ஞாயிறு, செப்டம்பர் 27, 2020

தேசம்

img

குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

கோவை பள்ளிச் சிறுமி - சிறுவன் கொலை

புதுதில்லி,நவ.7-  தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய கோவை பள்ளிச்சிறுமி-சிறுவன் கொலை வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்து, சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  கோவை ரங்கே கவுடர் வீதியைச் சேர்ந்தவர் தொழில் அதிபர் ரஞ்சித்குமார் ஜெயின்-சங்கீதா தம்பதியர். இவர்களது 11 வயது மகள் முஸ்கின், மகன் ரித்திக் ஆகியோர் கடந்த 2010 ஆம் ஆண்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பொள்ளாச்சி அருகே வாய்க்காலில் வீசப்பட்டிருந்தனர். சிறுமி முஸ்கின் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

போலீசார் நடத்திய விசாரணையில் கால்டாக்சி ஓட்டுநர் மோகன்ராஜ், அவனது கூட்டாளி மனோகரன் இருவரும் திட்டம் போட்டு சிறுமி முஸ்கின், சிறுவன் ரித்திக் இருவரையும் கடத்திச் சென்று கொலை செய்தது தெரியவந்தது. இதில் போலீ சாரின் பிடியில் இருந்து தப்பி ஓடிய மோகன்ராஜ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.இந்த வழக்கில் 2012 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி கோவை மகளிர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், குற்றவாளி மனோகரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை மற்றும் 3 ஆயுள் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து மனோகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 2014 ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று மனோகரனின் தூக்கு தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து மனோகரன் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதில் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மனோகரனின் தூக்கு தண்டனையையும் உறுதி செய்தது.

இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மனோகரன் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நரிமன், சூர்யகாந்த், சஞ்சீவ்கன்னா ஆகிய 3 பேர் அடங்கிய பெஞ்ச் முன்பு வியாழனன்று நடைபெற்றது. அப்போது மனோகரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. நான்காவது முறையாக மனோகரனின் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.  சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மனோகரனின் தூக்கு தண்டனையை மறுஆய்வு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிபதிகள் நரிமன், சூர்யகாந்த் ஆகியோர்  தெரிவித்தனர். மற்றொரு நீதிபதியான சஞ்சீவ்கன்னா, மனோகரனுக்கு சிறை தண்டனை மட்டும் போதும் என்று தனது கருத்தை பதிவு செய்தார். இருப்பினும் 2 நீதிபதிகள் தூக்கு தண்டனையை உறுதி செய்ததால் மனோகரனின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
 

;