சனி, செப்டம்பர் 19, 2020

தலையங்கம்

img

வாழ்க்கை கிடக்குது ரோட்டோரமா...

பிரதமர் மோடி நாட்டின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் என்பதை மறந்து ஏதோ என்ஜிஓ அமைப்பின் தலைமை நிர்வாகி போல அவ்வப்போது ஆலோசனைகளை அள்ளி வழங்குகிறார். அதுவும் அதிகாரப்பூர்வமான அரசாங்க நிகழ்வுகளில் பேசும் போது மேலும் உற்சாகமாகிவிடுகிறார். 

புதனன்று சாலையோர வியாபாரிகளும் அதிகளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை அமைப்புக்குள்வரவேண்டும் என்றும், பெரிய ரெஸ்ட்டாரண்டுகள், ஓட்டல்கள் போல சாலையோரங்களில் நடத்தப்படும் உணவுக்கடைகளுக்கும் ஆன்லைன் மூலம் டெலிவரி செய்வதற்கான வசதியை அளிக்க அரசு திட்டமிட்டிருப்பதாகவும் பிரதமர்மோடி கூறியுள்ளார்.மோடி தலைமையிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் தான் சிறு,குறு தொழில்கள் மட்டுமின்றி பெரிய தொழில்களும்கூட சாவின் விளிம்பில் நிற்கின்றன.

இந்நிலையில் சாலையோரங்களில் தங்கள் வாழ்க்கைப் பாடுகளை தேடிக் கொண்டிருக்கும் சின்னஞ்சிறு வியாபாரிகளை கார்ப்பரேட் நிறுவனங்களை போல ஆன்லைன் வலைக்குள் வாருங்கள் என்று அழைக்கிறார்.ஏற்கனவே பணமதிப்பு நீக்கம், வங்கிக் கடன் வசதி கிடைக்கப் பெறாமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டு கந்துவட்டிக்காரர்களிடம் கைநீட்டி பணம் வாங்கி வாழ்வா, சாவா எனும்நிலையில் தங்கள் தொழில்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் சாலையோர வியாபாரிகள். அவர்களைப் பார்த்து நீங்களும் ஆன்லைன்வியாபாரத்திற்கு வாருங்கள் என்று அழைப்பது கேலிக்கூத்தாகும்.

தனது ஆட்சிக்காலத்தில் ஏழ்மையைப்போக்கும் நடவடிக்கைகள் ஏராளமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன்மூலம் ஏழை மக்கள்வங்கிகளில் கடன் பெறுவது எளிதாக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார். அவர் கூறும் ஏழைமக்கள் ஆயிரம் கோடி, லட்சம் கோடி கடன் வாங்கிவிட்டு நாட்டை விட்டு வெளியேறுபவர்களாக இருக்கலாம். ஏற்கனவே விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பதற்கு ஆன்லைன் வர்த்தகத்தை பயன்படுத்தலாம் என்று மோடி அரசாங்கம்கூறியிருக்கிறது. ஆனால் அவர்களது நிலையோ பரிதாபத்திற்குரியதாகவே இருக்கிறது. இவர்களது திட்டங்களெல்லாம் பெரு நிறுவனங்கள் கார்ப்பரேட் முதலாளிகள் பயன்பெறுவதற்கான திட்டங்களாகவே அமைந்திருக்கின்றன. ஆனால் சாலையோர வியாபாரிகள் காவல்துறையினர், ஆளுங்கட்சியினர் போன்றோரின் இடையூறு இல்லாமல் தொழில் நடத்துவதற்கு வசதி செய்து கொடுத்தாலே அவர்களது வாழ்க்கை நன்றாக அமைந்திடும். அதை விடுத்து தேன் தடவிய வார்த்தைகளால், பெருமை பேசும் பேச்சுக்களால் சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கைவளம் பெறாது. சாதாரண ஏழை, எளிய மக்களும், உழைப்பாளிகளும் கையேந்தி பவன்களை நம்பியே காலத்தை கடத்துகின்றனர். ஆனால் அவர்களை  வெளியேற்றுவதற்காகவே  ஸ்மார்ட்சிட்டி என்ற பெயரில் திட்டத்தை கொண்டு வருகின்றனர். ஆனாலும் எங்களை நம்புங்கள் என்கிறார் மோடி.
 

;