வெள்ளி, அக்டோபர் 30, 2020

தேசம்

img

நாடாளுமன்ற நடைமுறைகள் அழிப்பு- இடதுசாரிக் கட்சிகள் கண்டனம்

நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் ஒழுங்குவிதிகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, விவசாயம் சம்பந்தமான சட்டமுன்வடிவுகளை நிறைவேற்றியிருப்பதற்கு இடதுசாரிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனை எதிர்த்து செப்டம்பர் 25 அன்று நடைபெறும் அகில இந்திய எதிர்ப்பு இயக்கத்திற்குத் தங்களின் முழு ஆதரவினைத் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து. ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) பொதுச் செயலாளர், திபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் தேவபிரத பிஸ்வாஸ், புரட்சி சோசலிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இடதுசாரிக் கட்சிகள், இந்திய விவசாயத்துறையை அடகு வைப்பதற்கான சட்டங்களை பாஜக அரசாங்கம், நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் ஒழுங்குவிதிமுறைகள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு,  அடாவடித்தனமாக நிறைவேற்றியிருப்பதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கின்றன. நாடாளுமன்ற ஜனநாயகத்தை இவ்வாறு அழித்திருப்பது, இவர்களின் பாசிச பாணி வெறித்தனத்தை வெளிப்படுத்துகிறது. வாக்கெடுப்பு கோரிய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்திருப்பதால், பாஜக அரசாங்கம் எதிர்க்கட்சியினரின் வாயை மூடச்செய்துவிடலாம் என நினைத்தால், அது முடியாது. இடதுசாரிக் கட்சிகள், இந்திய நாடாளுமன்றத்தையும், இந்திய அரசமைப்புச்சட்டத்தையும், நம் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசையும் பாதுகாத்திட தங்கள் உறுதிமொழியை மீளவும் வலியுறுத்துகிறோம். நம் அரசமைப்புச்சட்ட குடியரசுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும் என்று மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறது.

நிறைவேற்றப்பட்டுள்ள இந்தச் சட்டங்கள் இந்தியாவின் விவசாயத்தையும், நம் விவசாயிகளையும் அழித்துவிடும். இந்திய விவசாயத்தை ஒட்டுமொத்தமாக வேளாண்வர்த்தகக் கார்ப்பரேட்டுகளிடம் முழுமையாக ஒப்படைத்திடுவது, விவசாயிகளுக்கு அளித்து வரும் குறைந்தபட்ச ஆதார விலையை ஒழித்துக்கட்டவும், பொது விநியோக முறை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவதற்கும், மனசாட்சியற்ற வர்த்தகர்கள் மற்றும் பகாசுர கார்ப்பரேஷன்கள் உணவுப் பொருள்களைப் பதுக்கி, அதன்மூலம் செயற்கையாக உணவுப்பற்றாக்குறையை உருவாக்குவதற்கும், உணவுப்பொருள்களின் விலைகளை வானளாவ உயர்த்துவதற்கும் இட்டுச்செல்லும்.  இந்தச் சட்டங்கள் நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்குக் கடுமையான முறையில் அச்சுறுத்தலை ஏற்படுத்திடும்.

இடதுசாரிக்கட்சிகள், நாடு முழுதும் உள்ள தங்களின் கிளைகளை அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு, இந்தச் சட்டங்களை விலக்கிக்கொள்ள வலியுறுத்தி, செப்டம்பர் 25 அன்று நாடு முழுதும் நடத்தவுள்ள கிளர்ச்சிப் போராட்டங்களுக்கு, தங்கள் முழு ஆதரவினையும், ஒருமைப்பாட்டையும் அளித்திட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கின்றன.  

இடதுசாரிக் கட்சிகள், இந்தச் சட்டங்களை மத்திய அரசு விலக்கிக் கொள்வதற்குக் கட்டாயப்படுத்திட, மாநில அளவில் இயங்கும் இதர அரசியல் கட்சிகளுடன் கலந்துபேசி, மாநில அளவில் மேற்கொள்ளவேண்டிய எதிர்ப்பு நடவடிக்கைகளைத் திட்டமிட வேண்டும் என்று அனைத்து மாநிலக்குழுக்களையும் கேட்டுக்கொள்கின்றன.

இவ்வாறு இடதுசாரிக்கட்சித் தலைவர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.

(ந.நி.

;