சனி, செப்டம்பர் 19, 2020

தலையங்கம்

img

ஜனநாயக தீபத்தை அணையாது காத்திடுவோம்

நம்முடைய இந்தியத் திருநாடு 74வது சுதந்திரத் திருநாளை இன்று கொண்டாடுகிறது. அந்நிய ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து இந்த  மண்ணை விடுவிப்பதற்காக நடைபெற்ற போராட்டங்கள், செய்யப்பட்ட தியாகங்கள் ஒரு வீர காவியம் ஆகும். 

விடுதலைப் பெற்ற இந்தியா எல்லோருக்கும், எல்லாமும் கிடைக்கிற ஒரு நாடாக இருக்க வேண்டும் என சுதந்திரப் போராட்ட தியாகிகள் கனவு கண்டனர். அவர்களது கனவுகள் நனவாகியிருக்கிறதா என்று கணக்குப் பார்க்கும் நாளாகவும் இது அமைந்துள்ளது. 

விடுதலைப் பெற்ற இந்தியா மதச்சார்பற்ற நாடாக தன்னை வடிவமைத்துக்கொண்டதும், பிரகடனப்படுத்திக் கொண்டதும் உலகத்திற்கே ஒரு முன்னுதாரணமாகும். ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் மதச்சார்பின்மை கோட்பாட்டையே சிதைக்க முயல்கின்றனர். ஒவ் வொரு தனிப்பட்ட மனிதரும் குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவதும் அல்லது எந்த மதத்தையும் பின்பற்றாமல் இருப்பதும் அவர்களது விருப்பத்தின் அடிப்படையிலானதாகும். இந்த உரிமை பாதுகாக்கப்படுகிற அதே நேரத்தில் அரசு அலுவல்களிலிருந்து மதம் விலகி நிற்க வேண்டும் என்பதே மதச்சார்பின்மையின் சாராம் சம் ஆகும். ஆனால் மத்திய ஆட்சியாளர்கள் செயல்பாடுகள் இதற்கு நேர்மாறானதாக அமைந்துள்ளது. 

மதச்சார்பின்மை பாதுகாக்கப்படும்போது தான் இந்தியாவின் ஒற்றுமையும், ஒருமைப் பாடும் பாதுகாக்கப்படும் என்பதை அழுத்தமாக இன்றைய நாளில் நெஞ்சில் பதியவைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. 

கூட்டாட்சித் தன்மை என்பதும் நம்முடைய நாட்டின் தனிச்சிறப்பாகும். ஆனால் மாநில உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்பட்டு மத்தியில் அதிகாரம் குவிக்கப்படுவது எதேச்சதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்லும் என்ற எச்சரிக்கை அவசியமாகும். பலமான மத்திய அரசு, பலவீனப்படுத்தப்பட்ட மாநில அரசு என்பதுதான் பாஜகவை வழிநடத்தும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சிந்தனையோட்ட மாகும். இது மத்திய ஆட்சியாளர்களின் கருத்தோட்டமாகவும் மாறி வருவது ஆபத்தான அறிகுறியாகும். மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

பல்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள், பழக்கவழக்கங்கள், பண்பாட்டுக் கூறுகள் என இருப்பது இந்தியாவின் ஆகப்பெரிய சிறப்பாகும். வேற்றுமையில் ஒற்றுமை என்பது வெற்று வார்த்தைகளாக மாற்றப்பட்டுவிடக்கூடாது. எந்தவொரு மொழியையும் திணிப்பது ஆபத் தான எதிர்விளைவுகளையே உருவாக்கும். இந்தியாவின் அனைத்துப் பகுதி மக்களும் இணைந்து போராடியதால்தான் விடுதலை என்பது சாத்தியமாயிற்று. சுதந்திரப் போராட்டத் தின் இந்த உணர்வு பாதுகாக்கப்பட வேண்டும். பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை வேண்டும் என்ற ஜனநாயக உள்ளடக்கம்தான் விடுதலைப் போராட்டத்தின் அடிப்படையாகும். ஆனால் இது கொஞ்சம் கொஞ்சமாக சேதாரத்திற்குள்ளாகிறது. ஜனநாயகத்தை காத்து நிற்பதே இந்த விடுதலைத் திருநாளில் செய்ய வேண்டிய ஆகப்பெரிய கடமையாகும்.

;