ஞாயிறு, அக்டோபர் 25, 2020

தலையங்கம்

img

யார் குற்றவாளி?

உலகை உலுக்கிய பயங்கர நிகழ்வுகளில் ஒன்றாக லெபனான் தலைநகர் பெய்ரூட் துறை முகப் பகுதியில் செவ்வாயன்று மதியம் நேர்ந்த அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் வெடித்த நிகழ்வு உலகளாவிய அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. சுமார் 150 பேர் பலி; சுமார் 5 ஆயி ரத்திற்கும் அதிகமானோர் படுகாயம் என்று தகவல்கள் வெளியாகியுள்ள இந்த விபத்து துறை முகப் பகுதியில் பாதுகாப்புப் பணியிலும், தீய ணைப்புத் துறையிலும் ஈடுபட்டிருந்த வீரர்கள் பலர் உடல் கருகி பலியாகியுள்ளனர். 

பயங்கர வெடிப்பு சம்பவம் நடந்த சில நிமி டங்களில், அது எதனால் நேர்ந்தது என்ற உண் மைகள் வெளி வருவதற்கு முன்பே, இது பயங்கர வாதச் செயல் என்றும், குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொ னால்டு டிரம்ப் அவசர அவசரமாக பேட்டியளித் தார். ஆனால் துறைமுகத்தில் கடந்த ஐந்தாண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோசஸ் எனும் கப்பலில் தேக்கி வைக்கப்பட்டிருந்த அம் மோனியம் நைட்ரேட், கப்பலின் மற்றொரு பகுதி யில் நடந்த வெல்டிங் உள்ளிட்ட பணிகளின்போது ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அழுத்தமும், வெப் பமும் பரவி பயங்கரமாக வெடித்துச் சிதறியது என்று உண்மை விபரங்களை லெபனான் அரசு வெளியிட்ட பிறகு, டிரம்ப் கூறிய கருத்துக்களை வேறு வழியின்றி அமெரிக்க ராணுவ தலைமைய கமான பென்டகன் திரும்பப் பெற்றது. 

உலகில் எது நடந்தாலும் அதை பயங்கர வாதத்தோடு முடிச்சு போடுகிற அமெரிக்க ஏகாதி பத்தியம், லெபனான், இஸ்ரேலை தொடர்ந்து எதிர்த்து வருவதாலும், பாலஸ்தீனத்தை ஆதரித்து வருவதாலும், அந்நாட்டையே பயங்கரவாதிக ளின் நாடாக முத்திரை குத்துவதற்கு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டது என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

அம்மோனியம் நைட்ரேட் நிரம்பிய மேற்கண்ட கப்பல், தற்சமயம் சைப்ரசில் வசிப்பதாக நம்பப்படும் பெரும் கார்ப்பரேட் தொழிலதிபரான இகோர் கிரீச்ஸ்கின் என்பவரது டெட்டோ ஷிப்பிங் நிறுவ னத்திற்கு சொந்தமானது; 2014ஆம் ஆண்டு ஜார்ஜியாவிலிருந்து மொசாம்பிக் நாட்டிற்கு  பெய்ரூட் துறைமுகம் வழியாக சென்றபோது, கப்பல் மாலுமிகள் மற்றும் ஊழியர்களுக்கு உரிய சம்பளத்தை ஓராண்டு காலம் வழங்காததால், பிரச்சனை ஏற்பட்டு, மாலுமிகள் வேலை நிறுத்தம் காரணமாக பெய்ரூட் துறைமுகத்தி லேயே நிறுத்தப்பட்டது.  உழைத்தவர்களுக்கு சம்ப ளம் வழங்குவதற்கு பதிலாக கப்பலை மேற்கண்ட நிறுவனம் துறைமுகத்திலேயே கைவிட்டு விட்டது. ஊழியர்கள் நிர்க்கதியாக்கப்பட்டனர். கப்பலின் பாதுகாப்பு உட்பட அனைத்தும் கைவிடப் பட்டது. அதற்குள் 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் ஆறு ஆண்டுகளாக கேட்பாரின்றி கிடந்தது. 

இதில் யார் முதன்மைக் குற்றவாளி? மாலுமி களுக்கு சம்பளம் அளிக்காத கார்ப்பரேட் முதலாளி அல்லவா? ஆய்வு செய்தால் இது போன்ற பல பயங்கரங்களுக்கு முதலாளிகளின் லாப வேட்கையே அடிப்படைக் காரணமாக இருப்பது புரியும். 

;