சனி, செப்டம்பர் 26, 2020

தலையங்கம்

img

கேரளாவிற்குப் பாகுபாடு காட்டுவதை நிறுத்து

மத்திய பாஜக அரசாங்கம், கேரள மாநில அரசாங்கத்திற்கு மிகவும் மோசமான முறையில் பாரபட்சம் காட்டிக்கொண்டிருக்கிறது.  மத்திய அரசின் இத்தகைய ஓரவஞ்சனை அணுகுமுறை கார ணமாக, கேரளம் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. மோடி அரசாங் கம், கேரள இடது ஜனநாயக முன்னணி அர சாங்கத்தின் நிதித் தேவைகளை அளித்திடாமல் அதன் குரல்வளையை நெரிப்பதன் மூலம் அதன் வளர்ச்சித்திட்டங்களை நாசம் செய்திடத் தீர்மானித்திருப்பதுபோல் தோன்றுகிறது.

மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையேயான உறவுகள் சமச்சீரற்ற விதத் தில் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. மத்திய அரசாங்கம், வளங்களைப் பெருக்குவதற்குத் தேவையான முக்கியமான பெரிய அதிகாரங் கள் அனைத்தையும் தன்வசப்படுத்திக் கொண்டுள்ள அதே சமயத்தில், மாநில அரசாங் கங்கள் தங்களுக்கு வரக்கூடிய வருவாயைக் காட்டிலும் அதிக அளவில் வளர்ச்சித் திட்டங்க ளுக்கும், சமூக நலத் திட்டங்களுக்கும் செலவு செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றன. இவை, அனைத்து மாநில அரசுகளுக்கும் இருக்கக்கூடிய பொதுவான பிரச்சனை என்ற போதிலும், கேரளாவிற்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய வரிகள் மற்றும் வளங்கள் பங்கீடு களை அளிக்க மறுப்பதன் மூலம் அதனைத் தனிமைப்படுத்தி  விதிவிலக்கான முறையில் நடத்திக் கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக சில எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.

ஜிஎஸ்டி இழப்பீடு  இழுத்தடிப்பு - குறைப்பு

மத்திய அரசாங்கம், 2019-20ஆம் ஆண்டின் கடைசி காலாண்டிற்கு அளிக்க வேண்டிய நிதியின் அளவைக் குறைத்திருக்கி றது. பட்ஜெட் ஒதுக்கீட்டின்படி, கேரளாவிற்கு அளிக்கப்பட வேண்டிய கடன் தொகை என்பது 10,233 கோடி ரூபாயாகும். ஆனால் வெறும் 1,900 கோடி ரூபாய்தான் வழங்கியிருக்கிறது. சென்ற நிதியாண்டில் 19,500 கோடி ரூபாய் அளித்துள்ளதற்கு மாறாக இந்த ஆண்டு வெறும் 16,602 கோடி ரூபாய்தான் அளித்தி டும். 2018-19இன் கடைசி காலாண்டில் 3200 கோடி ரூபாய் பெற்றுள்ள நிலையில், இந்த 2019-20 கடைசிக் காலாண்டில் 1,920 கோடி ரூபாய் மட்டுமே பெற்றிடும்.

ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகைகளை அளிப்பதிலும் தொடர்ந்து தாமதம் செய்து வரு கிறது. டிசம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி இழப் பீட்டுத் தொகை இன்னமும் பெறப்படவில்லை. இத்தொகை 1,600 கோடி ரூபாய் என மதிப்பிடப் பட்டிருக்கிறது. கேரளா, 2018-19இன் கடைசி மூன்று மாதங்களில் 6,866 கோடி ரூபாய்  பெற்றிருந்தது. எனினும், இதே காலகட்டத் திற்கு இந்த ஆண்டில் வெறும் 4,524 கோடி ரூபாய்தான் பெறப்படும் என மதிப்பிடப்பட்டி ருக்கிறது.

