வெள்ளி, செப்டம்பர் 25, 2020

தலையங்கம்

img

தமிழக கல்வித்துறையை என்ன செய்யப் போகிறீர்கள்?

தமிழக அரசுப் பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் நீதி போதனை வகுப்பும், மாதத்திற்கு ஒரு முறை தற்காப்பு கலை வகுப்புகளுக்கும் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பொதுவாக இந்த அறிவிப்பு வரவேற்கத் தக்கது என்றாலும் தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் சமீபத்திய பல்வேறு அறிவிப்புகளோடு இணைத்துப் பார்க்கும் போது பலத்த சந்தேகம் எழுகிறது. 

அரசுப் பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு என்பது நீண்டகாலமாக இருந்து வரும்ஒன்று தான்.  தற்காப்புக் கலை கற்றுத்தரப்படுவதும் நல்ல  விசயம்தான். ஆனால் இவற்றை நடத்தப் போவது யார் என்பதுதான் கேள்விக்குறி.  தனியார் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் அரசுப் பள்ளிகளில் பாடம் நடத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று கடந்த வாரம் அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பை அரசுப் பள்ளிகளுக்குள் ஊடுருவ  அனுமதிக்கும் அறிவிப்பாகவே இது பார்க்கப் பட்டது. 

ஏனெனில் தேசிய கல்விக் கொள்கை வரைவில் தனியார் தொண்டு நிறுவனங்களை அனுமதிப்பது குறித்து கூறப்பட்டுள்ளது. அந்த ஆலோசனையைத்தான் தமிழக அதிமுக அரசு வழிமொழிகிறது.

தேசிய கல்விக் கொள்கை வரைவு இந்தியக் கல்வித்துறையை முற்றாக காவிமயமாக்கவும், கார்ப்பரேட்மயமாக்கவும் வகை செய்கிறது. அந்தக் கொள்கை விவாதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால், அதில் கூறப் பட்டுள்ள ஒவ்வொரு யோசனையையும் அதிமுக அரசு நடைமுறைப்படுத்தத் துவங்கிவிட்டது. 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு கடும்  எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத் கீதை பயிற்று விக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு கடும்  சர்ச்சை எழுந்த நிலையில், அது விருப்பப் பாடம்தான் என்று சமாளித்தார்கள்.  இப்போது அரசுப்பள்ளிகளில் நீதிபோதனை மற்றும் தற்காப்புக் கலை என்ற பெயரில் பள்ளிக் கூடங்களை ஆர்எஸ்எஸ் பயிற்சிக் கூடங்களாக மாற்ற திட்டமிட்டுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பொறுத்தவரை நீதி போதனை என்பது சாதிய கட்டமைப்பை நியாயப்படுத்துவதும் பெண்களை இழிவுபடுத்துவதும் புராணக் குப்பை களை புனிதப்படுத்துவதும்தான். இந்தப்பணியில் தனியார் தொண்டு நிறுவனம் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் அமைப்பை அனுமதித்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி யிருக்கும்.

சமயச் சார்பற்ற நெறிகளையும் சமத்துவத்தை  போதிக்கும் நீதி நெறிகளையும் ஆசிரியர்களைக் கொண்டே நடத்த வேண்டும். இதில் ஆர்எஸ்எஸ் புகுந்து விளையாட மாநில அரசு வழிவகுக்கு மானால் கல்வித்துறை முற்றாக அழிந்துவிடும் ஆபத்து உள்ளது.

;