தேசம்

img

திரிபுரா, உத்தரகண்ட்டில் நீட் தேர்வு எழுதியோரைவிட தேர்ச்சி பெற்றவர்கள் அதிகம்...

புதுதில்லி:
நாடு முழுவதும் வெளியிடப்பட்ட நீட் தேர்வு முடிவுகளில் பெரும் குழப்பம் இடம்பெற்றுள்ளது. திரிபுரா, உத்தரகண்ட், தெலுங்கானா மாநிலங்களில் தேர்வு எழுதியவர்களைவிட தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை பல ஆயிரம் அதிகமாக இருப்பதும் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து காட்டப்பட்டிருப்பதும் பெரும் சர்ச்சையாகி உள்ளது. கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெள்ளியன்று மாலை அறிவிக்கப்பட்டது. ஆனால் நீட் தேர்வு மதிப்பெண்களை மாணவர்கள் உடனடியாக இணைய தளங்களில் பார்க்கமுடியாத அளவுக்கு தொழில்நுட்ப கோளாறு இருந்தது. பெரும் போராட்டங்களுக்குப் பின்னர் பின்னிரவுதான் மதிப்பெண்களை ஓரளவு பார்க்க முடிந்தது. 

நீட் தேர்வு நடத்திய ஏஜென்சி மாநில அளவிலான பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2019-ம் ஆண்டு மாநிலங்களில் தேர்வுக்கு விண்ணப்பித்தோர்; தேர்வு எழுதியோர்; தேர்ச்சி பெற்றோர் விவரமும் 2020-ம்ஆண்டு தேர்வு தொடர்பானவிவரங்களும் ஒப்பீட்டு தேர்ச்சி விகிதம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் இந்தியாவிலேயே மிக அதிக அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உள்ள மாநிலம் திரிபுராதான். திரிபுராவில் 88889 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதாகாவும் இதற்கு அடுத்த இடத்தில்தான் மகாராஷ்டிரா இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திரிபுராமாநிலத்தில் நீட் தேர்வு எழுதியவர்கள் மொத்த எண்ணிக்கையே 3536 பேர் மட்டும்தான் என அதே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் 88889 பேர் எப்படி தேர்ச்சி பெற்றிருக்க முடியும்? 

இதேபோல் உத்தரகண்ட் மாநிலத்தில் தேர்வு எழுதியோர் எண்ணிக்கையைவிட தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை மிகமிக அதிகம். உத்தரகண்ட் மாநிலத்தில் நீட் தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை 12047. ஆனால் இந்த மாநிலத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கையோ 37301 என குறிப்பிடப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் நீட்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் 54872. நீட் தேர்வு எழுதியவர்கள் 50,392. இம்மாநிலத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 1738.ஆனால் தேர்ச்சி விகிதம் 49.15 சதவீதம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி பல குளறுபடிகளுடன் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி இருப்பது கடும் சர்ச்சையாகி உள்ளது.இதனையடுத்து மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வின் புதிய முடிவுகளை இணையதளத்தில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.

;