வியாழன், செப்டம்பர் 24, 2020

தேசம்

100 நாள் வேலைத்திட்டத்தை ஒழித்துக்கட்டும் மத்திய அரசுக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்

சென்னை:
100 நாள் வேலைத்திட்டத்தை ஒழித்துக்கட்டும்  மத்திய பாஜக அரசுக்கு  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து  விவசாயிகள் சங்கத்தின் மாநிலபொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில்ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெற்ற  போது நிறைவேற்றப்பட்டது மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி சட்டம். கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டுமென்ற நோக்கத்துடன் இடது சாரிகளின் கடும் வற்புறுத்தலால் நிறைவேற்றப்பட் டது இந்த திட்டம். இந்த நல்ல திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மத்திய பாஜக அரசுக்கு கடுகளவும் ஆர்வமில்லை. மாறாக, இந்த திட்டத்தை ஒழித்துக்கட்டும் வகையில் பல்வேறு முயற்சிகளில் அது ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகள் மூடப்பட்டதாலும், வேலையின்மை காரணமாகவும் நகர்ப்புறங்களிலிருந்து ஏராளமானோர் கிராமங்களுக்கு திரும்பியுள்ளனர். இதனால் கிராமப்புறங்களில் வேலையின்மை என்பது கடுமையாகியுள்ளது. எனவே தான், அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் இடதுசாரி கட்சிகள் நூறுநாள் வேலை என்பதை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். வேலை கோரும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், இந்த திட்டத்தை அமல்படுத்தும் விதத்தை பார்த்தால் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்  செப்டம்பர் 15 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் நரேந்திரசிங் தோமர் அளித்துள்ள பதிலில், கடந்த ஐந்து மாதங்களில் வேலை வழங்கப்பட்ட நாட்கள் தேசிய சராசரி ஏப்ரல் -12, மே -17, ஜூன் -6, ஜூலை -14, ஆகஸ்ட் -12 நாட்கள் மட்டுமே என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஏப்ரல் - 4, மே - 7, ஜூன் - 9, ஜூலை -14 ஆகஸ்ட் -8 நாட்கள் மட்டுமே. ஜூன் மாதம் தவிர மீதி நான்கு மாதங்களும் தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாகவே வேலை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக முதலமைச்சர் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை உள்ளது.

அது மட்டுமல்லாமல், 200 நாட்களாக உயர்த்தும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லையென்று மத்திய அமைச்சர் கைவிரித்துவிட்டார். கிராமப்புற மக்களைப்பற்றி இந்த ஆட்சியாளர்களுக்கு கொஞ்சமும் அக்கறையில்லை என்பதையே அமைச்சரின் பதில் வெளிப்படுத்துகிறது. மத்திய அரசின் இந்த போக்கை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.வாழ்வாதாரத்தை இழந்து வழியின்றி, பண்ட பாத்திரங்களை அடகு வைத்தும், விற்றும் மக்கள் உயிர் வாழ்ந்து கொண்டுள்ளனர். ஆனால் மக்களின் துயரங்கள் குறித்து கவலைப்படாமல் மாதத்தில் ஒரு வாரம் மட்டும் வேலை என்பது அரசின் இரக்கமற்ற தன்மையையே காட்டுகிறது. மத்திய - மாநில அரசுகளின் அலட்சிய போக்கை கண்டித்தும், வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்தக் கோரியும் ஒன்றுபட்ட வலுமிக்க குரலை எழுப்புவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;