தலையங்கம்

img

நீதித்துறையின்  மாண்பு எங்கே?

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய குளறுபடிகள் தற்செயலானவை அல்ல. இது ஒரு திட்டமிட்ட அரசியல் செயல்பாடாகவே தோன்றுகிறது. நீதிமன்றத்தை கைப்பற்ற அரசுக்கு ஆதரவான நீதிபதிகளை கண்டெடுத்து நியமிக்க வேண்டிய அவசியமில்லை. அரசிற்கு ஆதரவான ஒரு தலைமை நீதிபதியோ அல்லது குறிப்பிட்ட சில நீதிபதிகளோ அரசிற்கு தேவையானதை செய்து விட முடியும். இதுதான் இந்தியாவில் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது என்று தில்லி உயர்நீதிமன்றத்தின்  தலைமை நீதிபதியாக  இருந்து ஓய்வு பெற்ற ஏ.பி. ஷா தெரிவித்திருக்கிறார். நீதித்துறையின் இன்றைய போக்கை வெளிப்படையாக அம்பலப்படுத்தி விட்டார். 

உச்சநீதிமன்றம் இப்போதாவது நீதித்துறையின் செயல்பாட்டை சுயபரிசோதனை செய்து கொள்ள முன்வர வேண்டும். மாறாக, அவதூறு சட்டம் என்ற அச்சுறுத்தலைக் கொண்டு உண்மையை மறைக்க முயலக்கூடாது. காரணம், ஏற்கனவே நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு இருந்தநம்பிக்கை பாஜக தலைமையிலான மோடி அரசுவந்த பின்னர் படிப்படியாக  சிதைக்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகள் சதாசிவம் விசாரித்த, அமித்ஷா வழக்கும், ரஞ்சன்கோகோய் விசாரித்த அயோத்தி, ரஃபேல், சி.பி.ஐ. இயக்குநர் டிஸ்மிஸ் வழக்குகளும் அவற்றின் தீர்ப்புகளும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகின.

சாதாரணமாக கிராம பஞ்சாயத்தில் கூடபிராது கொடுத்தவர்  மற்றும் அவரது உறவினர்வீடுகளில் பஞ்சாயத்தார் கை நனைக்க மாட்டார்கள் என்று சொல்வதுண்டு. காரணம் தீர்ப்பு ஒரு சார்பாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக. ஆனால் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் எஸ்.ஏ. பாப்டே பாஜக பிரமுகரின் ஹார்லி டேவிட்சன் பைக்கில் அமர்ந்து போஸ் கொடுக்கிறார்.பாஜகவினர்  மீது இல்லாத வழக்கு ஏதாவது இருக்கிறதா? அப்படியென்றால் எப்படி உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புகள் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்.

உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்“அரசை எதிர்ப்பதை ‘தேச துரோகம்’ என்றும் ‘ஜனநாயக எதிர்ப்பு’ என்றும் முத்திரை குத்துவது அரசமைப்பு சட்டத்தின் விழுமியங்கள் மற்றும் சுதந்திரம் மிக்க ஜனநாயகம் ஆகியவற்றை பாதுகாக்கும்நோக்கங்களின் இதயத்தின் மீதான தாக்குதல்” எனக் குறிப்பிடுகிறார்.  ஆனால் மறுபுறம், மக்கள்நலனுக்காகப் போராடி வரும்  சமூக செயற்பாட்டாளர்கள்  சுதா பரத்வாஜ், கௌதம் நவ்லக்கா,வரவரா ராவ், ஆனந்த் டெல்டும்டே  உள்ளிட்டோர்குறி வைத்து முடக்கப்படுகின்றனர். இவர்களின் கைதுக்கு நீதித் துறை துணை நிற்கிறது. சிஏஏவுக்குஎதிரான போராட்டத்தில் முன்வரிசையில் இருந்தசீத்தாராம் யெச்சூரி, பேரா.ஜெயதி கோஷ் உள்ளிட்டவர்கள் மீது சதி வழக்கு பதியப்படுகிறது.

அடுத்த இலக்காக மோடி அரசு தற்போதுஇந்திய அரசியல் சாசனத்தை மீறி நாடாளுமன்ற ஜனநாயகத்தை அப்பட்டமாக  சிதைக்கிறது. ஆட்சி, நிர்வாகத்தின் நேர்மை கேள்விக்குள்ளாகும்போது நீதியை நாட்ட வேண்டியது நீதித்துறையின் கடமை. ஆனால் நீதிமன்றங்கள் உரிமைகளுக்கான மன்றமாக இல்லாமல் நிர்வாகத்திற்கான மன்றங்களாக மாறி வருவதுஇந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சாபக்கேடு.

;