புதன், அக்டோபர் 21, 2020

தலையங்கம்

img

காஷ்மீர்: பாதுகாப்புப்படையினரின் கட்டுப்பாட்டிற்கு முடிவுக்குக் கொண்டுவருக

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை, ஆகஸ்டு 5ஆம் தேதி முதல், பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காஷ்மீர் மக்களிடமிருந்து அடிப்படை உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு அவர்கள் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். அவர்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே அடைக்கப் பட்டிருக்கிறார்கள்.  செல்பேசி, தரைவழித் தொலை பேசி, இணையத்தின் மூலம் தொடர்பு கொள்ளுதல் என எவ்விதமான தகவல் தொடர்பும் அவர்களுக்குக் கிடையாது.   பிரதான சாலைகள் அனைத்திலும் பாதுகாப்புப் படையினரின் தடுப்பரண்கள் வைக்கப்பட்டிருப்பதாலும், பொதுப் போக்குவரத்து இல்லாததாலும் மக்கள் தங்கள் இல்லங்களிலிருந்து எங்கும் செல்வதற்கான உரிமை பறிக்கப்பட்டவர்களாக இருந்து வருகிறார்கள்.

அரசு ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு வரமுடியாத சூழ்நிலை இருப்பதால் அரசு அலுவலகங்கள் செயல்படாமல் இருந்து வருகின்றன. செய்தித்தாள்களும் முழுமையான செய்திகளுடன் தங்கள் பதிப்புகளை வெளியிட முடியவில்லை. தகவல் தொடர்பு சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் ஊடகவியலாளர்களால் தங்கள் செய்தி நிறுவனங்களுக்கு முறையாக செய்திகளை அனுப்ப முடியாததே இதற்குக் காரணமாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, மாநிலத்தில் இயங்கி வந்த அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தடுப்புக்காவலில் தொடர்ந்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அனைத்து ஹரியத் இயக்கத் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். காஷ்மீர் பள்ளத்தாக்கின் உண்மை நிலைமைகள் குறித்து எவரேனும் வாய்திறந்தால் அவரும் தடுப்புக் காவலில் வைக்கப்படுகிறார். மக்களுக்கு மருத்துவ சேவை செய்திட மருந்துகள் கிடைக்கவில்லை என்று ஒரு மருத்துவர் தன் கவலையைத் தெரிவித்தபோது அவரும் இவ்வாறு தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டிருக்கிறார். கடந்த 30 நாட்களில் கொடூரமான, பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 250க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்தப் பட்டிருக்கின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாக அரசாங்கத்தின் தரப்பில் கூறப்படுகிறது. எனினும் எதார்த்த நிலையில் எவ்வித வேறுபாடும் இல்லை. தரைவழித் தொலைபேசி இணைப்புகள் சரிசெய்யப்பட்டு விட்டன என்று அதிகாரிகள் கூறிவந்தபோதிலும், மாநிலத்தின் பல இடங்களில் அவை வேலை செய்யவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு பத்தாம் வகுப்புவரையிலும் உள்ள  பள்ளிக்கூடங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுவிட்டன என்று அரசுத்தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனாலும், மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு வருவது என்பது அநேகமாக இல்லை. இதற்குக் காரணம், பள்ளிகளுக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்பிடப் பெற்றோர் தயாராக இல்லை, அல்லது, பள்ளிகளிடமிருந்து முறையான அழைப்பை மொபைல்கள் மூலமோ அல்லது குறுஞ்செய்தி வழியாகவோ பெற முடியவில்லை.

மக்கள் தங்கள் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவ மனைகளுக்கும் செல்ல முடியவில்லை. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தபின், கடந்த ஒரு மாத காலத்தில் ஆயுஷ்மேன் பாரத் தேசிய சுகாதார இன்சூரன்ஸ் திட்டத்தின்கீழ் ஒருவர் கூட பயன்பெறவில்லை என்று அரசாங்கத்தின் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையிலிருந்தே இது தொடர்பாக மக்களுக்கு இருந்துவரும் பரிதாப நிலையை நன்கு தெரிந்துகொள்ள முடியும். எகனாமிக் டைம்ஸ் நாளேட்டில் ஆகஸ்ட் 29 அன்று வெளியான ஒரு செய்தியின்படி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 14 லட்சம் இ-கார்டுகள் விநியோகிக்கப்பட்டிருக்கின்றன என்றும், இதில் ஆகஸ்ட் 5 வரை 22 ஆயிரம் பேர் மருத்துவ சிகிச்சை பெற்றிருக்கின்றனர் என்றும் தெரியவருகிறது. எனினும், மாநிலம், பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டபின்னர், மூன்று வாரங்களில், இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொண்ட நோயாளிகள் எண்ணிக்கை என்பது “அநேகமாக பூஜ்யம்” ஆகக் குறைந்துவிட்டது.

