திங்கள், செப்டம்பர் 28, 2020

தேசம்

img

நீதியும் தேர்வும் மனுநீதியின் சாரமாக இருந்திட கூடாது - சு.வெங்கடேசன்

நீதியும் தேர்வும் மனு நீதியின் சாரமாகவோ, சாயலாகவோ அமைந்து விட கூடாது என்று மக்களவையில் சு. வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இன்று பூஜ்யநேரத்தில் நீட் தேர்வை கைவிட வலியுறுத்தி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது. அனிதா முதல் ஜோதி ஸ்ரீ துர்கா வரை 12க்கும் மேற்பட்ட மாணவர்களின் மரணத்தின் தீரா துயரில் இருந்து கேட்கிறோம். நீட் தேர்வை எப்போது கைவிடுவீர்கள். நீட் என்னும் திரி சூலத்தில் மூன்று முனைகள் ஒரு முனை மாநில அரசின் கல்வி முறையையும்,மாநில உரிமையையும் குத்தி கிழிக்கிறது. மறுமுனை டீச்சிங் என்பதை கொன்று கோச்சிங் என்பதை கொண்டாடுகிறது. மூன்றாவது முனை குழந்தைகளின் உளவியலை சிதைத்து தற்கொலைக்கு தள்ளுகிறது. இன்னும் எத்தனை மரணங்களுக்கு பின் இந்த கொலை வாளினை கீழே போடுவீர்கள். தமிழக சட்டப்போரவை மருத்துவ மாணவர் சேர்க்கை சம்பந்தப்பட்ட மசோதாவை ஏகமனதாக நிறைவேற்றி அனுப்பியது. குடியரசுத்தலைவர் அதை திருப்பி அனுப்பினார். அரசமைப்புச் சட்டம் 201 ன்படி திருப்பி அனுப்புவதற்கான காரணத்தை கூற வேண்டும். ஆனால் இன்று வரை கூறவில்லை. ஆனால் இதைப்பற்றி நீதித்துறை ஆளுமைகள் வாய்திறப்பதில்லை. ஆனால் திரைக்கலைஞர் சூர்யா ஒரு வார்த்தை சொன்னால் உடனே எதிர்வினை புரிகிறார்கள். நீதியும் தேர்வும் மனு நீதியின் சாரமாகவோ சாயலாகவோ அமைந்து விடக்கூடாது. நீட் தேர்வை கைவிடுங்கள் என வலியுறுத்தினார். 

;