தேசம்

img

உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எம்.பி. பதவி.... ராமர்கோவில், காஷ்மீர், முத்தலாக் தீர்ப்புகளுக்கு பரிசு

புதுதில்லி:
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பணி ஓய்வுபெற்ற, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு, மத்திய பாஜக அரசானது, மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கியுள்ளது.“இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 80-இன்உட்பிரிவு (1), துணைப்பிரிவு (A) -ஆல் வழங்கப்பட்டஅதிகாரங்களைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத்தின்முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயைமாநிலங்களவையில் ஏற்பட்ட காலியிடத்துக்காகப் பரிந்துரைப்பதில் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சியடைகிறார்” என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரபேல் போர் விமான ஊழல் விவகாரம், மத்திய புலனாய்வு இயக்குநர் அலோக் வர்மா பதவி நீக்கம், முத்தலாக்தடைச் சட்டம், 100 வருட பழமையான அயோத்தி பாபர் மசூதி வழக்கு ஆகியவற்றில் மத்திய பாஜக அரசு மகிழ்ச்சியடையும் வகையில் தீர்ப்புக்களை வழங்கியவர் ரஞ்சன் கோகோய் ஆவார்.ஆர்எஸ்எஸ் அமைப்பின் நெடுங்காலத் திட்டங்களில்ஒன்றான, பாபர் மசூதி இருந்த இடத்தில், ராமர் கோயில்அமைக்க வேண்டும் என்ற விவகாரத்தில் “சர்ச்சைக்குரிய2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கே சொந்தம் அதில் ராமர்கோயில் கட்டிக்கொள்ளலாம் என்றும், இஸ்லாமியர் களுக்கு மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் அளவுள்ள வேறு ஒரு இடத்தை அரசே வழங்க வேண்டும்” என்று நீதிபதி ரஞ்சன் கோகோய் தீர்ப்பு வழங்கியிருந்தார்.மக்களவைத் தேர்தல் நேரத்தில் விஸ்வரூபமெடுத்த ரபேல் போர் விமான ஊழல் வழக்கிலும், பாஜக அரசுக்குசாதகமான தீர்ப்பை அளித்திருந்தார். “36 போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதில் முடிவெடுக்கும் செயல்முறையைச் சந்தேகிக்க எவ்வித சாத்தியங்களும் இல்லை” என்று கூறி, மோடி அரசை அவர் காப்பாற்றினார்.

மேலும் காஷ்மீர் விவகாரம், சட்டப்பிரிவு 370 ரத்து, முத்தலாக் விவகாரம் ஆகியவற்றிலும் தனது தீர்ப்புக்கள் மூலம் ஆர்எஸ்எஸ் விருப்பங்கள் நிறைவேறக் காரணமாக இருந்தார்.இவ்வாறு ஆர்எஸ்எஸ் - பாஜகவின் நிகழ்ச்சி நிரலுக்குஒத்திசைவான தீர்ப்புக்களை வழங்கிய பின்னணியிலேயே அவர் நியமன எம்.பி.யாக பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்.இந்நிலையில், “ரஞ்சன் கோகோய் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பது, முற்றிலும்அருவருப்பானது: சந்தேகமே இல்லாமல் இது கோகோய்க்கு அளிக்கப்பட்ட வெளிப்படையான லஞ்சம்.இதன்மூலம் நீதித் துறையின் சுதந்திரம் முற்றிலும் அழிக்கப்படுகிறது” என்று உச்ச நீதிமன்ற பார் அசோசியேசன் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான துஷ்யந்த் தவே விமர்சித்துள்ளார்.

“உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிரஞ்சன் கோகாய்க்கு வழங்கப்பட்டுள்ள மாநிலங்களவை பதவியை வேண்டாம் என்று கூறுவார் என எதிர்பார்க்கிறேன். ஒருவேளை அவர் அப்படி செய்யவில்லை என்றால்,அது நீதித்துறைக்கு அளவிட முடியாத சேதத்தை அவர் ஏற்படுத்தியதாக அமைந்துவிடும்” என்று வாஜ்பாய் காலத்தில் மத்திய நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார்.

நாட்டின் தலைமை நீதிபதி என்ற மிக உயர்ந்தபட்ச பதவியை அலங்கரித்த ஒருவருக்கு, நியமன எம்.பி.என்பது, ஒரு சாதாரணமான தகுதிக் குறைவான பதவிதான். ஆனால், ஆசை வெட்கமறியாது என்பதைப் போல,ரஞ்சன் கோகோய் அதற்கும் தயாராகி விட்டார்.“எம்.பி. ஆவது, நீதித்துறையின் கருத்துக்களை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு நல்ல ஒரு வாய்ப்பாகும்” என்று ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார். தில்லியில் இதுபற்றி விரிவாக பேசுவேன் என்றும் கூறியுள்ளார்.

ரஞ்சன் கோகோயின் சகோதரர் ‘ஏர் மார்ஷல்’ அஞ்சன் குமார் கோகோய், கடந்த ஜனவரி மாதம் பணி ஓய்வுபெற்ற நிலையில், அவருக்கு, வடகிழக்கு கவுன்சிலின் (என்.இ.சி) முழுநேர அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினர் பதவி, ஏற்கெனவே வழங்கப்பட்டு விட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.மொத்தம் 250 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் (ராஜ்ய சபா) 238 பேர் மறைமுக தேர்தல்மூலமும் 12 பேர் குடியரசுத் தலைவரின் நேரடி நியமனத்தின் மூலமும் உறுப்பினராக நியமிக்கப்படுகின்றனர். அந்த 12 இடங்களில் ஒரு இடத்திற்குத்தான் ரஞ்சன் கோகோய் நியமிக்கப்பட்டுள்ளார்.

;