தேசம்

img

ம.பி. காங்கிரஸ் ஆட்சி கவிழ்ப்பு.... பாஜக தீட்டிய சதித் திட்ட ஆடியோ வெளியானது

போபால்:
மத்தியப்பிரதேச காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்ட விவகாரத்தில், பாஜக சதித் திட்டம் தீட்டியதற்கான ஆடியோ ஆதாரம் ஒன்றுவெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப் பிரதேச மாநிலத்தில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்து வந்த பாஜக, ஊழல் நடவடிக்கைகள் காரணமாக, 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோற்று, காங்கிரசிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது. காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் கமல்நாத் முதல்வரானார். 

இது, காங்கிரசில், முதல்வர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருந்த இளம் தலைவர் ஜோதிராதித்யசிந்தியாவுக்கு ஏமாற்றம் ஆனது. அவர், கடந்த ஓராண்டாக கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.இதனைப் பயன்படுத்திக் கொண்ட பாஜக, ஜோதிராதித்யாவை பாஜக-வுக்கு இழுத்து, அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள் 22 பேரைராஜினாமா செய்ய வைத்தது. இதனால் கடந்த மார்ச் மாதம் கமல்நாத் அரசு கவிழ்ந்தது. மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்தது. சிவராஜ் சிங் சவுகான் முதல்வரானார்.இந்நிலையில்தான், கமல்நாத் ஆட்சியைக் கலைப்பதற்கு, தற்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சதித்திட்டம் தீட்டினார் என்பதற்கான ஆடியோ ஆதாரம் ஒன்று வெளியாகியுள்ளது. இதுவரை இந்த ஆடியோவின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படவில்லை என்றாலும், இந்த ஆடியோ மத்தியப் பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசுவது போன்ற அந்த ஆடியோவில், “மத்திய தலைவர்கள் அரசைக்கலைக்க வேண்டும் என முடிவு எடுத்துள்ளனர். அவ்வாறு நடக்கவில்லை என்றால் அது அனைத்தையும் சீரழித்து விடும்.  நீங்கள் சொல் லுங்கள்,  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா, துளசி சிலாவத் போன்றோர் இல்லாமல் ஆட்சியைக் கலைக்க முடியுமா?என்று யாரோ ஒருவரிடம் சவுகான் உரையாடல் நடத்துகிறார்.இந்த ஆடியோவில் குறிப்பிட்டிருந்தது போலவே, கடந்த மார்ச்சில்,ஜோதிராதித்ய சிந்தியா, துளசி சிலாவத் உள்ளிட்டோர் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து விட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.எனவே, சதித் திட்டம் தீட்டித்தான்கமல்நாத் அரசை பாஜக கவிழ்த்து இருக்கிறது என்று பகிரங்கமாகி இருப்பதாக காங்கிரஸ் தலைவர் நரேந்திர சலூஜா கூறியுள்ளார்.

;