வெள்ளி, செப்டம்பர் 25, 2020

தேசம்

img

புதுச்சேரியில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆனது

புதுச்சேரி:
புதுச்சேரியில் சனிக்கிழமை (ஆக.1)  ஒரே நாளில் 139 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டநிலையில் 2 மூதாட்டிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,593 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆகவும் உயர்ந்துள்ளது.இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறும்போது, “புதுச்சேரியில் 945 பேருக்குக் கொரோனா பரிசோதனை செய்யப் பட்டது. இதில் தற்போது புதுச்சேரியில் 94 பேர், காரைக்காலில் 3 பேர், ஏனாமில் 42 பேர் என மொத்தம் 139 (14.7 சதவீதம்) பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுஇதில் 58 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 30 பேர் ஜிப்மரிலும், 6 பேர் கொரோனா நோயாளிகள்  கண்காணிப்பு மையத்திலும் 3 பேர் காரைக்காலிலும், 42 பேர் ஏனாமிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் ஒருவர், ஜிப்மரில் ஒருவர் என 2 பேர் உயிரிழந்துள்ளனர். வைத்திக்குப்பத்தைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி ஏற்கெனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டதையடுத்து கடந்த 27 ஆம் தேதி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

இதேபோல், திருக்கனூரைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் நரம்பு மண்டல வியாதியால் பாதிக்கப் பட்டிருந்தார். அவருக்குக் கொரோனா  தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளியன்று மாலை உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 3,593 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தற்போது கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 336 பேர், ஜிப்மரில் 351 பேர், கோவிட் கேர் சென்டரில் 311 பேர், காரைக்காலில் 47 பேர், ஏனாமில் 89 பேர் என 1,134 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும், புதுச்சேரியில் 212 பேர், ஏனாமில் 11 பேர் என 223 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,357 ஆக அதிகரித்துள்ளது.வெள்ளிக்கிழமை  மொத்தம் 85 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,185 ஆக அதிகரித்துள்ளது.தற்போது மாஹே பிராந்தியம் தொற்று இல்லாத பகுதியாக மாறியிருக்கிறது. மேலும், கதிர்காமம் மருத்துவக் கல்லூரி மற்றும் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டவர்களில் 21 பேர் கொரோனா கண்காணிப்பு மையத்திற்கு  மாற்றப்பட்டுள்ளனர்.இதுவரை 39 ஆயிரத்து 707 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 35 ஆயிரத்து 345 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள் ளது. 482 பரிசோதனைகள் முடிவுக்காகக் காத்திருப்பில் உள்ளன” எனத் தெரிவித்தார்.

;