தேசம்

img

‘மெஹ்பூபா முப்தி எந்த உத்தரவின்படி காவலில் வைக்கப்பட்டுள்ளார்?’ உச்சநீதிமன்றம் கேள்வி

புதுதில்லி:
கடந்தாண்டு ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய பாஜகஅரசு ரத்து செய்து, அந்த மாநிலத்தை பிரித்து சிதைத்து நடவடிக்கை எடுத்தது.  மேலும் அந்த மாநிலத்தில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹ்பூபா முப்தி மற்றும்ஜம்மு-காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சியின்  தலைவர் சஜத் லோன் ஆகியோர் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  

மெஹ்பூபா முப்தி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் அவரை தொடர்ந்து காவலில் வைப்பதாக அவரது மகள் இல்திஜா முப்தி குற்றம்சாட்டினார். ஒரு முக்கியமான எதிர்க்கட்சி தலைவரை விசாரணை  ஏதும் இல்லாமல் ஓராண்டுக்கு மேலாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து அடைத்து வைத்துள்ளதாகவும், அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள மெஹ்பூபாவிற்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்.மெஹ்பூபா முப்தியை  விடுதலை செய்யவேண்டும் என்று கோரி உச்சநீதி மன்றத்தில் செப்டம்பர் 24-ம் தேதி  இல்திஜா முப்தி மனு தாக்கல்செய்தார்.இந்த வழக்கு செப்டம்பர் 29 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள், சஞ்சய்கிஷன் கவுல் மற்றும் ஹரிகேஷ்ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது, இல்திஜா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நித்யா ராமகிருஷ்ணன்,  குடும்பத்தினரை சந்திக்க மெஹ்பூபா முப்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றார்..

இதனை தொடர்ந்து நீதிபதி கவுல் கூறுகையில், மெஹ்பூபா முப்தியை இன்னும் எத்தனை நாள் தடுப்பு காவலில் வைக்கப் போகிறீர்கள். எந்த உத்தரவின் கீழ் அவர் காவலில் உள்ளார். தடுப்பு காவலில் எத்தனை நாள் வைக்க முடியும். ஒரு  வருடத்தை தாண்டி அதனை நீட்டிக்க முடியுமா? எனக்கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, காஷ்மீர் மாநில அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வழக்கு குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்கப்படும் என்று  தெரிவித்தார்.இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

;