நிகழ்வுக்கு முன்பும், பின்பும் நாட்டில் பல பகுதிகளில் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, இது மட்டும் தனித்த ஒன்று அல்ல என்பது தெளிவானது. ஹைதராபாத் குற்றத்தால் வெகுண்டெழுந்து, பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டவர்களை ஆண்மை நீக்கம் செய்து, பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும் என்பது உட்பட மிகக் கடுமையான தண்டனை அளித்திட வேண்டும்  என்று நாடாளுமன்றத்திலும், வெளியிலும் ஆவேசத்துடனும், கோபத் துடனும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. இவ்வாறு எழுந்துள்ள ஆத்திரமும், மனித மிருகங்களுக்கு எதிரான வெறுப்புணர்வும் இயல்பானதும், நியாயமானதும் ஆகும் என்று கூறும் அதே சமயத்தில், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக இத்தகைய குற்றங்கள் நடைபெறாமல் தடுத்திட என்னவிதமான நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்பதிலும் நாம் தெளிவாக இருந்திட வேண்டும்.
பிரச்சனைக்கு என்ன தீர்வு?
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது மேலும் கடுமையான அளவிற்குத் தண்டனை விதிக்கக்கூடிய விதத்தில் சட்டங்களை உருவாக்குவதற்கான முன்மொழிவுகளைப் பரிசீலித்திட தாங்கள் தயாராயிருப்பதாக மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், மாநிலங்களவையில் அதன் தலைவர் வெங்கய்யா நாயுடுவும் தெரிவித்திருக்கின்றனர். ஆனாலும், நம் சமூகத்தில் புரையோடிப்போயிருக்கின்ற ஆழமான இந்தப் பிரச்சனைக்கு இதுவா தீர்வு? நிர்பயா வழக்கிற்குப்பின்னர் பாலியல் வன்புணர்வு மற்றும் கொலைக்கு அதிகபட்ச தண்டனை தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. மோடி அரசாங்கமும் கூட, 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வுக் குற்றத்திற்காகத் தண்டிக்கப்படுபவர்களுக்கு மரண தண்டனையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. பிரச்சனைக்குத் தீர்வு என்பது சட்டத்தைக் கடுமையாக்குவது அல்ல, மாறாக நம் நாட்டின் நீதிபரிபாலன அமைப்பு முறையை, இதுபோன்ற வழக்குகளைப் புலனாய்வு செய்யும் விதத்திலும், விசாரணையை விரைவுபடுத்தும் விதத்திலும், தீர்ப்பினை விரைந்து முடித்து கயவர்களுக்குத் தண்டனையைப் பெற்றுத்தரும் விதத்திலும் வலுப்படுத்துவதையே சார்ந்திருக்கிறது. இந்திய சமூகத்தில் புரையோடிப்போயிருக்கிற ஆணாதிக்கச் சிந்தனையும், பெண்களை வெறுக்கும் போக்கும்தான் பெண்களுக்கு எதிரானக் குற்றங்களைச் செய்திடக்கூடிய மனோபாவத்தையும், பாலியல் வன்புணர்வுக் கலாச்சாரத்தையும் ஊட்டி வளர்த்துக் கொண்டிருக்கிறது. ஆணாதிக்கச் சிந்தனையின்படி பெண்கள் எப்போதும் ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்களே என்கிற மனோபாவத்துடன், பெண்களை ஒரு போகப் பொருளாகத் தங்களின் ஊடகங்கள், திரைப்படங்கள் மற்றும்  சின்னத்திரை நாடகங்கள் மூலமாகவும் மிகவும் திட்டமிட்டு பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் சந்தைக் கலாச்சாரமும் நுகர்வுக் கலாச்சாரமும்தான் இத்தகைய இழிநிலைக்குக் காரணமாகும். பெண்களை ஆண்களுக்கு நிகராக ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனோபாவமும், அவர்களது சுதந்தி ரத்தை அங்கீகரிக்க மனோபாவமும் நம் சமூகத்திலும், மதங்களிலும், குடும்பங்களிலும் மிகவும் ஆழமாக வேரூன்றி இருக்கின்றன.
