செவ்வாய், அக்டோபர் 27, 2020

தலையங்கம்

img

மோடி அரசின் தொடர் படையெடுப்பு...

இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு இடையூறு செய்யும் வகையில் இந்தி மொழி திணிப்பில்மோடி அரசு முனைப்புக் காட்டி வருகிறது. புதியகல்விக் கொள்கை என்ற பெயரில் சமஸ்கிருத மற்றும் இந்தி மொழி திணிப்புக்கு வழி வகுக்கும்மத்திய அரசு ஒவ்வொரு நாளும் அனைத்துத் துறைகளிலும் மூர்க்கத்தனமாக இந்தி மொழி திணிப்பில் ஈடுபட்டுள்ளது. ரயில்வே சம்பந்தப்பட்ட குறுந்தகவல்கள் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கும் இந்தி மொழியில் மட்டுமே அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் முன்பதிவு நிலவரம் உட்பட எந்தவிபரத்தையும் அறிந்து கொள்ள முடியாத நிலைக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே அறிந்த பயணிகள் தள்ளப்படுகின்றனர். 

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களிலும் இந்தித் திணிப்பு தீவிரமடைந்துள்ளது. நேசஷன் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் தன்னுடைய பாலிசிதாரர்களுக்கு நினைவூட்டல் கடிதங்களை அதில்இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அந்நிறுவனத்தின் தலைவருக்கு கடிதம் எழுதி கவனப்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் நடைபெறும் அகழ்வாய்வு பணிகளிலிருந்து தன்னை மத்திய அரசின் அகழ்வாய்வு துறை முற்றிலுமாக விளக்கிக் கொண்டது.ஆனால் மாநில அகழ்வாய்வுத் துறையின் மூலம் நடைபெற்று வரும் பணியின் மூலம் ஏராளமான தொன்மச் சான்றுகள் கிடைத்து வருகின்றன. முற்றிலும் ஓரவஞ்சனை போக்குடன் தான் தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகளில் மோடி அரசுநடந்து கொள்கிறது.இந்திய பண்பாடு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் தெற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களோ பெண்களோ, சிறுபான்மையினரோ, தலித்துகளோ இடம்பெறவில்லை. இந்தக் குழுவை முற்றாக கலைத்துவிட்டு இந்தியாவின் பன்முக வரலாற்றை எழுதும்வகையில் புதிய குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்க மறுக்கிறது.

அடுத்தடுத்து பன்முக பண்பாடு மற்றும் மொழி சமத்துவத்தின் மீது தொடர் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில் மத்திய அரசின் சார்பில்தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான அறிவிக்கையில் உலகின் செம்மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறது. தமிழகத்தில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்வுகள் இந்திய வரலாற்றை திருத்தி எழுதும் நிர்ப்பந்தத்தை உருவாக்கியுள்ள நிலையில் திட்டமிட்டே இந்த வேலை நடந்துள்ளது.தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான அறிவிக்கையில் தமிழ் மொழி பயின்றவர்களும் பயன்பெறும் வகையிலும் தமிழும் சேர்க்கப்பட வேண்டும். மத்திய அரசு சமஸ்கிருத மற்றும் இந்திமொழி திணிப்பை கைவிட்டு அனைத்து மொழிகளும் செழித்து வளர சம வாய்ப்பை வழங்கும் கொள்கையை பின்பற்ற வேண்டும்.
 

;