செவ்வாய், செப்டம்பர் 29, 2020

தலையங்கம்

img

பாசிசத்தின் பயணம்....

கோவிட் 19 பெருந்தொற்று - மேலும் ஆழமாகியுள்ள பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின்பின்னணியில், எந்தத் தீர்வும் காண்பதற்கு திராணியில்லாத - கடவுளின் மீது பாரத்தைப் போட்டுள்ள - நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு,அரை மனதோடு இன்று (செப்டம்பர் 14) நாடாளுமன்றத்தைச் சந்திக்கிறது. 

கொரோனா சோதனைகள் முழுவீச்சில் நடத்தப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டு, கூட்டத்தொடர் துவங்குகிறது. இக்கூட்டத்தொடரில் முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் பிரச்சனைகள் எழுப்பப்படும் என்று தெரிந்தே, கேள்வி நேரம் உட்பட அனைத்தையும் ரத்து செய்து, ஒரு சம்பிரதாயக் கூட்டமாக நடத்தி முடிப்பதில் மோடி அரசு முனைப்புடன் உள்ளது. வழக்கமாக நாடாளுமன்றம் கூடுவதற்கு முந்தைய நாள் நடத்தப்படும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தையும் கூட கூட்டுவதற்கு அரசு மறுத்திருக்கிறது. இது கடும் கண்டனஅலைகளை எழுப்பியிருக்கிறது. இத்தகையப்பின்னணியில்தான் தில்லியில் ஞாயிறன்று (செப்டம்பர் 13) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிநாடாளுமன்றக் குழு சார்பில் பத்திரிகை யாளர்கள் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது.

நாடு முழுவதும் கோவிட் 19 தொற்று பரவலும் மரணமும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், எந்தத் தீர்வும் காணாமல் முற்றாகத் தோல்வியடைந்திருக்கிற மோடி அரசை நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்துவோம் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் எளமரம் கரீம் கூறியிருக்கிறார். வாழ்விழந்த கோடானு கோடி மக்களுக்கு வாழ்வாதாரமாக ரூ.7500 நிவாரணம் தாருங்கள் என்றும் உணவுக்கிடங்குகளில் எலிகளுக்கு இரையாகிக் கொண்டிருக்கும் தானியங்களை மக்களுக்கு தாராளமாகவிநியோகம் செய்யுங்கள் என்றும் நாடு முழுவதும்இடதுசாரி இயக்கங்களும் தொழிற்சங்கங்களும் கடந்த 5 மாத காலத்தில் எண்ணற்ற போராட்டங் களை நடத்தியும் மோடி அரசு உச்சக்கட்ட அலட்சியத்தில் இருக்கிறது. 

மிகப்பெரிய சுகாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்குப் பதிலாக, அதனால் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியை தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாக,இந்த நெருக்கடிகளை மோடி அரசு தனது கூட்டுக்களவாணிகளான பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் முன்னெப்போதையும் விட அதிகமாக சொத்துக்களையும், மூலதனங்களையும் குவிப்பதற்கான வாய்ப்புமிக்க நெருக்கடியாக மாற்றியிருக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி  (ஜிடிபி) மைனஸ் 23.9 சதவீதம் என்ற மிக மோசமான நிலையை எட்டியுள்ள போதிலும் அதிலிருந்து மீள்வதற்கு மோடி அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. மாறாக, இத்தகைய தோல்விகளை எல்லாம் சுட்டிக்காட்டி குரல் எழுப்புகிற மக்கள் மீது அடக்குமுறை களை கட்டவிழ்த்துவிடுகிறது. அதன் ஒரு 
பகுதியாகவே, மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் மீது குற்றவியல் வழக்கு புனைந்துள்ளது. தில்லியில் ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்திற்கு யெச்சூரிபோன்ற தலைவர்கள்தான் காரணம் என்று சித்தரித்துள்ளது.நவீன பாசிசம் இப்படித்தான் பயணிக்கும். 

;