சனி, செப்டம்பர் 26, 2020

தலையங்கம்

img

அரசு மருத்துவமனைகளுக்கு சாவுமணி அடிக்கும் மோடி அரசு

ஏழைகள் பெருமளவில் பயன்பெறும் அரசு  மருத்துவமனைகளை ஒழிப்பதற்கான வழிவகை களை இந்த பட்ஜெட்டில் மோடி அரசு அறி வித்திருக்கிறது. மாவட்ட அரசு மருத்துவமனை களில் ‘‘அரசு - தனியார்- கூட்டு’’ திட்டத்தின் அடிப்படையில் தனியார் மருத்துவக்கல்லூரியை நடத்த  மத்திய அரசு அனுமதித்திருக்கிறது. மேலும் அரசும் தனியாரும் கூட்டாக மருத்துவ மனையை நடத்தும் போது தனியார் நிர்வாகம் நோயாளிகளிடம் உரிய கட்டணத்தை பெற்று  மருத்துவமனையை நடத்தலாம் என்கிறது.  அப்படியென்றால் இனி அரசு மருத்துவமனை களில் பணமிருப்போருக்கு மட்டுமே  சிகிச்சை, ஏழை நோயாளிக்கு இடமில்லை என்ற நிலை  உருவாகும். 

இது மக்களுக்கான சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் பொறுப்பில் இருந்து அரசு தன்னை முற்றிலும் விடுவித்துக் கொள்ளும் ஏற்பாடாகும். தற்போது தமிழகம் போன்ற மாநிலங்களில் மாவட்ட மருத்துவமனை என்பது தனித்து இயங்குவதில்லை. அது குக்கிராமங் களையும் இணைந்திருக்கும் சங்கிலித்தொடர். கிராமப்புற ஆரம்ப  சுகாதாரம் நிலையம் துவங்கி,  மாவட்ட மருத்துவமனை, அரசு  மருத்துவ கல்லூரி வரை தேவைக்கேற்ற உரிய சிகிச்சைக்காக  இணைத்திருக்கும் ஏற்பாடாகும். இதனை சீர்குலைப்பது அவசர சிகிச்சைபிரிவில் இருப்ப வர்களை வீதியில் தூக்கி வீசுவதற்கு ஒப்பாகும். 

இந்தியாவில் ஏற்கனவே மக்கள் தொகைக்கு ஏற்ப போதிய அரசு மருத்துவமனைகள் இல்லை.  கிராமப்புறங்களில் 51.9 சதவிகித மருத்துவ மனைகளும், நகர்ப்புறங்களில் 61.4 சதவிகித மருத்துவமனைகளும் தனியார் வசம்தான் இருக்கின்றன.  இதன் காரணமாக கிராமப்புறங் களில் 79.5 சதவிகிதத்தினரும், நகர்ப்புறங்களில் 83.7 சதவிகிதத்தினரும் தங்கள் சேமிப்பில் இருந்தே மருத்துவ செலவினங்களை மேற்கொண்டு வரு கின்றனர். இந்த மருத்துவ செலவினங்கள்  வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களையும் வறுமைக்கோட்டுக்குள் தள்ளி வருகிறது என் கிறது 2018 என்எஸ்ஓ அறிக்கை. ஏழைகளுக்கு இருக்கும் ஒரே உயிர்காக்கும் புகலிடம் அரசு மருத்துவமனைகள்தான்.

10 இந்தியர்களில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக  உலக சுகாதார நிறுவன அறிக்கை  எச்சரித்திருக்கிறது. இதுபோன்ற எச்சரிக்கைகளையெல்லாம் பொருட்படுத்த அரசு தயாராக இல்லை. வளர்ந்த நாடுகள் முறையான ஆரம்ப காலப் பரிசோதனைகள் மற்றும்  சிகிச்சை மூலம் இளமைக்கால மரணத்தை 20சதவிகிதம் குறைத் திருக்கின்றன. ஆனால் இந்தியாவைப் பொருத்த வரை அதற்காக முறையாக எந்த ஏற்பாடும் இல்லை.  இந்தியர்களில் உள்ள ஐந்தில் ஒரு பங்கு  ஏழைகளுக்கு எந்தவொரு தனியார் அல்லது அரசு சுகாதார காப்பீடும் இல்லை என்கிறது 2018 சமூக நுகர்வுக்கான தேசிய கணக்கெடுப்பு. இந்த நிலையில்தான், இருந்த கொஞ்ச நஞ்ச அரசு மருத்துவமனை ஏற்பாடுகளையும் குழிதோண்டி புதைக்கும் வேலையை மோடி அரசு தற்போது மேற்கொண்டிருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் தனியாரை அனு மதிக்கும் முடிவை அறவே கைவிட வேண்டும். 

;