பேரிடர் நிவாரண நிதி வழங்கவில்லை

2019 ஆகஸ்டில் கேரளம் கடும் வெள்ளப் பாதிப்புக்கு ஆளானது. இருந்தபோதிலும், மத்திய அரசு இதர ஏழு மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதி இழப்பீடு அளித்திருக்கக்கூடிய அதே சமயத்தில் கேரளாவிற்கு எவ்வித வெள்ள நிவாரண இழப்பீட்டுத்தொகையும் அளித்திடாதது அதிர்ச்சியளிக்கிறது. மேலும், 2019இல் தென்மேற்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக, தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஏழு மாநிலங்களுக்கு 5,908.56 கோடி ரூபாய் கூடுதல் மத்திய உதவியாக அளிக்கப்பட்டிருக்கக்கூடிய அதே சமயத்தில், கேரளாவிற்கு எதுவும் இல்லை. மகாத்மா காந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தினை அமலாக்குவதில் கேரளம், மிகச்சிறந்தமுறை யில் செயல்படும் மாநிலங்களில் ஒன்றாகும். எனினும், மத்திய அரசு இதற்கான தொகையை  கேரளத்திற்கு அனுப்புவதில் மிகவும் மெத்தனமாக இருக்கிறது. இதுவரையிலும் 1,215 கோடி ரூபாய் நிலுவை வைத்திருக்கிறது. 

பட்ஜெட்டில் நிதிகுறைப்பு

நெல் கொள்முதலுக்கு அளிக்க வேண்டிய தொகையிலும்கூட 1,035 கோடி ரூபாய் பாக்கி வைத்திருக்கிறது. 2020-21இல் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டி லும் கேரளம் புறக்கணிக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. 14ஆவது நிதி ஆணையம் மொத்த வரி வருவாயில் கேர ளத்திற்கு 2.5 சதவீதம் பரிந்துரைத்திருந்தது. ஆனால் இப்போது 2020-21க்கான 15ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரையா னது அதனை 1.94 சதவீதமாகக் குறைத்தி ருக்கிறது.  ஆணையம் பரிந்துரைத்துள்ள தொகையான 16,616 கோடி ரூபாயும்கூட பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மத்திய வரியில் மாநிலத்தின் பங்காக, 2019-20இல் கேரளம் 16,401 கோடி ரூபாய் பெற்றது. ஆனால் அது இப்போது 15,236.6 கோடி ரூபாயாக முன்மொழியப்பட்டிருக்கி றது. வருவாய் பற்றாக்குறை மானியத்திற்கான (revenue deficit grant) ஒதுக்கீடு நடப்பு ஆண்டின் ஒதுக்கீட்டைவிடக் குறைவாக இருக்கிறது. 

15ஆவது நிதி ஆணையம், அனைத்து மாநிலங்களுக்கும் வருவாய் பற்றாக்குறை மானியமாக 74,340 கோடி ரூபாய் பரிந்துரைத்திருக்கிறது. ஆனால், பட்ஜெட்டில் 30 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது கேரளாவைக் கடுமையாகப் பாதிக்கும்.    கூட்டுறவு கூட்டாட்சித்தத்துவம் (Cooper ative federalism) குறித்து வாய்கிழியப் பேசும் மோடி அரசாங்கத்தின் போலித்தனம், அது கேரளாவைக் கையாளும் விதத்திலி ருந்து நன்கு தெரிகிறது.  இவ்வாறு மோடி அரசாங்கமானது கூட்டாட்சித் தத்துவத்தின் நெறி முறைகளை மீறிக் கொண்டிருக்கிறது.  இவ்வாறு கேரள மாநிலத்தை சிறுமைப்படுத்திட மோடி அரசாங்கம் எடுத்திடும் முயற்சிகளை கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கமும், கேரள மக்களும் அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் உரிமை களை நிலைநாட்டுவதற்கான போராட்டங்க ளை நடத்துவார்கள்.

பிப்ரவரி 5, 2020
 தமிழில்:ச.வீரமணி

 

;