இப்போது அம்மாநிலத்தில் புதியதொரு போக்கு உருவாகி இருக்கிறது. வீடுகளிலிருந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, இழுத்துச் செல்லப்படுகிறார்கள். அவர்கள் ஏன் கைது செய்யப்படுகிறார்கள் என்பதற்கான காரணம் எதையும் அவருடைய குடும்பத்தினருக்குக் கூறுவதில்லை. பின்னர் அவ்வாறு கைது செய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்டவர்களை எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதும் தெரிவிக்கப்படுவதில்லை. இது, குடும்பத்தினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர், சௌராவில் நடைபெற்றதுபோன்று கிளர்ச்சிகள் எங்கேனும் நடைபெற்றால், அவை மிகவும் கொடூரமானமுறையில் பெல்லட் குண்டுகள் பயன்படுத்தி நசுக்கப்படுகின்றன. அரசுத் தரப்பில் மூடி மறைத்த போதிலும், பெல்லட் குண்டுகளால் காயம் அடைந்த இளைஞர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைகள் பெற்றுவருவது ஊடகங்களில் செய்திகளாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறு காயங்களினால் ஏற்பட்ட முதல் மரணம் குறித்து செப்டம்பர் 3 அன்று பிடிஐ செய்தி நிறுவனத்தால் செய்தி வெளியிடப் பட்டிருக்கிறது. சௌராவில் நடைபெற்ற சம்பவத்தில் காயங்கள் அடைந்த அஸ்ரார் அகமது கான் என்பவர் ஆகஸ்ட் 6 அன்று மரணம் அடைந்தார்.  

காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் குடிமக்களைப் பொறுத்தவரைக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 19 மற்றும் 21ஆவது பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு வழங்கப்படாமல் நசுக்கப் பட்டிருக்கின்றன.    இதில் நம்மை மிகவும் சங்கடத்திற் குள்ளாக்கும் விஷயம் என்னவென்றால், ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களின் உரிமைகளைப் பாதுகாத்திடத் தலையிடுவது தன் வேலையல்ல என்கிற முறையில் உச்சநீதிமன்றம் நினைத்துக் கொண்டிருப்பதாகும். இது தொடர்பாக எண்ணற்ற மனுக்கள் அதனிடம் தாக்கல் செய்யப்பட்டிருந்தபோதிலும் அவற்றின்மீது உரிய நடவடிக்கைகள் எதுவும் உச்சநீதிமன்றத்தால் இதுவரை எடுக்கப்படவில்லை.

ஒவ்வொருநாள் கடக்கும்போதும், காஷ்மீர் மக்களின் மீதான ஒடுக்குமுறைகளும், அவர்கள் காவலில் அடைத்து வைக்கப்பட்டிருத்தலும்,  நம் ஜனநாயகம் என்பது எந்த அளவிற்கு அடிப்படை ஏதும் இல்லாத வெறுமையான ஒன்று என்பதை வெட்டவெளிச்சமாக்கிக் கொண்டிருக்கிறது.   காஷ்மீரில் இன்று நடைபெற்றுள்ள நிகழ்வுகள், இந்துத்துவா எதேச்சாதிகாரத்தின் கீழ் நாட்டின் இதர பகுதிகளில் நாளை நடக்கும் என்பதற்கான பயங்கர எச்சரிக்கையாகும்.

ஜனநாயகம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான இக்கொடூரமான தாக்குதல் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். காஷ்மீர் மக்கள் பாதுகாப்புப் படையினரின்   காவல் அடைப்பின்கீழ் வைக்கப்பட்டிருத்தல் உடனடியாக நீக்கப்பட வேண்டும். தகவல் தொடர்பு சாதனங்கள் மீண்டும் இயக்கப்பட வேண்டும். பொதுப் போக்குவரத்து மற்றும் பொது சேவைகள் மீளவும் இயக்கப்பட வேண்டும். அனைத்து அரசியல் மற்றும் அனைத்து சமூக இயக்கங்களின் தலைவர்களும், முன்னணி ஊழியர்களும் நிபந்தனை எதுவுமின்றி விடுவிக்கப்பட வேண்டும்.

(செப்டம்பர் 4, 2019)

(தமிழில்: ச. வீரமணி)

;