புதன், அக்டோபர் 21, 2020

தேசம்

img

68 மாணவிகளின் உள்ளாடைகளை களைந்து மாதவிடாய் சோதனை -குஜராத் ஆசிரியைகளை அட்டூழியம்

குஜராத் மாநிலத்தில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் மாணவிகளின் உள்ளாடைகளை களைந்து மாதவிடாய் சோதனை நடத்திய அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் ஸ்ரீ ஷாஜானந்த் பெண்கள் கல்லூரி செயல்பட்டு வருகிறது. சுவாமி நாராயண் பக்தர்களால் நிர்வகிக்கப்படும் கல்லூரி வளாகத்தில் கோயில் உள்ளிட்ட சில இடங்கள் உள்ளது. 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில் சுமார் 1500மாணவிகள் படித்து வருகின்றனர்.  60-க்கும் மேற்பட்ட மாணவிகள் விடுதியில் தங்கி பயில்கின்றனர்.
மாதவிடாய் காலத்தில் மாணவிகள் சமையலறை உள்ளிட்ட  குறிப்பிட்ட பகுதிகளுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. சக மாணவிகளைத் தொட்டுப் பேசுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், விடுதியில் உள்ள மாணவிகள் சிலர் மாதவிடாய் காலத்தில் சமையலறைக்குள் சென்றதாகவும் சக மாணவிகளை தொட்டுப் பேசியதாகவும் விடுதி காப்பாளர் புகார் தெரிவித்துள்ளார்.  
இதையடுத்து வியாழனன்று கல்லூரி வேலைநேரத்தின்போது விடுதியில் தங்கியுள்ள 68 மாணவிகளை கல்லூரி முதல்வர் அழைத்துள்ளார். சக மாணவிகளின் முன்னிலையில் விடுதியில் பயிலும் மாணவிகளிடம் யார் யாருக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளது விசாரணை நடத்தி உள்ளார்.  இரண்டு மாணவிகள் தங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். மாணவிகளின் பதிலை நம்பமறுத்த கல்லூரி நிர்வாகம் ஆசிரியைகளைக் கொண்டு மாணவிகளைச் சோதனை செய்யக் கூறியுள்ளனர். மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றி காண்பிக்குமாறு கூறியுள்ளனர் ஆசிரியைகள். இது மாணவிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக மாணவிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் இங்கு நடப்பது புதிதல்ல. இதுபோன்று நிறைய கொடுமைகள்  நடக்கிறது. கல்லூரியின்  தாளாளர், அறங்காவலர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களால் பல கொடுமைகளை சந்திக்கிறோம் என்று மாணவிகள் குற்றம் சாட்டி உள்ளனர். 
 

;