தீவிரமடையும் ஆணாதிக்க வெறி
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உலக அளவில் அதிகரித்திருக் கின்றன. குறிப்பாக இந்தியா போன்று உள்ள பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்காவிலும் அதிகரித்திருக்கின்றன. இம்மூன்று நாடுகளும் பெரிய அளவிலான வளர்முக நாடுகளாகும். இந்த மூன்று நாடுகளிலுமே ஆணாதிக்க மனோபாவத்துடன் நிறவெறி மற்றும் மேல்சாதி - கீழ்சாதி சிந்தனைப் போக்குகளும் மிகவும் ஆழமாக வேரூன்றி இருக்கின்றன. இம்மூன்று சமூகங்களிலும் மக்களைச் சூறையாடும் முதலாளித்துவத்தின் விளைவாக பொருளாதார ரீதியாக மிகவும் ஏற்றத்தாழ்வுடன் மக்கள் இருந்து வருகிறார்கள். தென் ஆப்பிரிக்காவில் 2018ஆம் ஆண்டில் மூவாயிரம் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் கொல்லப்படுவதற்கு முன்பாக மிகக் கொடூரமான  முறையில் சித்திரவதைக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு செப்டம்பரில் தென் ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான கேப் டவுனில், 19 வயதுடைய ஒரு பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட  நிகழ்வு, நாடு முழுதும் இக்கொடுமைக்கு எதிராகக் கிளர்ச்சிகள் மேற்கொள்ள இட்டுச் சென்றது. ஜனாதிபதி ராமாபோசா பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒரு தேசிய நெருக்கடி என்று ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. பிரேசிலிலும், பாலியல் குற்றங்கள் கட்டுக்கடங்காத விதத்தில் அதிகரித்திருக்கின்றன. பொதுப் பாதுகாப்புக்கான பிரேசிலிய அமைப்பு (Brazilian Forum for Public Safety) மேற்கொண்ட ஆய்வானது, ஒவ்வொரு மணி நேரத்திலும் 13 வயதுக்குக் கீழான சிறுமிகளில் நான்கு பேர் பாலியல் வன்புணர்வுக்கு இரையாவதாகக் கூறியிருக்கிறது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா போலவே பிரேசிலும் மிகவும் ஏற்றத்தாழ்வு உள்ள ஒரு சமூகமாகும். இங்கேயெல்லாம் ஆணாதிக்க மனோபாவமும், பெண்களுக்கு எதிராக ஆண்கள் வெறித்தனமாக நடந்துகொள்வதும் மிகவும் கொடூரமான வடிவங்களில் காணப்படுகின்றன. இந்தியாவில் எப்படி இந்துத்துவாவாதிகள் பெண்களுக்கு எதிராக ஆணாதிக்கச் சிந்தனையுடனும், பாசாங்குத்தனத்துடனும் இருந்துவருகிறார்களோ அதேபோன்றே பிரேசிலின் ஜனாதிபதி பொல்சானரோவின் வலதுசாரி  அரசாங்கமானதும், பெண்களின் உரிமைகள் குறித்து ஒரு பிற்போக்குத்தன மான அணுகுமுறையைப் பின்பற்றி வருகிறது. ஆகையால், பெண்களின் மீதான தாக்குதல்கள் எரிச்சலூட்டும் விதத்தில் அதிகரித்திருப்பதற்கு, இத்தகைய சமூக மற்றும் பொருளாதாரக் காரணிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாஜக பிரமுகர்களின் இழிவான பார்வை
பல்வேறு அரசாங்கங்களின் அமைச்சர்களும், நாடாளுமன்ற- சட்டமன்ற உறுப்பினர்களும் பெண்களை இழிவுபடுத்தியோ, அல்லது, பெண்களுக்கு எதிரான குற்றங்களை அற்பமானவை என்று கூறியோ திரும்பத்திரும்ப அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர். பல்வேறு மட்டங்களிலும் பெண்கள் மீது மிகவும் மூர்க்கத்தனமான முறையில் தாக்குதல்கள் தொடுக்கப்படுவதைத் தொடர்ந்து, பழமைவாத சக்திகள், “பெண்களை வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்க வேண்டும் என்று இதனால்தான் கூறுகிறோம்,” என்றும், “எனவே பெண்களை பொது இடங்களுக்கு வேலைக்கு அனுப்பாதீர்கள், வீட்டிற்குள்ளேயே அடைத்து வையுங்கள்,” என்றும் கூறி தங்கள் பத்தாம்பசலித்தனமான பிற்போக்குக் கொள்கைகளுக்கு வக்காலத்து வாங்குவதையும் பார்க்கிறோம். இவர்களின் பார்வையில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான பெண்கள்தான், அவர்கள் அணிந்திருந்த உடைகள்தான், அல்லது, அவர்கள் வாழ்க்கை நெறிதான் இத்தகைய பாலியில் வன்புணர்வுக் குற்றங்களுக்குக் காரணமாகும். எனவே, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை வெறியாட்டங் களுக்கு எதிரான போராட்டத்தைப் பல முனைகளில் நடத்த வேண்டியிருக் கிறது. ஆணாதிக்க மனோபாவம், பெண்களை வெறுக்கும் மனோபாவம் ஆகியவற்றுக்கு எதிராகவும், பெண்களைப் போகப் பொருளாகச் சித்தரிப்பதற்கு எதிராகவும், பொது வெளியில் பெண்களுக்கான உரிமை களை உயர்த்திப் பிடிப்பதற்கான போராட்டங்களுடன் இணைத்து நாம் நடத்த வேண்டி இருக்கிறது. நம்முன் உள்ள உடனடியான கடமை என்பது, பெண் களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நாட்டில் பல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து, கயவர்களுக்குத் தண்டனை பெற்றுத்தருவது என்பதும், பொது இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பைப் பலப்படுத்திட தேவையான நடவடிக்கைகளை எடுத்திட அரசாங்கங்களைக் கட்டாயப்படுத்துவது என்பதுமாகும். டிசம்பர் 4, 2019 - தமிழில்: ச. வீரமணி

;