வெள்ளி, செப்டம்பர் 25, 2020

தேசம்

img

புதுச்சேரி அமைச்சரவை முடிவுகளை அமல்படுத்த கூடாது - உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரி அமைச்சரவை கூடி, வரும் ஜூலை 7-ஆம் தேதி மேற்கொள்ளவுள்ள முடிவுகளை அமல்படுத்த கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் கடந்த 3 ஆண்டுகளாக அதிகார மோதல் நீடித்து வருகின்ற நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் தன்னிச்சையான நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையீடு செய்யும் அதிகாரம் துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு இல்லை என்றும், இது குறித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் ஆளுநர் கிரண் பேடி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.

இதை அடுத்து, புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டம் வரும் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும், இதில் நிதிநிலை சார்ந்த முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகவும், ஆளுநரின் முடிவு இல்லாமல் அதனை அமல்படுத்த கூடாது என்று கிரண் பேடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், வழக்கு விசாரணையை 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் அதுவரை அமைச்சரவை முடிவை அமல்படுத்த கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் முதல்வர் நாராயணசாமி பதில் மனுத்தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
 

;