திங்கள், செப்டம்பர் 28, 2020

தேசம்

img

கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்வு

கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. 
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையத்துவங்கி உள்ளது. இதையடுத்து இடுக்கி, பத்தனம்திட்டா, வயநாடு போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் முதலே கனமழை விடாது பெய்து வருகிறது. இந்நிலையில் மூணாறு கிராமப் பஞ்சாயத்திலிருந்து 28 கி.மீ. தொலைவில் ராஜமாலா  பகுதியில் உள்ள நேமக்கடாவில் உள்ள பெட்டிமடா பகுதியில் 20-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தற்காலிகக் குடியிருப்பு அமைத்து 80-க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்தனர்.
நேமக்கடா பகுதியில் இன்று அதிகாலை திடீரென மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 80-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ன்னும் அப்பகுதியில் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்துவருவதாலும், மழைநீர் தேங்கி இருப்பதாலும் மீட்புப் பணிகளைத் தொடர்வதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருகின்றன. தொடர்மழையால் பெரியவாரை பகுதியில் பகுதியில் இருந்த ஆற்றுப்பாலமும் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்குச் செல்வதில் பெரும் சிக்கல் இருந்து வருகிறது. இருப்பினும் அங்கு சென்ற தீயணைப்புப் படையினர், மீட்புப் படையினர், வனத்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில்  17 பேர் உயிரிழந்துள்ளனர் . மீட்கப்பட்ட 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
இந்நிலையில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதி உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

;